SHIRDI LIVE DARSHAN

Wednesday, 1 May 2013

அகத்தியர் ( பொதிகை) மலைக்கு ஒரு பயணம்

குறுமுனிக்கு பூசை

அகத்தியர் வாழ்ந்து வரும், தென்றல் தவழ்ந்தோடும் பொதிகை மலையை, அகத்தியர் மலை என்றும் அழைக்கின்றனர்.

தமிழ் இலக்கணம், சித்த மருத்துவம், சோதிடம் ஆகியவற்றைப் படைத்து, சித்தர்களுக்கெல்லாம், தலையாய சித்தராக விளங்கும் தமிழ் முனிவர் அகத்தியரை, இறைவனாகவே சித்தர் வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் வணங்கி வருகின்றனர்.

அகத்தியர் வாழும் இப்பொதிகை மலையில் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரத்திலுள்ள அகத்தியரைத் தரிசிக்கச் செல்வதை புனிதப் பயணம் என்றும் சாகசப் பயணம் என்றும் கூறலாம்.

அபூர்வ மூலிகைகள், மனதைக் கவரும் அருவிகள், சிற்றோடைகள், ஆறுகள், எங்கு காணினும் இயற்கையின் கொடையான பசுமையான அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகள், புல்வெளிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள இப்பொதிகை மலை இயற்கை நமக்கு அளித்த கொடை.

இந்த அடர்ந்த காட்டில் சிறு அட்டை முதல் மான், காட்டெருமை, கரடி, சிறுத்தை, புலி, யானை, செந்நாய், பாம்பு, உடும்பு மற்றும் காடுகளில் உள்ள ஊர்வன, பறப்பன உள்ளிட்ட அனைத்து வனவாழ் உயிரினங்களும் உள்ளன.
தமிழ் முனிவரைத் தரிசிக்க கேரளத் தலைநகரான திருவனந்தபுரம் பி.டி.பி. நகரிலுள்ள வனவிலங்குக் காப்பாளர் அலுவலகத்தில் அனுமதி பெற்று, அவர்களது தகவலின் பேரில் போணக்காட்டிலுள்ள வனத் துறை சோதனை மையத்தில் பணம் செலுத்தி, அனுமதிச் சீட்டு பெற்று, அங்கிருந்து வாகனம் மூலம் சுமார் 10 கி.மீ. தொலைவு சென்று, போணக்காடு பிக்கெட் ஸ்டேசன் என்ற இடத்திலிருந்து, வனத் துறையினர் நமக்கு ஏற்பாடு செய்துள்ள வழிகாட்டியுடன் (எமஐஈஉ) மூன்று நாள் பொதிகை மலை பயணம் தொடங்குகிறது.

முதல் அரைமணிநேரப் பயணத்தில் நாம் முதலில் காண்பது விநாயகர் கோயிலை. அவரை வணங்கி நடைப்பயணம் தொடங்குகிறது. அங்கிருந்து சுமார் ஒரு மணி நேரப் பயணத்தில் கரமனையாறு அடைகிறோம். அடர்ந்த வனப்பகுதி இங்கிருந்துதான் தொடங்குகிறது.

 பனிபடர்ந்த அகத்தியர் மலை

இவ்வாறு மலை ஏற்றம், இறக்கம், சிற்றாறு, அருவிகள், புல்வெளி, அடர்ந்த வனம் ஆகிய வழிகளில் நடந்து, சுமார் 6 மணி நேர பயணத்தில் (நன்றாக நடைப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு மணி நேரம் ஆகலாம்) அதிருமலை எஸ்டேட் என்ற இடத்தை அடைகிறோம்.
அங்கு கேரள வனத் துறையினர் பக்தர்கள் தங்குவதற்காகக் கட்டியுள்ள அதிருமலை கேம்ப் ஷெட்டில் முதல் நாள் இரவு தங்குகிறோம். குறுமுனிவரின் வழிபாட்டுக்குக் கொண்டு செல்லும் பூஜைப் பொருள்களை எடுத்துக் கொண்டு, அதிருமலையில் காவல் தெய்வமாக உள்ள தெய்வத்தை வணங்கிவிட்டு நடைப்பயணம் தொடங்குகிறது.

சுமார் 1 மணி நேர நடைப்பயணத்தில் பொதிகை மலையின் அடிவாரத்தை அடைகிறோம். அங்கு சிறிது நேரம் ஓய்வு, அங்குள்ள தென் பொதிகை மானசரோவரில் சிறு குளியலை முடித்துவிட்டு (இது முற்றிலும் மூலிகை நீரைக் கொண்டது) மீண்டும் நடைப்பயணம். 15 நிமிட நடைப்பயணத்தில் தமிழக வனப் பகுதி எல்லையான சங்கு முத்திரை என்ற இடத்தை அடைகிறோம்.

இது கடல்மட்டத்திலிருந்து சுமார் 4,000 அடி உயரம் கொண்டது. சங்கு போன்ற அமைப்பை உடையதால் இப்பெயர். கேரளத்தினர் இப் பகுதியை "பொங்காலைப்பாறை' என்று கூறுகின்றனர். கேரளத்தவர்கள் இங்கு வந்து பொங்கலிட்டு, அகத்தியரை வழிபடுவதால் இந்த இடம் பொங்காலைப்பாறை என்றழைக்கப்படுகிறது.

இச் சங்கு முத்திரை பகுதியின் மற்றொரு பள்ளத்தாக்கில் நமது வற்றாத ஜீவநதியாம், பொருநை என்று அழைக்கப்படும் தாமிரவருணி உற்பத்தி இடமான பூங்குளம் சுனை உள்ளது.

 கயிற்றின் துணையுடன்

இந்த சங்கு முத்திரை பகுதியிலிருந்துதான் பொதிகை மலையை நோக்கிய மிகவும் செங்குத்தான பாதை தொடங்குகிறது. இப்பாதையில் பெரும் பகுதி பாறைகளாகவே காணப்படுகிறது. இச்சிகரத்தின் பாதி உயரம் வரை, இடது புறத்தின் மரங்கள் நிறைந்த மழைநீர் வழியும் சாய்வான பகுதி வழியே ஏறி சென்று, பின் வழித்தடங்கள் அற்ற பாறைகள் வழியே துன்பத்தைப் பொருள்படுத்தாது, காலும், கையும் ஊன்றி மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கி, நாக்கு வறண்டு, பின் செங்குத்தான பகுதியில் கயிறு மற்றும் இரும்புக் கயிறு (ரோப்) பிடித்து கவனத்துடன் ஏறிச் சென்றால் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரமுடைய பொதிகை மலை சிகரத்தை அடையலாம்.

அங்கு குட்டையான மரங்களைக் கொண்ட சிறு சோலையில் குறு முனிவர் அகத்தியரின் ஏகாந்த சிலையைத் தரிசிக்கும்போது, அந்த எண்ணங்கள் எல்லாம் மறந்து, இந்தத் தரிசனத்துக்குத்தான் நாம் இப்பிறவி எடுத்தோமோ என்ற நிலை நமக்கு ஏற்படும்.

இந்த உச்சிப் பகுதியில் திடீர், திடீரென வெயிலும் சில நேரங்களில் உடலை நடுங்கச் செய்யும் பலத்த குளிர் காற்றும், சில நேரம் மழையும், சாரலும் ஏற்படும்.

 

இப்படி ஆனந்த அனுபவத்துடன், கொண்டு சென்ற பூஜைப் பொருள்களால், குறு முனிவருக்கு அபிஷேக, ஆராதனை செய்து, கூட்டு வழிபாடு நடைபெறும். 
 


http://farm8.staticflickr.com/7215/7398003992_37369c6376_m.jpghttp://3.bp.blogspot.com/-lPublcwmJ7E/UTNyCV6cNsI/AAAAAAAAAHE/WryaUXIQYos/s270/Pothigai-Agathiyar-Perumaan_small.jpg
தொடர்ந்து மிகவும் கவனமாக கீழே இறங்கத் தொடங்கி, மூன்று மணி நேரப் பயணத்தில் மீண்டும் அதிருமலை கேம்ப் ஷெட்டை அடைந்து அங்கு உணவருந்தி விட்டு, சிறிது நேரம் ஓய்வுக்குப் பின் இரவு 7 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும். அதன் பின் இரவு பொழுதை அங்கு கழித்துவிட்டு, மூன்றாம் நாள் காலையில் அதிருமலை காவல் தெய்வத்தையும், பொதிகை சிகரத்தையும் வணங்கிவிட்டு பயணம் தொடங்கி, சுமார் 5 மணி நேர நடைப்பயணத்துக்கு பின் போணக்காடு பிக்கெட் ஸ்டேஷனில் பயணம் நிறைவு பெறுகிறது.

இம் மூன்று நாள் பயணத்தின்போது சுத்தமான காற்று, மூலிகை கலந்த நீர், செல்போன் தொந்தரவு இல்லாத வெளி உலகத் தொடர்பின்மை, பார்க்கும் இடங்கள் எல்லாம் மனதைக் கவரும் பசுமை வெளி ஆகியவற்றால் நமது உடலும், உள்ளமும் புத்துணர்வு பெற்றது என்றால் அது மிகையாகது.

தமிழ் முனிவரைத் தரிசிக்க ஆண்டுதோறும் ஜனவரி 15 முதல் சிவராத்திரி வரை கேரளத்தவர்கள் தினமும் குழுவாக (நாள் ஒன்று சுமார் 200 பேர்) சென்று வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்ரல் மாதம் முதல் சென்று வருகின்றனர்.


1998-ம் ஆண்டு தமிழக வனத் துறை பொதிகை மலை செல்ல அனுமதி மறுத்து விட்டது. பின் பொதிகை மலை புனித யாத்திரைக் குழுவினர் மற்றும் பக்தர்களின் முயற்சியால், வனத் துறை சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் 1999-ல் பொதிகை மலை செல்ல அனுமதி வழங்கியது.

இந்நிலையில், 2009-ல் தமிழக வனத் துறை தமிழகம் வழியாக பொதிகை மலைக்குச் செல்ல அனுமதி மறுத்ததுடன், கேரளம் வழியாக செல்ல அறிவுறுத்தியது.

ஓம் அகத்தீசாய நமஹ 

From : dinamani.com

1 comment:

  1. OHM Sri Agatheesaya Namaha

    I would like to join the pilgrimage to the Holy Pothigaimalai to have darshan of Sri Agasthiar mammuni.

    Please let me know when you are making pilgrimage to this sacred hill

    ReplyDelete