SHIRDI LIVE DARSHAN

Tuesday, 31 January 2012

ஆன்மா


அகந்தை விரிவடைந்தால் - வாழ்க்கை சுருங்கும்ஆன்மா மலர்ந்தால் - வாழ்க்கை விரிவடையும்

(சென்னை - பெரம்பூர் ரிஷி இல்லத் தியானமையத்தில் 30.1.2000 அன்று திருமதி.உஷா ராமதாஸ் நிகழ்த்திய உரை)
கர்வம், திமிர், ஆடம்பரம், ஆர்ப்பாட்டம், அலட்சியம் போன்ற குணங்களை நாம் அகங்காரம், ஆணவம், அகந்தை என்கிறோம். ஆன்மீக நோக்கில் இவை சரி என்றும், உடலுக்குட்பட்ட எந்த அம்சமும் அகந்தைக்குரியதாகக் கருதப்படும். ஆண்டவனும் இயற்கையும், அனந்தம்.அவை தவிர அனைத்தும் வரையறைக்குட்பட்டன. அவை எல்லாம் அகந்தையின் வாரிசுகள்.
எனக்குச் சப்பாத்தி பிடிக்கும் என்பது குணம். ஆனால் பிடிக்கும் என்றால், பிடிக்காது என்பது எழும். அவை நம் குணத்தை ஒரு அளவுக்குட்படுத்துவதால் ஆண்டவனைப் பிரதிபலிக்க முடியாது என்பதால் மறைமுகமாகக் குணம் அகந்தைக்குத் துணை செய்யும். அகந்தையைக் களைய முற்படும்பொழுது குணத்தைக் களைய வேண்டும். இந்நோக்கில் குணம் ஒரு வகையில் அகந்தையைச் சார்ந்ததாகும்.
உலகில் சர்வமும் பிரம்மம் என்பது சட்டம். நாம் மரம் என்பதை ரிஷி பிரம்மமாகக் காண்கிறார். பிரம்மம் தன் பகுதியை மரமாக நினைப்பதால் பிரம்மம் மரமாகிறது என்பது தத்துவம். அதே சட்டப்படி பிரம்மம் தன்னை அகந்தையாகக் காண்பதால் அகந்தை உற்பத்தியாயிற்று என்று நாம் கொள்ள வேண்டும்.
மனிதன் மனிதனாக இருக்கிறான். அவன் இஷ்டப்பட்டால் பிரம்மமாகலாம், அகந்தையாகலாம், எதுவுமாகலாம். அது ஆன்மீகச் சுதந்திரம்.சிறைப்பட்ட ஆன்மாஇருக்கும் நிலையிலிருந்து மாற முடியாது. விடுதலையடைந்த ஆன்மா தன்னை எதுவாகவும் மாற்றிக் கொள்ள முடியும். விடுதலை தருவது Self Awareness தன்னை அறிதலாகும். அகந்தை தான் அகந்தை என அறிவது அதனினின்று விடுதலை பெறுவதற்கு முதற்படி.தான் செய்த தவற்றை மனம் ஏற்காது. தவறு என அறிவு புரிந்து கொண்ட பின்னரும் அதை மனம் புறக்கணித்துப் பேசும். நாமுள்ள மனநிலையை விரும்பிப் பாராட்டுவது மனத்தின் போக்கு. நான் அகந்தை என அறிவது கடினம். புரிந்தபின் மனம் அதைவிட்டு மாறச் சம்மதிக்காது. தன் அகந்தை நிலையை விரும்பி ரசிப்பது மனித குணம்.
தன்னை அறிவது முதற்படியானால், அறிந்ததை ஏற்பது அடுத்த நிலை.
இரண்டையும் செய்த பின் அகந்தை ஒரு பிறவியில் அழியாது. ஞானம் வரும்.ஆனால் சித்திக்க அருள் வேண்டும். பல பிறவிகளிலும் அகந்தையின் முனை மழுங்குமே தவிர அகந்தை கரையாது. அகந்தை கரைந்தால் மனம் விசாலமடைந்து இறைவன் (Cosmic Self) தரிசனம் கிட்டும். அது பெரிய நிலை. தவத்தால் பெறுவது. கல்வியால் பெறமுடியாது. தவமுயற்சியால் மட்டும் கிட்டும். ஆன்மீகப் பலனை அருள் பெற்றுத் தரும் என்பது அன்னையின் உண்மை. மனிதன் தன் பங்கைச் செய்தபின் பாரத்தை அன்னையிடம் செலுத்தினால் பெருமுயற்சியால் பெற வேண்டியதை அருளால் உடனே பெறலாம். அதற்குரிய மார்க்கம் சமர்ப்பணமும், சரணாகதியுமாகும்.
நடைமுறையில் நாம் முன்னேற விரும்பினால், அகந்தையை வளர்க்கிறோம். கோபப்பட்டால்தான் காரியம் நடக்கும். கோபப்படுகிறோம். காரியம் நடக்கிறது. ஆன்மாசுருங்குகிறது. முடிவாக வாழ்வே சுருங்கும்.
பொதுவாக மனித முன்னேற்றம் என்பது அகந்தை வளர்வதாகும். சொத்து, பதவி, செல்வாக்கு, அறிவு வளர்வதை முன்னேற்றம் என்கிறோம். அது உண்மை. நடைமுறையில் அவற்றை நாம் நம் அகந்தையை வளர்க்கும் கருவியாகப் பயன்படுத்துவதால் அகந்தை விரிவடைகிறது, ஆன்மா சுருங்குகிறது.
அகந்தையே ஜீவாத்மா எனக் கருதுபவரும் உண்டு. பெரும்பாலும் ஆன்மீகச் சித்திகள் அகந்தையின் சித்திகள் என்கிறார் பகவான். அகந்தையின் வேர் மனதிலும் அதன் சிக்கல் உணர்விலுமிருப்பதாகக் கூறுகிறார்.
அகந்தையை அழிக்க வேண்டும் என மனிதன் பேசலாம். அகந்தையெனில் என்ன, அதை அழிப்பது என்றால் என்ன என்று விவரமாகத் தெரிந்த பின் "இது எனக்கு வேண்டும்'' என்பது வழக்கம். விவரம் தெரியாதவர்கள் விருப்பமாகப் பேசலாம். கீழ்க்கண்ட மனநிலைகளைப் பார்ப்போம்.
 1. நான் நல்லவன், நல்லவன் எனப் பெயர் வாங்கப் பிரியப்படுகிறேன்.
 2. பிறர்க்குதவி செய்வது நல்லது. அதுவே என் இலட்சியம்.
 3. மனிதனுக்கு இலட்சியம் தேவை.
 4. எதிரி தவறானாலும் அவனையும் ஆதரிக்கும் எண்ணம் எனக்குண்டு.
 5. நாட்டுக்காக வாழ்வதே என் வாழ்வு.
 6. நண்பன் எனில் அவன் மடையனானாலும் நான் அவனைப் புறக்கணிக்க மாட்டேன்.
 7. கண்ணுக்குத் தெரிந்ததையே நம்புவேன் (empiricism) மற்றதை நம்புவது மூட நம்பிக்கை.
என்பவை நல்ல குணங்கள், உயர்ந்த நோக்கங்கள். இன்று நல்லவர்கள் எனப்படுபவர் தங்கள் அகங்காரத்தை வளர்க்க இவற்றைப் பயன்படுத்துவதால் முடிவாக வளர்வது அகந்தையே. எதிரியிடம் உஷாராக இருக்கலாம். நண்பனை நம்புகிறோம். நண்பனுக்குத் துரோக மனப்பான்மை வந்துவிட்டால் நண்பன் என்பதால் நாம் சந்தேகப்படாததால் நண்பனுடைய துரோகத்திற்குப் பலியாகிறோம்.
நாம் அகந்தையை அழிக்க முற்பட்டால் நானே "அதைச் செய்கிறேன்' என அகந்தை முன் வந்து ஏற்றுக் கொள்கிறது. அதனால் நாம் ஏமாந்து போகிறோம். அகந்தையை அழிக்க நாம் முற்படும்பொழுது நாம் நம்மையறியாமல் அகந்தையை வலுப்படுத்துகிறோம். காலம் காலமாக நம்மை அகந்தை இதுபோல் ஏமாற்றுகிறது என்பது ஆன்மீக வரலாறு.
இதற்கு என்ன வழி? ஸ்ரீ அரவிந்தம் ஒரு வழியைக் காட்டுகிறது. நம்முடைய பெரு முயற்சி தோல்வியடைந்தால் நாமே சரியில்லை எனப் பொருள் என்பதால், நம்மை நம்புவதைவிட அன்னைக்குச் சரணம் செய்து அன்னையை நம்புவது வழிவிடும் என்பது ஸ்ரீ அரவிந்த சித்தாந்தமாகும். நமக்கு வழி புலப்படாத பொழுது அன்னை கொடுப்பதை மட்டும் ஏற்கும் மனப்பான்மை சரணாகதியாகும். இது கடினம் என்கிறார் பகவான்.
சரணாகதியை ஏற்றால் அகந்தை அழியும்.
அதை நம்மால் உளமார ஏற்க முடிவதில்லை. நமக்கு (unconscious) நம்மை அறியாமல் அகந்தை வாழ்வில் முழு ஈடுபாடுண்டு. அது பொய்யான வாழ்வு. அபிப்பிராயத்தை விடமுடியவில்லை (opinion), நோக்கத்தை (attitude, motive) மாற்ற முடியவில்லை என்று நாம் அகந்தையைப் பற்றிக் கொள்கிறோம். அன்னையை மட்டும் ஏற்பதானால்,
 • நம் அபிப்பிராயங்களை விட்டுக் கொடுக்க வேண்டும்.
 • நம் நோக்கங்களைக் கைவிட வேண்டும்.
 • அன்னையை அடைவதை மட்டும் நோக்கமாக ஏற்க வேண்டும்.
 • அகந்தையின் எல்லாப் பேதங்களையும் தவிர்க்க வேண்டும்.
 • அதன் மூலவேர் சிந்தனையிலிருப்பதால் சிந்திப்பதை நிறுத்தவேண்டும்.
 • அதன் சிக்கல் ஆசையிலிருப்பதால் ஆசையை அகற்ற வேண்டும்.
சரணாகதி எனில் நாம் என்பது எந்த உருவத்திலுமிருக்க முடியாது. என் தகப்பனார் பேச்சைக் கேட்டால் தவறு வருகிறது எனில், அகந்தை, சமர்ப்பணம் என்னாவது? என்னால் தகப்பனார் பேச்சைத் தட்ட முடியாது என்பது எவ்வளவு உயர்ந்ததானாலும் காரியம் கெட்டுப் போகிறது என்றபொழுது மனம் பல வகைகளிலும் செயல்படுகிறது. ஏராளமான பணம் செலவு செய்து கிடைக்கும் பெரிய அட்மிஷன் எனக்குத் தகுதிக்குக் கிடைத்த பொழுது, தகப்பனார் அதில் சேர வேண்டாம் எனில் நான் செய்யக் கூடியது என்ன? அகந்தை எப்படி வருகிறது? சமர்ப்பணமும், சரணாகதியும் என்ன செய்யும்?
ஒரு பையன் தகப்பனார் பேச்சைக் கேட்க முடிவு செய்தால் அவனுக்கு இந்த இக்கட்டான கட்டம் வாராது. தனக்கு சௌகரியமான சமயத்தில் மட்டும் கேட்பது என்பவனுக்கே இது வரும்.பையன் மனம் உண்மையாக இருந்தால் அவன் யோகப் பாதையில் உயர்ந்து வரும் பொழுதுதான் இந்நிலை எழும். அப்பொழுது தன் மனத்தை ஆராய்ந்து பார்த்தால் "நான் தகப்பன் சொல்லைத் தட்டமாட்டேன்'' என்ற உருவில் அகந்தையிருக்கும்.அதைக் கண்டு மனம் மாறிய அதே நேரம் பையனைத் தகப்பனும் 'உன் இஷ்டப்படி சேர்ந்துகொள்' என்பார். அன்பர்கள் வாழ்வில் அநேகமுறை நாம் கண்ட உண்மை அனுபவம் இது.
எனக்கு அன்னை வேண்டும், அன்னை மட்டும் வேண்டும், அன்னை மூலம் வருவதுமட்டும் போதும் என்ற நிலை சரணாகதிக்குரிய நிலை. அவர்கட்கு மேற்சொன்ன இக்கட்டான நிலை ஒரேயொருமுறையும் எழுந்ததில்லை. மனம் ஏதாவது ஒருவகையில்
 • மகள் கேட்பது சரியில்லை. இல்லை என்றுகூட என்னால் சொல்ல முடியாது.
 • அதிகாரி கோபமாக இருக்கிறார் அவரை மறுத்துச் செயல்பட முடியாது.
 • இந்த விலையை குறைக்காவிட்டால் மார்க்கெட் போய்விடும்.
 • வேலைக்காரி அநியாயம் செய்கிறாள், கேட்டால் சண்டை போடுவாள்.
என்ற நிலைகளில் நாமே ஒரு முடிவை எடுத்துவிட்டு அம்முடிவைச் சமர்ப்பணம் செய்து பலன் எதிர்பார்ப்பவர் சரணாகதி பூரணமில்லை. கடைசிகட்ட முக்கிய முடிவைத் தம் பிடியில் வைத்துக் கொண்டு செய்யும் சமர்ப்பணம் சமர்ப்பணமாகாது. மகள் கேட்பதைச் சமர்ப்பணம் செய்தால் மருமகன் "கேட்காதே'' என்பார். அதிகாரியை என்னால் மறுக்க முடியாது என்பது என் முடிவு. அதை நான் மாற்றிக் கொண்டு நியாயத்தை பயப்படாமல் செய்ய முன் வந்து அம்முடிவைச் சமர்ப்பணம் செய்த அதே க்ஷணம் அதிகாரி அறையில் நிலைமை மாறும். விலையைக் குறைப்பது நம் முடிவு. நாம் முடிவு செய்யாமல் சமர்ப்பணம் செய்தால் மார்க்கெட் மாறி விலையேற ஆரம்பிக்கும். வேலைக்காரியைக் கண்டு பயப்படாமல் நியாயத்தைக் கேட்க முடிவு செய்து முடிவைச் சரணம் செய்தால் "அம்மா சொல்வது சரிதான்'' என வேலைக்காரி கூறுவாள் என்பவை அன்றாட அன்பர் அனுபவம்.
 • முடிவின் பகுதி நம் பிடியிலுள்ளவரை சமர்ப்பணம் பூர்த்தியாகாது.
 • பூர்த்தியாகாத சமர்ப்பணம் சரணாகதிக்குத் துணை செய்யாது.
 • சரணாகதியை அகந்தை எதிர்கொள்ள முடியாது.
 • நம் மனம் அன்னை பக்கம் உள்ளவரை அகந்தைக்கு வெற்றியில்லை.
 • நமக்குத் தயக்கம் உள்ளவரை நமக்கு வெற்றியில்லை.
 • அகந்தை வென்றால், ஆன்மா சுருங்கும்.
 • சுருங்கும் ஆன்மாவால் வாழ்வு நிரந்தரமாக மலராது.
 • அகந்தை வளர்வதால், வளரும் வாழ்வு நிலையானதன்று, சரியானதுமன்று.
 • எதிர்காலம் ஆன்மாவுக்கு, அகந்தைக்கில்லை.

No comments:

Post a comment