SHIRDI LIVE DARSHAN

Sunday, 15 July 2012

குள்ளசாமி சித்தர் ( மாங்கொட்டை சித்தர் ) பாரதியாரின் ஞான குரு

 பாரதியார் தன்னை பற்றி 

எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தா ரப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில் -பாரதியார்

 


பாரதியாரின் ஞான குரு குள்ளசாமி சித்தர் ( மாங்கொட்டை சித்தர் )


குள்ளச்சாமி
பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்தபோது அவருக்கு ஞானகுருவாக விளங்கியவர் குள்ளச்சாமி. வண்ணான் தொழில் என்ற தலைப்பில் பாரதியார் அவரைப் பற்றி எழுதியிருக்கிறார். அவருக்கு நூறு வயதாகிவிட்டது என்றும் பார்ப்பதற்கு நாற்பது வயதானவராகவே காணப்படுகிறார் என்றும் மக்கள் கூறுவர். கறுப்பு நிறமும் உருண்டை முகமும் கொண்ட அவர், நாலரை அடி உயரமே உள்ளவராக இருந்தார். வயிரம் ஏறிய உடல். திக்தித் திக்கி தொடர்பின்றிப் பேசுவார்; தெருவிலே படுத்திருப்பார்; மண்ணிலே புரள்வார்; நாய்களுடன் சண்டை செய்வார்; கள் குடிப்பார்; கஞ்சா தின்பார்; பசித்தபோது சில வீடுகளுக்குச் சென்று பிச்சையெடுத்து உண்பார். பெண்களுக்கு அவர் மேல் இரக்கம் உண்டு. திடீரென்று ஒரு வீட்டினுள் நுழைந்து, அந்த வீட்டிலிருக்கும் குழந்தைகளின் நெற்றியில் திருநீறு பூசிவிட்டு ஓடி விடுவார். யாராவது அவரைத் திட்டினாலும் அடித்தாலும் பொறுத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு அகலுவார். அவரிடமிருந்து திருநீறு வாங்கிப் பூசிக்கொண்டால் நோய் அணுகாது என்பது பலருடைய நம்பிக்கை. ஒரு நாள் குள்ளச்சாமியார் கிழிந்த அழுக்குத்துணிகளை மூட்டையாகக் கட்டி, அதை முதுகின்மேல் சுமந்துகொண்டு வந்தார். பாரதியார் அதைக் கண்டவுடன் வழக்கம்போல் வணங்கினார். ஆனால் சாமியார் குறும்புச் சிரிப்பு சிரித்தார். பாரதியார், சாமி, கந்தைகளைக் கட்டி முதுகின்மேல் வைத்து சுமப்பதேன்? என்று வினவினார். சாமியார், நீ நெஞ்சுக்குள்ளே சுமக்கிறாய். நான் முதுகின் மேலே சுமக்கிறேன் என்று விடையளித்துவிட்டு, விரைவில் மறைந்தார்.


குள்ளச்சாமியார் கூறியதன் பொருளை பாரதியார் பின்வருமாறு கூறுகிறார்:

அஞ்ஞானப் பழங் குப்பைகளையும், பழங்கவலைகளையும், பழந்துன்பங்களையும், பழம் சிறுமைகளையும் மனதில் வைத்து வீணாய்ச் சுமந்து திரியும் மனிதனுடைய அறிவீனத்தை விளக்கும் பொருட்டே குள்ளச்சாமி இவ்வாறு கூறினார். ஒருநாள் பாரதியார் குள்ளச் சாமியாரைப் பார்த்து விளையாட்டாக, சாமி. இப்படி பிச்சை வாங்கி உண்ணுகிறீர்கள். ஏதேனும் தொழில் செய்து பிழைக்கலாகாதா? என்றார். சாமியார், தம்பி, நான் வண்ணான் தொழில் செய்கிறேன். ஐம்புலன்களாகிய கழுதைகளை மேய்ப்பதும் அந்தக்கரணம் ஆன துணி மூட்டைகளை வெளுப்பதும் என் தொழில்கள் என்றார். பாரதியார், சாமியாரே, ஞானநெறியில் செல்வோன் எத்தொழிலை முதலில் செய்யவேண்டும்? என்று கேட்டார். சாமியார், முதலில் நாக்கை வெளுக்கவேண்டும். பொய், குறளை, கடுஞ்சொல், இன்னாச்சொல், தற்புகழ்ச்சி ஆகியவை கூடாது. உண்மையே பேசவேண்டும். அச்சத்தை நீக்குவதே அந்தக்கரணத்தை வெளுத்தலாகும் என்றார். சும்மா என்ற கட்டுரையில் பாரதியார் குள்ளச்சாமியைப் பற்றி எழுதுவதாவது : இவர் கலியுக ஜடா பரதர். மகாஞானி. எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொண்டவர். பெண்கள் இவரைத் தெருவில் கண்டவுடன் வணங்குவார்கள். குழந்தைகள் இவரைக் கண்டால் விருப்பத்துடன் ஓடி வருவார்கள்.

பாரதி அறுபத்தாறு எனும் பகுதியில் பாரதியார் பாடியிருப்பதன் கருத்து :

குள்ளச்சாமி புகழ் : 

 குருவின் திருவருளால் பிறப்பு மாறி அமர நிலை அடைந்துவிட்டேன். பராசக்தியின் திறம், சித்தின் இயல்பு, வானத்தைத் தீண்டும் வகை ஆகியவற்றை அவர் உணர்த்திக் காத்தார். அமைதி நிலை அளித்து குப்பாய ஞானத்தால் சாவு எனும் அச்சத்தைப் போக்கினார். தெளிந்த ஞானியான இக்குள்ளச்சாமி பாசத்தையும் அச்சத்தையும் நீக்கியவர்; அவர் பெருமை எவ்வளவு எழுதினும் அடங்காது. காயகற்பம் சாப்பிட்டவராகையால், அவருடைய வயதைக் கணக்கிட்டுச் சொல்ல யாராலும் இயலாது. 1930ஆம் ஆண்டில், பாரதி பாடல்களுக்குத் தகுந்த ஓவியங்கள் மித்திரனில் தொடர்ச்சியாக வெளிவந்தன. கே.ஆர். சர்மா என்ற ஓவியர் வரைந்த படமொன்றில், பாரதியார் தலைப்பாகையைக் கழற்றி வைத்துவிட்டு, தரையில் அமர்ந்து, தம் முன்னுள்ள மேசைப் பெட்டிமேல் உள்ள ஏட்டினில் எழுதிக் கொண்டிருப்பதையும், அருகில் குள்ளச்சாமி நின்று கொண்டிருப்பதையும் காண்கிறோம்.

ஸ்ரீ குள்ள சாமி யின் புகழை பாடும் பாரதியார்         
                                       
பாரதி அறுபத்தாறு
 குருக்கள் துதி(குள்ளச்சாமி புகழ்)

ஞான்குரு தேசிகனைப் போற்று கின்றேன்;
நாடனைத்துந் தானாவான் நலிவி லாதான்;
மோனகுரு திருவருளால் பிறப்பு மாறி
முற்றிலும்நாம் அமரநிலை சூழ்ந்து விட்டோ ம்;
தேன்னைய பராசக்தி திறத்தைக் காட்டிச்
சித்தினியல் காட்டிமனத் தெளிவு தந்தான்.
வானகத்தை இவ்வுலகிலிருந்து தீண்டும்
வகையுணர்த்திக் காத்த பிரான் பதங்கள் போற்றி!19

எப்போதும் குருசரணம் நினைவாய்,நெஞ்சே!
எம்பெருமான் சிதம்பரதே சிகந்தாள் எண்ணாய்!
முப்பொழுங் கடந்தபெரு வெளியைக் கண்டான்,
முத்தியெனும் வானகத்தே பரிதி யாவான்,
தப்பாத சாந்தநிலை அளித்த கோமான்,
தவம் நிறைந்த மாங்கொட்டைச் சாமித் தேவன்,
குப்பாய ஞானத்தால் மரண மென்ற
குளிர்நீக்கி யெனைக்காத்தான்,குமார தேவன்! 20

தேசத்தார் இவன்பெயரைக் குள்ளச்சாமி
தேவர்பிரான் என்றுரைப்பார்;தெளிந்த ஞானி
பாசத்தை அறுத்துவிட்டான்,பயத்தைச் சுட்டான்;
பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான்;
நாசத்தை அழித்துவிட்டான்;யமனைக் கொன்றான்;
ஞானகங்கை தனைமுடிமீ தேந்தி நின்றான்;
ஆசையெனும் கொடிக்கொருதாழ் மரமே போன்றான்,
ஆதியவன் சுடர்பாதம் புகழ்கின் றேனே. 21

வாயினால் சொல்லிடவும் அடங்கா தப்பா;
வரிசையுடன் எழுதிவைக்க வகையும் எல்லை;
ஞாயிற்றைச் சங்கிலியால் அளக்க லாமோ?
ஞானகுரு புகழினைநாம் வகுக்க லாமோ?
ஆயிரனூல் எழுதிடினும் முடிவ்ய் றாதாம்;
ஐயனவன் பெருமையைநான் சுருக்கிச் சொல்வேன்;
காயகற்பஞ் செய்துவிட்டான்;அவன்வாழ் நாளைக்
மணக்கிட்டு வயதுரைப்பார் யாரும் இல்லை. 22

குரு தரிசனம்

அன்றொருநாட் புதுவைநகர் தனிலே கீர்த்தி
அடைக் கலஞ்சேர் ஈசுவரன் தர்மராஜா
என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில்,
இராஜாரா மையனென்ற நாகைப் பார்ப்பான்,
முன்றனது பிதா தமிழில் உபநிடதத்தை
மொழிபெயர்த்து வைத்ததனைத் திருத்தச் சொல்லி
என்றனைவேண் டிக்கொள்ள யான்சென் றாங்கண்
இருக்கையிலே அங்குவந்தான் குள்ளச் சாமி. 23

அப்போது நான்குள்ளச் சாமி கையை
அன்புடனே பற்றியது பேச லுர்றேன்:
''அப்பனே!தேசிகனே!ஞானி என்பார்
அவனியிலே சிலர்நின்னைப் பித்தன் என்பார்;
செப்புறுநல் லஷ்டாங்க யோக சித்தி
சேர்ந்தவனென் றுனைப்புகழ்வார் சிலரென் முன்னே
ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய்,
உத்தமனே!எனக்குநினை உணர்த்து வாயே. 24

யாவன் நீ? நினைக்குள்ள திறமை என்னே?
யாதுணர்வாய் கந்தைசுற்றித் திரிவ தென்னே?
தேவனைப்போல் விழிப்ப தென்னே? சிறியாரோடும்
தெருவிலே நாய்களொடும் விளையாட் டென்னே?
பாவனையிற் பித்தரைப்போல் அலைவ தென்னே?
பரமசிவன் போலுருவம் படைத்த தென்னே?
ஆவலற்று நின்றதென்னே? அறிந்த தெல்லாம்,
ஆரியனே,அனக்குணர்த்த வேண்டும்''என்றேன். 25

பற்றியகை திருகியந்தக் குள்ளச் சாமி
பரிந்தோடப் பார்த் தான்;யான் விடவே யில்லை,
சுற்றுமுற்றும் பார்த்துப்பின் முறுவல் பூத்தான்;
தூயதிருக் கமலபதத் துணையைப் பார்த்தேன்;
குற்றமற்ற தேசிகனும் திமிறிக் கொண்டு
குதித்தோடி அவ்வீட்டுக் கொல்லை சேர்ந்தான்;
மற்றவன்பின் யானோடி விரைந்து சென்று
வாவனைக் கொல்லையிலே மறித்துக் கொண்டேன்.26

உபதேசம்

பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
பாழ்மனையொன் றிருந்ததங்கே;பரம யோகி
ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி
ஒருகுட்டிச் சுவர்காட்டிப் பரிதி காட்டி
அக்கணமே கிணற்றுளதன் விம்பங் காட்டி, [என்றேன்
''அறிதிகொலோ!''எனக்கேட்டான்''அறிந்தேன்''
மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான்;யானும்
வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன். 27

தேசிகன்கை காட்டியெனக் குரைத்த செய்தி
செந்தமிழில் உலகத்தார்க் குணர்த்து கின்றேன்;
''வாசியைநீ கும்பகத்தால் வலியக் கட்டி,
மண்போலே சுவர்போலே,வாழ்தல் வேண்டும்;
தேசுடைய பரிதியுருக் கிணற்றி நுள்஧ள்
தெரிவதுபோல் உனக்குள்஧ள் சிவனைக் காண்பாய்;
பேசுவதில் பயனில்லை.அனுப வத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம்''என்றான். 28

கையிலொரு நூலிருந்தால் விரிக்கச் சொல்வேன்,
கருத்தையதில் காட்டுவேன்;வானைக் காட்டி
மையிலகு விழியாளின் காத லொன்றே
வையகத்தில் வாழுநெறி யென்றுகாட்டி,
ஐயனெனக் குணார்த்தியன பலவாம் ஞானம்,
அகற்கவன்காட் டியகுறிப்போ அநந்த மாகும்.
பொய்யறியா ஞானகுரு சிதம்ப ரேசன்
பூமிவிநா யகன்குள்ளச் சாமி யங்கே. 29

மற்றொருநாள் பழங்கந்தை யழுக்கு மூட்டை
வளமுறவே கட்டியவன் முதுகின் மீது
கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக்
கருணைமுனி சுமந்துகொண்டென் னெதிரே வந்தான்;
சற்றுநகை புரிந்தவன்பால் கேட்க லானேன்;
''தம்பிரா னே; இந்தத் தகைமை என்னே?
முற்றுமிது பித்தருடைச் செய்கை யன்றொ?
மூட்டைசுமந் திடுவதென்னே?மொழிவாய்''அன்றென்.30

புன்னகைபூத் தாரினும் புகலுகின்றான்;
''புறததேநான் சுமக்கின்றேன்;அகத்தி னுள்ளே;
இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ"
என்றுரைத்து விரைந்தவனும் ஏகி விட்டான்.
மன்னவன்சொற் பொருளினையான் கண்டு கொண்டேன்;
மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்ப தாலே
இன்னலுற்று மாந்தரெல்லாம் மடிவார் வீணே,
இருதயத்தில் விடுதலையை இசைத்தால் வேண்டும். 31

சென்றதினி மீளாது;மூடரே,நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்;சென்றதனைக் குறித்தல் வேண்டா;
இன்று புடிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளாஇ யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும். 32

மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா,அந்தோ!
மேதையில்லா மானுடரே!மேலும் மேலும்
மேன்மேலும் புதியகாற் றெம்முள்வந்து
மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர்.
ஆன்மாவென் றெகருமத் தொடர்பை யெண்ணி
அறிவுமயக் கங்கொண்டு கெடுகின்றீரே!
மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி
வசப்பட்டுத் தனைமறந்து வாழ்தல் வேண்டும். 33

சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா;
'ஸ்ரீதரன்யான் சிவகுமா ரன்யா னன்றோ?
நன்றிந்தக் கணம்புதிதாய்ப் பிறழ்து விட்டேன்;
நான் புதியவன்,நான் கடவுள்,நலிவி லாதோன்'
என்றிந்த வுலகின்மிசை வானோர் போலே
இயன்றிடுவார் சித்தரென்பார்;பரம தர்மக்
குன்றின்மிசை யொருபாய்ச்ச லாகப் பாய்ந்து
குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார். 34

குறியனந்த முடையோராய்க் கோடி செய்தும்
குவலயத்தில் வினைக்கடிமைப் படாதா ராகி
வெறியுடையோன் உமயாளை இடத்தி லேற்றான்
வேதகுரு பரமசிவன் வித்தை பெற்றுச்
செறியுடைய பழவினையாம் இருளைச் செற்றுத்
தீயினைப்போல் மண்மீது திரிவார் மேலோர்,
அறிவுடைய சீடா,நீ குறிப்பை நீக்கி
அநந்தமாம் தொழில் செய்தால் அமர னாவாய். 35

கேளப்பா!மேற்சொன்ன உண்மை யெல்லாம்
கேடற்ற மதியுடையான் குள்ளச் சாமி
நாளும்பல் காட்டாலும் குறிப்பி னாலும்
நலமுடைய மொழியாலும் விளக்கித் தந்தான்;
தோளைப் பார்த் துக்களித்தல் போலே யன்னான்
துணையடிகள் பார்த்துமனம் களிப்பேன் யானே;
வாளைப்பார்த் தின்பமுறு மன்னர் போற்றும்
மலர்த்தாளான் மாங்கொட்டைச் சாமி வாழ்க! 36


மேலும் விளக்கமாக அறிய 
பாரதி  கண்ட சித்தர்கள் என்னும் நூலில் 

பாரதி எவ்விதம் சித்தராக மாறினார், எத்தனை சித்தரகளுடன் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது என்பதை விளக்கமாக இந்த நூல் கூறுகிறது  


இந்நூல் வெளியீட்டார் 

                                              C .S.MURUKESAN PUBLISHER
                                              KURUNJI
                                             20,TEACHER KILDU KALANI
                                             RAJAJI NAGAR VIRIVU
                                            VILIVAAKKAM
                                            CHENNAI
                                            PH - 044-26502086

 

4 comments:

  1. ஐயா, குள்ளசாமிதான் ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள் (தபோவனம்) என்கிறார்கள் சிலர். இது சரியா. நன்றி. என்.ஆர். ரங்கனாதன்.

    ReplyDelete
  2. குள்ளசாமி சித்தர் புகழை பற்றி பாரதி கண்ட சித்தர்கள் ங்கற புத்தகத்துல நான் படிச்சேன் , மத்தபடி நான் அங்க போனது இல்லை

    அந்த புத்தகத்தை online மூலம் வாங்க விரும்பினால் லிங்க் இங்கே

    http://www.noolulagam.com/product/?pid=6690

    70 rs

    மத்தபடி பதிவு ல உள்ளதெல்லாம் நெட் ல தேடுனப்போ கிடைச்ச விஷயங்கள்

    ReplyDelete
  3. ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!
    ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!
    ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!
    ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!
    ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!
    ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!
    ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!
    ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!
    ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!
    ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!
    ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!
    ஞானானந்தா ஞானானந்தா ஸத்குரு நாதா ஞானானந்தா!!

    ReplyDelete
  4. https://youtu.be/Ixc-UhSbLxI
    அருள்மிகு ஸ்ரீ மாங்கொட்டை சித்தர் பற்றி ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முழு காணொளி.....

    ReplyDelete