SHIRDI LIVE DARSHAN

Wednesday, 1 February 2012

சமயபுரம் மாரியம்மன்


சமயபுரம் மாரியம்மன்


ஏழை பணக்காரன், இருப்பவன் இல்லாதவன் – வலியவன் எளியவன் இப்படிப் பேதம் ஏதும் இன்றித் தனது கருணையை-தன்னை எண்ணித் துதிப்போர்க்கு மாரியாகப் பொழிந்து அருள்பாலித்துத் துன்பம் துயர் என்னும் இருள் நீக்கி இன்பமுறச் செய்வதில் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றி மாந்தர்தம் வாழ்வில் என்றும் ஒளியாகத் திகழ்ந்து உதவிடும் வல்லமை கொண்டவள் இந்தச் சமயபுரம் மாரியம்மன்.
சமயபுரம் திருச்சியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. கோயில் இருக்கும் இடம் கண்ணனூர் என்பதாகும். இந்தக் கண்ணனூர் வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட ஊராகும்.
சோழனின் தங்கையை மணந்து கொண்ட கங்க நாட்டு அரசனுக்கு இந்தக் கண்ணனூரில் ஒரு கோட்டையைக் கட்டி அதனைச் சுற்றிலும் நகரத்தையும் நிர்மாணித்துத் தந்தான் சோழ மன்னன். இது தனது தங்கைக்குச் சீதனமாக அளிக்கப்பட்ட நகரமாகும்! காலப்போக்கில் இந்த நகரம் பாண்டியனின் படைஎடுப்பின் போது பாழ்பட்டது. நாளடைவில் இந்த இடம் வேப்ப மரங்கள் சூழந்த இடமாக ஆனது.
விஜய நகர மன்னர்களால் வணங்கப்பட்டு வந்தது இந்த மாரியம்மன். விஜயநகரப் பேரரசு பிற நாட்டினர் படையெடுப்புக்கு இலக்கானபோது இந்தச் சிலையின்மீது பெரிதும் ஈடுபாடு கொண்டு வணங்கி வந்ததால் இது அந்தச் சமயத்தில் எதிரிகள் கையில் சிக்கிப் பாழ்பட்டு விடக்கூடாது என்று கருதி பத்திரமாகப் பாதுகாக்க பல்லக்கில் வைத்து அனுப்பி வைக்கப்பட்டது. இப்படி அனுப்பி வைக்கப்பட்ட திசை வடதிசை ஆகும். அம்மன் இருந்த பல்லக்கைச் சுமந்து வந்தவர்கள் சற்று இளைப்பாற வேண்டி தாங்கள் சுமந்த பல்லக்கைக் கீழே இறக்கி வைத்தனர். களைத்தவர்கள் உண்டு உறங்கி விரித்துப் பின்னர் மீண்டும் பல்லக்கைச் சுமக்க முயன்றபோது என்ன முயன்றும் எத்தனை பேர்கள் முயன்றபோதும் அம்மன் இருந்த பல்லக்கைக் கொஞ்சம்கூட அசைக்க முடியவில்லையாம்! ஆமாம், வேம்புகள் சூழ்ந்த அந்த இடத்தைவிட்டு அசைய மறுத்துவிட்டாள் அன்னையவள்! அந்த இடத்திலே கோயில் கொண்டுவிட இசைந்து விட்டதை அறிந்து அதற்காகச் சிறிய அளவில் கோயில் அமைக்கப்பட்டது. பின்னர் விஜயரங்க சொக்கநாதர் இந்தக் கண்ணனூரில் கோயில் எழுப்பி அன்னை மாரியை எழுந்தருளச் செய்தார்.
வீர சோமேஸ்வரன் என்ற ஹொய்சாள மன்னன் இந்தக் கண்ணனூரை தலைநகரமாகக்  கொண்டு கி.பி.13ஆம் நூற்றாண்டில் ஆண்டு வந்தான்.
கொள்ளிடத்திலிருந்து பிரிந்து செல்லும் பெருவிளை வாய்க்கால் கரை ஓரத்தில் சமயபுர அன்னையின் ஆலயம் அமைந்துள்ளது!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் இருந்த வைஷ்ணவி என்ற அம்மன் தன்னிடம் யாரும் நெருங்க முடியாத அளவிற்கு ஜூவாலையுடன் அனலாகத் தகித்த போது-செய்வதறியாது தவித்து நின்றவர்களிடம் அசரீரியாகத் தான் இருக்க வேண்டிய இடம் வேறு இடம் என்பதைத் தெரிவிக்க அவர்களும் குடம் குடமாக பால் அபிஷேகம் செய்து-குளிர்வித்து-பல்லக்கில் வைத்து தூக்கி வந்தனர். ஒளி ஒன்று அவர்கள் முன்னே வழிகாட்டி வந்தது. களைப்பு மிகுதியானதால் சற்று இறக்கிவைத்து இளைப்பாறிய பின்னர் மீண்டும் பல்லக்கைச் சுமக்க எண்ணி தூக்க முயன்றபோது-அவர்களால் துளியும் அசைக்க முடியவில்லை. அங்கேயே கோயில் கொள்ளத் திருவுள்ளம் கொண்டாள் என்பதை அறிந்து அதன்படி கோயில் எழுப்பினர்.
இப்படி இந்தத் தலம்பற்றி வரலாறுகள் சுவையாகச் சொல்லப்பட்டாலும் ஈசன் அரங்கனின் ஆலயத்திலிருந்து எழுந்து இந்த அகிலம் காக்கத் திருவுள்ளம் கொண்டு-வெப்ப நோயால் வெந்து வெதும்பும் தம் மக்களின் துயர் தீர்க்க என்றே அவதரித்த அன்னை தனது கருணையை மாரியாக மக்கள் மீது பொழிந்து வரும் ஆயி-மகமாயி-மகாமாயி-சமயத்தில் ஓடோடி வந்து உதவிடும் மனம் கொண்ட மாரியம்மா இந்தச் சமயபுரம் மாரியம்மன்! அரங்கன் தங்கையானவள் இவள்! இவளின் மூத்தவளோ ஆனைக்கா ஈச்வரி அகிலாண்டேச்வரி. இன்றும் இத்தலத் திருவிழாவின்போது அண்ணன் ரங்கனிடமிருந்தும் அக்காள் அகிலாண்டேச்வரியிடமிருந்தும் சீர் வரிசைகள் பெற்று வருகிறாள்! கூடப்பிறந்தவர்கள் இளையவர்களுக்கு விழா-பண்டிகை நாளின் போது, சீர்வரிசை செய்து சிறப்பிக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தி வருகிறார்!
பிரிட்டிஷார் ஆட்சியின்போது சமயபுரத்தில் முகாமிட்டிருந்த ஆங்கிலேயன் ஊரடங்கு உத்திரவு போட்டிருந்தான். நள்ளிரவு நேரம் ஜல்ஜல் என சலங்கை ஒலிக்க கையில் தீச்சட்டியுடன் மஞ்சள் ஆடையுடன் அன்னை நகர்வலம் வந்தபோது-அதாவது கண்ணுறங்கும் தம் மக்களைக் காத்திட ஊரைச் சுற்றி வந்தபோது, தனது ஊரடங்கு உத்திரவுக்கும் அடங்காத பெண் யார் இவள் என்று கோபமுற்று அவளைத் தன் துப்பாக்கியால் சுட்டபடியே பின் தொடர்ந்து சென்ற அந்த ஆங்கிலேயன்-அன்னை மாரிதான் என்று பிறர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அதனை ஏற்றுக்கொள்ளாமல் அந்த ஆங்கிலேயன் அவளுக்கும் முன்னே குதிரையில் விரைந்து சென்று அவள் ஆலயத்தின் கதவிடுக்கு வழியாகப் பார்த்து-அங்கே சிலை இல்லாது இருந்ததைக் கண்டு திகைத்து-அந்த நிலையில்-அந்த இரவில் வெளியே தான் கண்டது அன்னை மாரியம்மனைத்தான் என்று உணர்ந்த போது கதவு திறக்க ஒளிப்பிழம்பாகக் காட்சி தந்த ஜுவாலை தாங்காமல் அவனது கண்ணிரண்டும் பொசுங்கிவிட அவன் துடித்துக் கதறித் தான் செய்தது தவறுதான் என்று உணர்ந்து வருந்தி மனமார உருகிச் சமயபுரத்தாளைத் துதிக்க-அவளும் சமயத்தில் வந்து, இழந்த அவன் கண்களுக்கு மீண்டும் ஒளி தந்து அருள் புரிந்தாள்! இதுவும் வரலாறு! அதுவும், எதையும் தங்கள் கண்ணால் மட்டுமே கண்டு உணர்ந்து அறிந்து பகுத்தறிவு கொண்டு பகுத்து அறிந்து பின்னரே எதையும் ஏற்றுக்கொள்ளும் ஆங்கிலேயன் எழுதி வைத்து ஊருக்கும் பிறருக்கும் உணர்த்தும் வரலாறு ஆகும்!
இந்தத் தலத்தின் தீர்த்தம் பெருவிளை வாய்க்கால் நீர் ஆகும். இக் கோயிலின் மேற்குப் பக்கம் இருக்கும் குளம் மாரிதீர்த்தம் எனப்படுவதாகும்!
சமயபுரம் அன்னையின் ஆலய உற்சவங்கள் அனைத்துமே மக்களின் உற்சாகம் உத்வேகம் கொண்டு நடத்தப்படுபவை ஆகும்! சித்திரையில் தேரோட்டமும் தெப்ப உற்சவமும்-வைகாசியில் பஞ்சப்பிரகார விழா-இதில் அன்னைக்கு உச்சிவேளை வரை செய்யப்படும் பல வகை அபிஷேகங்கள் நிலத்தையும் நீரையும்-மக்களையும் குளிர்விக்கச் செய்து வெம்மையின் கொடுமை தன் பிள்ளைகளை அணுகாத வண்ணம் அன்னை காத்து வருவதாகும்!
ஆடிமாதம் பூர நட்சத்திர விழா-புரட்டாசியில் கொலுவிருக்கும் நவராத்திரி விழா! தை மாதம் பூச விழா மாசியில் மனங்கவர் பூச்சொரியும் பூமாரி பெய்யும் விழா-பங்குனி உற்சவம் பத்து நாள்.
தாம் வணங்கும் அன்னைக்காக மக்கள் விரதம் இருப்பதுதானே வழக்கம்! ஆனால் இங்கே தம் மக்களுக்காக இந்த சமயபுர மாரியம்மனே 4 வாரங்கள் நைவேத்தியம் எதுவும் இன்றி வெறும் நீர் மோரும் பானகமும் மட்டுமே நிவேதனமாகக் கொண்டு பச்சைப் பட்டினியாக விரதம் இருக்கிறாள் என்றால்-
அன்னை மட்டுமே பட்டினியாகப் பச்சை விரதம் இருக்கும் நாட்களில் அன்னையின் பிள்ளைகள் அந்த நாட்களில் பசியும்-பசியால் பிணியும் யாருக்கும் வரக்கூடாது என்ற கருத்திலே  அவள் கட்டளைச் சித்தப்படி அன்னதானத்தை அமோகமாகச் செய்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment