SHIRDI LIVE DARSHAN

Sunday 29 January 2012

ஆழ்நிலை தியானம்


ஆழ்நிலை தியானம்

இன்று அமெரிக்காவில் நன்றி சொல்லும் நாள் (Thanksgiving day). மற்ற நாட்களில் நன்றி சொல்லக்கூடாது என்றில்லை! அமெரிக்கர்கள் முதன் முதலாக ஐரோப்பாவிலிருந்து இங்கு வந்த போது தங்களுக்கு உதவியர்களை நினைவு கூறும் நாள்.

ஆழ்நிலை தியானத்தை எனக்கு அறிமுகப்படுத்தியதற்காக என் நண்பன் அன்பரசனுக்கு நான் அவசியம் நன்றி கூற வேண்டும். அவரிடம் பல முறை சொல்லியிருக்கிறேன். இந்த பதிவு மூலமாக திரும்பவும் நன்றி கூறுகிறேன். ஆழ்நிலை தியானத்துக்கும் கோடி நன்றி!.

பல வருடங்களுக்கு முன்னால் கல்லூரி பாடங்களில் தலையை பிய்த்து கொண்டிருந்த போது "ஒரு தியானத்தை பற்றி கேள்விப்பட்டேன். இன்று சாயந்தரம் போறேன், நீயும் வா" என்று அன்பரசன் கூப்பிட்டார். ஈகா தியேட்டரில் பக்கத்தில் உள்ள அமைதியான இடம் அது. மனதை சாந்தப் படுத்தும் இடம். அறிமுக வகுப்பு தொடங்குவதற்கு சிறிது நேரம் இருந்ததால், அங்கே இருந்த புகைப்படங்களை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம்.

ஒரு புகைப்படத்தில் சில மனிதர்கள் பறந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் உடம்பு தரையை விட்டு மேலே இருந்தது. அது பித்தலாட்டம் போல எனக்கு தோன்றியது. "இவனுங்க ஏதோ பிராடு போல தெரியுது, வா அன்பு நாம போயிரலாம்" என்று அன்பரசனிடம் சொன்னேன். அன்பரசன் சிரித்து கொண்டே "இவ்வளவு தூரம் வந்துட்டோம், என்னன்னு பார்த்துட்டு போயிடலாம்" என்று சொல்லி விட்டார்.

பதினைந்து நிமிடங்களில் அறிமுக வகுப்பு தொடங்கியது. வகுப்பில் பேசியவர் ரொம்பவும் தெளிவாக பேசினார். கொஞ்சமாக நம்பிக்கை வந்தது. அப்புறம் தனியாக ஒரு அறையில் கடவுள் படத்தின் முன்னே உட்கார்ந்து ஒரு மந்திரம் சொல்லிக் கொடுத்தார்கள். "வேறு யாருக்கும் இந்த மந்திரம் தெரிய கூடாது. தெரிந்தால் இந்த மந்திரத்துக்கு effect இருக்காது" என்று பயமுறுத்தினார்கள்.

முதல் முறை தியானம் செய்த போது மனது அலை பாய்ந்து கொண்டிருந்தது. சில நாட்களில் மனது கட்டுப்பட்டது. சில மாதங்களில் தியானம் செய்வது தன்னிச்சை செயலாக மாறிவிட்டது.

ஆழ்நிலை தியானத்தின் பயன்கள் பல, அவை ஒவ்வொன்றையும் இங்கே எழுதி போரடிக்க விரும்பவில்லை. http://www.tm.org/ என்ற ஒரு அருமையான தளம் ஆழ்நிலை தியானத்தை உருவாக்கியவர்களால் நடத்தப்படுகிறது. அங்கே எல்லா விபரங்களும் உள்ளன.

நம் புத்தர் தற்காப்பு கலைகளை சீனாவில் பரப்பியது போல மகரிஷி ஆழ்நிலை தியானத்தை உலகம் முழுதும் சொல்லிக் கொடுக்கிறார். பொதுவாகவே எனக்கு சாமியார்களின் மேல் வெறுப்பு உண்டு. அதனால் மகரிஷி மேல் எனக்கு எந்த பக்தியும் இல்லை. ஆனால் ஒரு நல்ல விஷயத்தை சொல்லிக் கொடுத்ததற்காக நான் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். என் அமெரிக்க நண்பர்கள் சிலர் ஆழ்நிலை தியானத்தின் மேல் தீவிர ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள். இங்கு கலிபோர்னியாவில் Palo Alto என்ற ஊரில் ஆழ்நிலை தியான மையம் உள்ளது. சென்னை அளவு இல்லாவிட்டாலும் அருமையாக பராமரிக்கிறார்கள்.

Iowa மாநிலத்தில் Fairfield என்ற ஒரு ஊரே ஆழ்நிலை தியானம் செய்து வருகிறது. நம் ஊர்களில் எல்லோரும் இந்த மாதிரி தியானம் செய்து வந்தால் ஜாதி மத போராட்டங்களுக்கு வேலையில்லாமல் போய்விடும்.

1 comment: