SHIRDI LIVE DARSHAN

Wednesday, 1 February 2012

காஞ்சி வரதராஜப் பெருமாள்


காஞ்சி வரதராஜப் பெருமாள்



காஞ்சிக்கு வந்தவர்கள் சிவ ஸ்தலங்களை மட்டும் தரிசித்துச் சென்றால் பூரணம் ஆகாது.
காஞ்சியில் வரதராஜப் பெருமாள் உறையும் தலத்திற்கு அத்திகிரி என்றும் பெயர். அத்திகிரி என்னும் ‘மலையில்’ இருப்பதாலும அப்பெயர் காரணமாகிறது. “ஊர் அத்திகிரியான் ஊதும் திகிரியான் வீரத்திகிரியான் வெற்பு” என்கிறார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்.
படைக்கும் தொழில் செய்துவரும் பிரம்மதேவனுக்கு அடிக்கடி ஞாபகசக்தி குறைந்து மறதியும் ஏற்படுகிறது. தனது குறையினை அறிந்து அதனைப் போக்கிக்கொள்ள பிரம்மதேவன் யாகம் செய்கிறான். அந்த யாக குண்டத்திலிருந்து எழுந்தருளிய வரதராஜப் பெருமாள் பிரம்மனின் குறை போக்கி அருள் புரிந்தான்! திசை யானைகள் பூஜித்த தலம் என்றும் -இந்திரனின் ஐராவத யானையில் அமர்ந்து வரதர் காட்சி தந்து அருளியதால் அத்திகிரி என்றும் அத்தியூர் என்றும் பெயர் வந்தது என்பர்!
பெருந்தேவித் தாயார், கருடாழ்வார், குகை நரசிம்மர், அனந்த புஷ்கரணி ஆகியவை கண்டு தரிசிக்க வேண்டியவை!
அனந்த புஷ்கரணியில் ஆதிசேஷன் தவம் இருந்தார். நடுவிலே நீராழி மண்டபம். அதன் அடித்தளத்திலே அத்திவரதர் உறைந்துள்ளார். 40 ஆண்டுக்கு ஒரு முறை குளத்து நீரை எல்லாம் இறைத்து அவரை வெளியே கொண்டுவந்து ஒரு மண்டலம் பூஜைகள் செய்து திரும்பவும் நீருக்குள்ளேயே வைத்துவிடுவார்கள்!
பங்குனி சித்திரை மாதங்களில் வரதராஜருக்கு பிரம்மோற்சவம் நடைபெறும். வைகாசி மாதம் பௌர்ணமியில் கருடசேவை பிரசித்தமானது! வைகாசி விசாகத்திலும் ஆனி சுவாதியிலும் ஆக மூன்று கருட சேவைகள் நடப்பது வழக்கம்.
வரதராஜர் சன்னதிக்குப் பின்பக்க பிரகாரத்தில் இரண்டு பல்லிகள் தங்கத்திலும் வெள்ளியிலும் உள்ளன. துர்வாச முனிவரிடம் ஊழியம் புரிந்த இரண்டு ராஜகுமாரர்கள் பூஜைக்கு என்று வைத்து இருந்த பாலில் பல்லிகள் இரண்டு விழுந்துவிட்டதைக் கவனிக்கவில்லை. அதனால் சாபம் பெற்று அதற்கு விமோசனம் பெற இங்கே வந்து தவம் செய்து சாபம் நீங்கப் பெற்றனர். இந்த இரண்டு பல்லிகளும் இந்திரன் செய்து வைத்தவையாம்!
திருவேங்கடத்தான் கிருஷ்ண பகவான் வடிவாம்சம் கொண்டவர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர், ராமர் வடிவாம்சம் கொண்டவர். இந்த வரதராஜரோ இரண்டு அம்சங்களும் சேர்ந்து ராமகிருஷ்ண அம்சம் பொருந்தியவராக விளங்குகிறார் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்!
காஞ்சியில் வைணவத் தலங்கள் பல உண்டு. அவற்றில் முதன்மை பெற்றது வரதராஜப் பெருமாள் தலம்.
வைகுண்டப் பெருமாள், சொன்ன வண்ணம் செய்த பெருமாள், விளக்கொளி பெருமாள், உலகளந்த பெருமாள், பச்சைவண்ண பவளவண்ணர், பாண்டவ தூதப் பெருமாள், அஷ்டபுஜப் பெருமாள் மற்றும் அனுமார் கோயில்கள் கலை நயத்துடனும் கருத்தைக் கவரும் விதத்திலும் அமையப் பெற்றுள்ளன!

No comments:

Post a Comment