SHIRDI LIVE DARSHAN

Wednesday, 1 February 2012

நல்ல வேலை கிடைக்க -ஸ்ரீ மயிலாப்பூர் ஆதிகேசவபெருமாள்


நல்ல வேலை கிடைக்க -ஸ்ரீ மயிலாப்பூர் ஆதிகேசவபெருமாள்



மயிலாப்பூர் என்றதும் சட்டென்று நினைவுக்கு வரும் ஸ்ரீ கபாலீஸ்வரர் ஆலயத்துக்கு அருகிலேயே உள்ளது ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில். இங்கே ஸ்வாமியின் திருநாமம் –  ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள்; தாயாரின் திருநாமம் ஸ்ரீ மயூரவல்லித் தாயார்.
முன்னொரு காலத்தில் மயிலாப்பூர் – மயூரபுரி என்றும், அருகில் உள்ள திருவல்லிக்கேணி – துளசிவனமாக, பிருந்தாரண்ய ஷேத்திரமாகவும் இருந்ததாம்.
இந்தத் தலத்தில் உள்ள கைரவணி தீர்த்தக் குளத்தில், பங்குனி உத்திர நன்னாளில், ஆம்பல் மலராகத் தோன்றிய மகாலட்சுமித் தாயார், பிறகு முனிவரின் மகளாக அவதரித்து, பேயாழ்வாருக்கு அருள் புரிந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். எனவே, மயூரபுரியில் அவதரித்ததால், ஸ்ரீ மயூரவல்லித் தாயார் எனத் திருநாமம் அமைந்ததாகச் சொல்வர்.
இங்கு தாயார் மிகவும் விசேஷம். உத்ஸவ மூர்த்தியாகவும், அமர்ந்த திருக்கோலத்தில் அழகு ததும்பக் காட்சி தருகிறார். இன்னொரு சிறப்பு… தாயாருக்கு, இங்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது. வெள்ளிக்கிழமைதோறும் காலையில் ஸ்ரீசுக்த ஹோமமும், மாலையில் வில்வார்ச்சனையும் சிறப்புற நடைபெறுகிறது.
படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் அவதிப்படுவோர், நல்ல நிறுவனத்தில் உத்தியோகம் கிடைக்கவேண்டுமே எனக் காத்திருப்போர், வெளிநாட்டில் வேலை பார்ப்பதையே லட்சியமாகக் கொண்டிருப்பவர்கள்… இங்கே இந்த ஆலயத்துக்கு வந்து, ஸ்ரீ மயூரவல்லித் தாயாரை மனதார வேண்டிக் கொண்டு, ஆலயத்தில் இரண்டு மணிகளை கட்டிச் செல்கின்றனர்.
இதையடுத்து, தாயாருக்குத் தொடர்ந்து 48 நாட்கள் அல்லது வெள்ளிக்கிழமை தோறும் வந்து நெய் தீபம் ஏற்றி 12 முறை பிராகாரத்தை வலம் வருகின்றனர். வெள்ளிக்கிழமை மாலையில் தாயாருக்கு வில்வார்ச்சனை செய்து, சந்நதியில் தரும் பாயசப் பிரசாதத்தைப் பருகி, பிரார்த்தித்துக் கொள்ள… நினைத்தது நடக்கும்; நல்ல இடத்தில் வேலை கிடைக்கும்; தொழில் விருத்தியாகும் என்பது ஐதீகம்.
இங்கு வந்து வழிபட்ட எண்ணற்ற பக்தர்கள், வெளிநாட்டில் வேலை கிடைத்து வளமோடு வாழ்ந்து வருகின்றனர். பிரார்த்தனை நிறைவேறிய அன்பர்கள், ஸ்ரீ மயூரவல்லித் தாயாருக்குத் திருமஞ்சனம் செய்து, புடவை சார்த்தி தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்துகின்றனர்.
தங்களின் மகன் அல்லது மகளுக்கு, படிப்புக்கேற்ற நல்ல சம்பளத்தைத் தரும் வேலை கிடைத்ததும், தாயார் வீதியுலா மற்றும் ஊஞ்சல் உத்ஸவம் என நேர்த்திக்கடன் செலுத்தும் பெற்றோரும் உண்டு!

1 comment: