நான் கேலி செய்யவில்லை – ஜே. கிருஷ்ணமூர்த்தி
ஜூலை 23, 2011 இல் 10:59 AM (ஜே. கிருஷ்ணமூர்த்தி)
முதலாவதாக – உனது வாழ்க்கை என்பது என்ன, அதில் வாழ்வது என்பது என்ன என்று உனக்குத் தெரியுமா? நான் கேலி செய்யவில்லை. சாதாரணமாகவே கேட்கிறேன். உங்கள் வாழ்க்கையை வாழ்வதற்கு உங்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கை என்னவென்று அறிந்துகொள்ள நீங்கள் மீண்டும் பரிசீலிக்க வேண்டும். உங்கள் தந்தை, உங்கள் தாய், உங்கள் சமூகம், உங்கள் ஆசிரியர், உங்கள் அண்டைவீட்டார், உங்கள் மதம், உங்கள் அரசியல்வாதி ஆகியவர்கள் உங்களிடம் இதுதான் வாழ்க்கையென்று கூறுவது – உங்கள் வாழ்க்கை அல்ல. ‘இல்லை’ என்று கூறவேண்டாம். அது அப்படித்தான். அரசியல், சமய, சமுதாய, பொருளாதார, சீதோஷ்ண பாதிப்புகளால் ஆனதுதான் உங்கள் வாழ்க்கை. இந்த அத்தனை பாதிப்புகளும், ஒன்றாக உங்களிடம் குவிந்துள்ளது. நீங்கள் சொல்கிறீர்கள், ‘அதுதான் வாழ்க்கை, அதைத்தான் நான் வாழ வேண்டு’மென்று. எப்பொழுது நீங்கள் இந்த எல்லா பாதிப்புகளையும் புரிந்து கொள்கிறீர்களோ, அப்பொழுதுதான் உங்கள் வாழ்க்கையை வாழ முடியும். மற்றும் அதைப் புரிந்துகொண்டதிலிருந்துதான், நீங்கள் உங்கள் வாழ்வில் சிந்திக்கவும் வாழவும் துவங்குகிறீர்கள். பின் ’எப்படி நான் என் வாழ்க்கையை வாழ்வது’ என்று கேட்க வேண்டிய அவசியமில்லை. பின் நீங்கள் வாழ்கிறீர்கள். ஆனால் முதலில் நீ எல்லா பாதிப்புகளையும் புரிந்து கொள்ள வேண்டும். சமூகம் உங்கள் மேல் ஏற்படுத்தும் பாதிப்பு மற்றும் அரசியல் பேச்சுக்கள், அரசியல்வாதிகள், சீதோஷ்ணம், உணவு, நீ படிக்கும் புத்தங்கங்கள் இவைகள் உங்களை எந்த நேரமும் பாதித்துக்கொண்டே இருக்கிறது. இந்த பாதிப்புகளிலிருந்து விடுபட முடியுமா என்று நீங்கள் கேட்க வேண்டும். இது மிகக் கடினமான விசாரணைகளில் ஒன்று. கேட்டு, ஆராய்ந்த பின் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்களுடையதோ அல்லது மற்ற எவருடையதோ அல்லாத ஓர் வாழ்வு முறையை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். பின் அதுதான் வாழ்க்கை. பின் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
இவை அனைத்திலும் எது முக்கியமானது? முதலில் இயந்திர இயல்பான வாழ்வை வாழக்கூடாது. இயந்திர இயல் வாழ்க்கை என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்குப் புரிகிறதா? யாரோ ஒருவர் உன்னைச் செய்யும்படி கூறியதைச் செய்வது, அல்லது ஒன்றைச் செய்வது சரியானது என்று நீ உணர்ந்து செய்வது. ஆகையால் அதை நீங்கள் திரும்பத் திரும்பச் செய்வதால், படிப்படியாக உங்கள் மூளை, உங்கள் உள்ளம், உங்கள் உடல் மந்தமாகி, கடினமாகி அறிவற்று போகிறது. அதனால் ஒரே மாதிரியான நடைமுறையில் வாழாதீர்கள். நீங்கள் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டி இருக்கலாம். நீங்கள் படித்துத் தேர்வில் தேறவேண்டி இருக்கலாம். ஆனால் அவைகளை புத்துணர்வோடும், ஆர்வத்தோடும் செய்யுங்கள். நீங்கள் கற்கும்போதுதான், உங்களால் புத்துணர்வுடன், வீரியத்துடன் அதைச் செய்ய முடியும். மேலும் நீங்கள் கவனத்துடன் இராவிட்டால் உங்களால் கற்க முடியாது.
- ஜே. கிருஷ்ணமூர்த்தியின் ’ஒரு புதிய தலைமுறையைத் தோற்றுவிப்போம்’ புத்தகத்திலிருந்து (கே.எஃப்.ஐ வெளியீடு)
No comments:
Post a Comment