SHIRDI LIVE DARSHAN

Monday 30 January 2012

பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்து (obsession) ஜே. கிருஷ்ணமூர்த்தி


பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்து (obsession)


ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)




முட்டாள்தனமான, பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்துக்கள் (obsessions) அவர் மனத்தை ஆக்கிரமித்துக் கொள்வதாகவும், அப்படி அவரை ஆட்கொள்கிற பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்துக்கள் தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பதாகவும் அவர் குறைபட்டுக் கொண்டார். திடாரென்று, கற்பனையான ஓர் உடல்ரீதியான குறைபாட்டைக் குறித்துக் கவலையுறுவார் என்றும் - ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே, வேறொரு நிகழ்ச்சியாலோ, கவலையாலோ, விஷயத்தாலோ - முதல் கவலை போய்விடும் என்றும் அவர் விளக்கினார். பிடிவாதமும் ஆவேசமும் கொண்டு மனத்தை ஆக்கிரமித்துக் கொள்கிற ஒரு பித்திலிருந்து, இன்னொரு பித்திற்கு, தாவித் தொடர்ந்து தவிப்பவராக அவர் காணப்பட்டார். அத்தகைய பித்துக்களிலிருந்து விடுபடவும், வெளிவரவும் - புத்தகங்கள் சொல்லும் வழிமுறைகளை ஆராய்ந்ததாகவும், பிரச்சினைகளை நண்பருடன் பகிர்ந்து கொண்டதாகவும், ஏன் ஒரு மனோதத்துவ நிபுணரைக் கலந்தாலோசித்ததாகவும் கூட அவர் தொடர்ந்தார். ஆனால், அவருக்கு ஏனோ தெளிவும், நிவாரணமும் கிடைக்கவில்லை என்றும் சொன்னார். முக்கியமான, தெளிவுண்டாக்குவதுபோல் தோன்றுகிற கலந்தாலோசனைகளுக்குப் பின் கூட, உடனடியாக அத்தகைய பித்துக்கள் அவரை ஆட்கொள்வதாக அவர் வருந்தினார். பித்துக்கள் பிறப்பதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து விட்டால், அவற்றுக்கு முடிவு கட்டி விட முடியுமா ?

காரணத்தைக் கண்டுபிடிப்பது விளைவிலிருந்து விடுதலை கொணர்கிறதா ? காரணத்தை அறிகிற கல்வியால் விளைவுகளை விலக்கிவிட முடியுமா ? போருக்கான பொருளாதார, உளவியற் காரணங்களை நாம் அறிந்திருக்கிறோம்; ஆனாலும், காட்டுமிராண்டித்தனத்தையும், சுய அழிவையும் ஊக்குவிக்கிறோம். சொல்லப்போனால், காரணத்தைத் தேடுவதில் நமக்குள்ள நோக்கமே அதன் மூலம் விளைவிலிருந்து விடுதலை பெறுகிற விருப்பம்தான். ஆனால், அந்த ஆசை சாத்வீகமான எதிர்ப்பின், தூஷித்தலின், கண்டித்தலின் மறுவடிவமே ஆகும்; எங்கே தூஷித்தலும், கண்டித்தலும் இருக்கிறதோ அங்கே புரிந்து கொள்வதும், அறிவதும் இருப்பதில்லை.

'அப்படியானால், ஒருவர் செய்ய வேண்டியதுதான் என்ன ? ' என்று அவர் கேட்டார்.

ஏன் மனமானது இத்தகைய அற்பமான, முட்டாள்தனமான பித்துக்களால் ஆளப்படுகிறது ? 'ஏன் ' என்று இங்கே கேட்பது, எதுவொன்றைப் பற்றியும் - நீங்களே தேடிக் கண்டடைய வேண்டிய - நீங்கள் சார்ந்திருக்கிற வாய்ப்பு இல்லாத - காரணத்தைத் தேடுவதற்காக அல்ல; 'ஏன் ' என்று இங்கே கேட்பது, உங்களின் சொந்த சிந்தனையை வெளிக்கொணரவும், பகிரங்கப்படுத்தவுமே. அதனால், ஏன் மனமானது இவ்வாறு ஆக்கிரமிக்கப்படுகிறது ? மனமானது மேலோட்டமானதாக, ஆழமில்லாததாக, சிறுமையானதாக இருப்பதாலும், அதனால் தன்னைக் குறித்த கவர்ச்சிகளிலேயே சிரத்தை கொண்டிருப்பதாலும் தானே ?.

'ஆமாம் ' என்று பதலளித்த அவர், 'நீங்கள் சொல்வது உண்மைபோல் தோன்றுகிறது; ஆனால், முழுவதுமாக அல்ல; ஏனெனில், நான் ஒரு விளையாட்டுச் சுபாவமற்ற, வாழ்க்கையை முக்கியமாக எடுத்துக் கொள்கிற மனிதன். '

'இத்தகைய பித்துக்களைத் தவிர, உங்களின் சிந்தனை எதனால் நிரப்பப்பட்டிருக்கிறது ? '

'என்னுடைய தொழிலால் ' என்று அவர் சொன்னார். 'நான் ஒரு பொறுப்புமிக்க பதவியில் இருக்கிறேன். முழு நாளும், சில நேரங்களில், இரவின் பின்பகுதி வரை, என்னுடைய சிந்தனையை என் தொழில் எடுத்துக் கொள்கிறது. நான் அவ்வப்போது படிப்பதுண்டு, ஆனால், என்னுடைய பெரும்பான்மையான நேரம் என் தொழிலுக்காகவே செலவாகிறது. '

'நீங்கள் செய்கிற தொழிலை நீங்கள் விரும்புகிறீர்களா ? '

'ஆம்; ஆனால், என்னுடைய தொழில் எனக்கு பூரணமான திருப்தியளிக்கவில்லை. என்னுடைய வாழ்நாள் முழுவதும், நான் ஈடுபட்டுள்ளவற்றில் அதிருப்தியுடையவனாகவே நான் இருந்து வருகிறேன். ஆனால், எனக்கு இப்போது இருக்கிற கடமைகளின் பொருட்டு என்னால் இந்தப் பதவியை விடமுடியாது. மேலும், எனக்கு வயதும் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்தப் பித்துக்களும், என் தொழிலின் மீதான மனக்கசப்பும், பிறரின் மீதான வருத்தமுமே என்னை மிகவும் தொந்தரவு செய்கின்றன. நான் இனிமையானவனாக இல்லை. எதிர்காலத்தைப் பற்றி நாளும் வளர்கிற கவலையுறுபவனாக இருக்கிறேன். எனக்குள் அமைதி இருப்பதாகவே தோன்றவில்லை. நான் என் வேலையையும் கடமையையும் நன்றாக செய்கிறேன். ஆனால்... '

ஏன் நீங்கள் 'இது என்ன ? ' என்கிற நிதர்சனத்தை, உண்மையை எதிர்த்துத் துன்புறுகிறீர்கள் ? நான் வாழ்கிற இந்த வீடு சந்தடியும் சத்தமும் மிகுந்ததாகவும் - தூய்மையிழந்து அசுத்தமானதாகவும் - கட்டில், மேஜை, நாற்காலி ஆகியவை புழங்கிப் போய் அழகற்றதாகவும் இருக்கலாம்; மொத்தத்தில் இந்த இடமே அழகும் அமைதியும் இழந்து காணப்படலாம். ஆனால், பல்வேறு காரணங்களுக்காக, என்னால் இன்னொரு வீட்டிற்குப் போக இயலாமல், இங்கேயே வாழ வேண்டி வரலாம். எனவே, இங்கே நான் உறைவது - சம்மதம் பற்றிய, ஏற்றுக் கொள்வது பற்றிய விஷயம் அல்ல; யதார்த்தத்தை, நிதர்சனத்தை உணர்கிற, பார்க்கிற விஷயம் ஆகும். 'இது என்ன ' என்கிற உண்மையை நான் பார்க்காவிட்டால், அந்த பூ ஜாடி பற்றியோ, நாற்காலி பற்றியோ, சுவரிலே மாட்டப்பட்டிருக்கிற படத்தைப் பற்றியோ நினைத்து வருந்துகிற நோயுற்றவன் ஆகிவிடுவேன். அவை என் மனத்தை ஆக்கிரமிக்கிற, ஆட்டுவிக்கிற பித்துக்களாக மாறிவிடும்; அப்புறம், பிறரை எதிர்த்தும், என் தொழிலை எதிர்த்தும் என்றெல்லாம் எனக்குள் மனக்கசப்புகள் பிறக்கும். இவை எல்லாவற்றையும் அப்படியே இங்கேயே விட்டுவிட்டு, நான் புதிதாகவும் தொடங்கலாம் எனில் அது முற்றிலும் வேறான விஷயம். ஆனால், என்னால் அது முடியாது. 'இது என்ன ' என்கிற நிதர்சனத்தை எதிர்த்துக் கலகம் செய்வது நல்லதல்ல. 'இது என்ன ' என்கிற உண்மையை அங்கீகரிப்பது கம்பீரமான மனத்திருப்திக்கோ, வலியைக் குறைக்கிற இளைப்பாறலுக்கோ அழைத்துச் செல்வதில்லை. 'இது என்ன ' என்கிற நிதர்சனத்திற்கு, உண்மைக்கு நான் இணங்கி வளைந்து கொடுக்கும் போது, அதைப் பற்றிய புரிந்து கொள்ளுதலும் அறிதலும் நிகழ்வது மட்டுமல்ல; மேலோட்டமான புற மனத்திற்கு ஒருவகையான அமைதியும் பிறக்கிறது. மனத்தின் மேற்பகுதியானது - புறமனமானது - அமைதியடையாதபோது, அது - நிஜமான அல்லது கற்பனையான, பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்துக்களுக்கு இடம் கொடுக்கிறது. அது, சில சமூக சீர்திருத்தங்களிலோ, குரு, இரட்சகர், சடங்கு போன்ற மதமுடிவுகளிலோ சிக்கிக் கொள்கிறது. புற மனமானது அமைதியாக இருக்கும்போதே, மறைந்திருக்கிற, ஆழ்மனம் - அக மனம் - தன்னைத் தானே வெளிப்படுத்தும். மறைந்திருக்கிற அக மனம் வெளிப்படுத்தப்பட வேண்டும். ஆனால், புற மனமானது பித்துக்கள், கவலைகள் ஆகியவற்றால் சுமையேற்றப்படும்போது அகமனம் வெளிப்படுதல் சாத்தியமாகாது. எனவே, அமைதியற்ற சச்சரவுகளிலும், ஆவேசங்களிலும், எழுச்சிகளிலும், புறமனமானது தொடர்ந்து பாதிக்கப்படும்போது, புற மனத்திற்கும், அக மனத்திற்கும் முரண்பாடுகளும் பகையும் தோன்றுவது தவிர்க்க இயலாதது. இந்த முரண்பாடுகள் தொடர்கிற வரை, தீர்க்கப்படாத வரை, பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்துக்கள் வளர்கின்றன. சொல்ல போனால், பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்துக்கள் எல்லாம் நம்முடைய முரண்பாடுகளிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியே ஆகும். சில வகையான தப்பித்தல்கள் சமுதாயத்திற்கு வெளிப்படையாக அதிகமாய்த் தீங்கிழைக்கின்றன என்றாலும் கூட, எல்லாத் தப்பித்தல்களுமே ஒத்த தன்மையுடையவை, ஒரே மாதிரியானவை தான்..

எப்போது ஒருவர் பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்தின் முழுமையான இயக்கத்தை அல்லது பிரச்சினையின் முழுமையான இயக்கத்தை உணர்ந்து அறிகிறாரோ, அப்போது தான் பிரச்சினையிலிருந்து பூரணமான விடுதலை காண முடியும். முற்றுமுணர, பிரச்சினையைக் கண்டிப்பதோ, நியாயப்படுத்துவதோ கூடாது. உணர்கிற நிலை - அறிவுடைய நிலை - என்பது தேர்ந்தெடுக்கப்படாததாய் இருக்க வேண்டும். அப்படி முழுவதும் உணர்வதற்கும் அறிவதற்கும் மிக்க பொறுமையும், நுண்ணிய உணர்வுகளை அறியும் நுட்பமும் தேவைப்படுகிறது; பேராவலும், தொடர்ந்த கவனமும் தேவைப்படுகிறது. அவற்றினாலேயே, சிந்தனையின் முழுமையான இயக்கத்தைக் கூர்ந்து கவனிக்கவும், புரிந்து கொள்ளவும், அறியவும் முடியும்.

(மூலம்: வாழ்க்கை குறித்த வர்ணனைகள் - வரிசை: 1 - ஜே. கிருஷ்ணமூர்த்தி [Commentaries on living - Series: 1 - J. Krishnamurthi])

**
பி கே சிவக்குமார் ஜெயகாந்தன் இணையப்பக்கம் நடத்துகிறார். முகவரி http://www.jayakanthan.com

No comments:

Post a Comment