SHIRDI LIVE DARSHAN

Friday, 29 August 2014

திருவாசகம் - சிவபுராணம் - MP3





 சிவபுராணம்  திருவாசகம் . MP 3
                 
http://www.mediafire.com/listen/rbunes763407nfa/THIRUVASAGAM_Sivapuranam.mp3


நமச் சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க

பொருள்: 

 நமச்சிவாய என்னும் மந்திர சொரூபம் வாழ்க. அந்த ஐந்தெழுத்தின் பொருளாக இருக்கும் இறைவனும், இந்த உலகத்தில் அனைத்துமாகவும், அதில் ஊடுருவியிருந்து அதை ஆள்கின்ற சொக்கநாதருடைய திருவடி வாழ்க. இறைவனைக்காட்டிலும் இறைவனுடைய நாமத்திற்கு மகிமை அதிகம். எனவே நமசிவாய எனும் ஐந்தெழுத்தை முதலில் கூறி, அதன் பொருளாகிய இறைவனைப் பின் கூறினார். மங்களமாகிய ஐந்தெழுத்தைக்கொண்டு நூலைத்தொடங்கினார். வாழ்க இறைவனிடத்து உள்ளன்பு மேலிட்டுப் பொங்கும் போது, அவனுக்கு என்ன தீங்கு நேருமோ என்ற அடியார் அஞ்சி, மனம் கலங்கிப் பரிவினால் அவனை வாழ்த்துதல் இயல்பு.

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க

பொருள்:

இமைக்கும் அளவு காலம் கூட என்னுடைய நெஞ்சிலிருந்து நீங்காதவனுடைய திருவடி வாழ்க.

கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க

பொருள்: 

திருப்பெருந்துறைக்குத் தலைவனாகிய உயர்ந்த மாணிக்கம் போன்றவனுடைய திருவடி வாழ்க.மாணிக்க வாசகர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டது கோகழி எனக்கூறப்படும் திருவாவடுதுறையிலேயாம். அது திருப்பெருந்துறை என்றும் கூறப்படுகிறது.

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க

பொருள்:
ஆகமப் பொருளாகி நின்று நினைத்த நெஞ்சம் தித்திப்பவனுடைய திருவடி வாழ்க.

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

பொருள்:

 ஒன்றாக இருப்பவனும் பலவாக இருப்பவனும் ஆன இறைவனுடைய திருவடி வாழ்க.

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க

பொருள்:
மனக்கலக்கத்தை போக்கி என்னை ஆட்கொண்டருளிய மகாப்பிரபுவினுடைய திருவடி வெற்றி பெறுக.

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க

பொருள்: 

பிறவித்துன்பங்களை ஒழித்தருளுகின்ற சிவபெருமானுடைய வீரக்கழலை அணிந்த திருவடிகள் வெற்றி பெறுக.

புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க

பொருள்: 
அன்பில்லாத பிறர்க்கு வெகு தூரத்தில் இருப்பவனுடைய தாமரை போன்ற திருவடிகள் வெற்றி பெறுக.

கரங்குவிவார் உண்மகிழும் கோன் கழல்கள் வெல்க

பொருள்:

அன்போடு கைகளைக் கூப்பி வணங்குவோருடைய உள்ளத்தை மகிழ்விக்கும் இறைவனுடைய திருவடிகள் வெற்றி பெறுக.

சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

பொருள்:

தலையால் வணங்குபவர்களை உயர்த்துகின்ற சிறப்புடையவனது திருவடிகள் வெற்றி பெறுக.

ஈசன் அடிபோற்றி எந்தை அடி போற்றி

பொருள்: 

ஈசனது திருவடிக்கு வணக்கம். எம் தந்தையின் திருவடிக்கு வணக்கம்.

நேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி

பொருள்:  

ஒளிமயமானவனது பாதங்களுக்கு வணக்கம். செந்தாமரை மலர் போன்ற சிவந்த பாதங்களுடைய சிவனுக்கு வணக்கம்.

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி

பொருள்:  

அன்பில் ஊறியுள்ள தூயவனது திருவடிக்கு வணக்கம்.

மாயப்பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி

பொருள்:  

மாயையின் விளைவாகிய பிறப்பு, இறப்பு என்னும் மாறுபாட்டை அகற்றுகிற இறைவனது திருவடிக்கு வணக்கம்.

சீரார் பெருந்துறைநம் தேவன் அடி போற்றி

பொருள்:  

மேன்மை பொருந்திய திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் நம் கடவுளின் திருவடிக்கு வணக்கம்.

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

பொருள்: 

தெவிட்டாத  ஆனந்தத்தை ஊட்டியருளுகின்றவனும் மலைக்கு ஒப்பாகியவனும் ஆகிய சிவனுக்கு வணக்கம்.

சிவனவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனருளாலே அவன் தாள் வணங்கி
சிந்தை மகிழச் சிவபுராணந் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்


பொருள்:  

சிவபெருமான் எப்போதும் என் மனத்தில் வீற்றிருப்பதால், அவனது திருவருளை துணையாக கொண்டு, அவனது திருவடி தொழுது நான் ஆனந்தம் அடைதல் பொருட்டும், என் பழவினைகள் கெடுதல் பொருட்டும், எப்போதும் நிலைத்துள்ள சிவ தத்துவங்களை உணர்ந்து ஓதுவேன்.

கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி

பொருள்: 

நெற்றிக்கண்ணையுடைய உன் திருவருள் நோக்கம் புரிந்து வழிகாட்ட நான் உன்னை வந்தடைந்து,

எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி

பொருள்: 

கணக்கிட முடியாத மகிமைகளையுடைய உனது திருவடியை வணங்க,

விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய்

பொருள்: 

நீ விண்ணுலகு மண்ணுலகு ஆகியவைகளை நிரப்பி, அவைகளுக்கு அப்பாலும் பெருகி இருக்கிறாய். கட்புலனாகின்ற ஒளியாய் இருக்கின்றாய். 

எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும் சீர்

பொருள்: 

அளவு கடந்து எங்கும் நிறைந்திருக்கிறாய்.

பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன்

பொருள்:   

உன்னுடைய பேரமைப்பைப் பாராட்டுகிற வழியை வினையில் கட்டுண்டு கிடக்கிற நான் சிறிதேனும் அறிந்திலேன்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்


பொருள்:  
கல், புல் முதலிய பிறவிகளில்  வாழ்வை துவக்கி அறிவோடு கூடிய மானுடன் ஆகும் வரை பல்கோடிப் பிறவிகளை எடுத்து இறைவா நான் சலிப்படைந்து விட்டேன்.

மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்

பொருள்:

இறைவா! நான் பல பிறப்புகள் எடுத்திருந்தாலும், உனது ஒப்பற்ற திருவடிகளைச் சேவிக்கவே அது எனக்கு வீடு பேறு ஆயிற்று என்பதில் சந்தேகமில்லை.

உய்யஎன் உள்ளத்துள் ஓம்காரமாய் நின்ற

பொருள்:  

என் உள்ளத்தினுள்ள ஓங்காரமாக நீ ஒலித்து கொண்டிருப்பதை நான் உணரும் பொழுது உய்வு அடைகிறேன்.

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் 
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே

பொருள்: 

மெய்ப்பொருளே, தூயவனே, காளை வாகனனே! வேதங்களால் ஐயா! என அழைக்கப்படுபவனே ! நீ உயர்ந்தும், தாழ்ந்தும் விரிந்தும் உள்ள நுண் பொருள் ஆகின்றாய்.

வெய்யாய் தணியாய் இயமானனாம் விமலா

பொருள்:  

வெப்பமாயும், குளிர்ந்தும் உயிர்த்தத்துவமாயும், உள்ள தூயவனே!

பொய்யாயின வெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே

பொருள்: 

என்னிடத்து நிலையற்றவைகளை எல்லாம் அகற்றுதற்கு அருள்புரிந்து மெய்ஞ்ஞானமாய் ஒளிர்கின்ற பரஞ்சோதியே!

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே


பொருள்: 

எந்தவிதமான அறிவுமில்லாத எனக்கு இன்பத்தை நல்கும் பெரியோய்! எனது மயக்கத்தை நீக்குகிற சிவஞானமே!

ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்


பொருள்: 

பிறப்பும், வாழும் கால அளவும் முடிவும் இல்லாத நீ அண்டங்களை உண்டு பண்ணுவாய். நிலைத்திருக்கச்செய்வாய். துடைத்திடுவாய். அதற்கிடையில் உயிர்களை உன் மயமாக்குவாய்.

போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பில்

பொருள்: 

பிறவித்தளையைப் போக்குவிப்பதும் என்னை நினது திருத் தொண்டில் புகும்படி செய்வதும் நின் கருணையாகும்.

நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றணம்  மனம்கழிய நின்ற மறையோனே


பொருள்: 
பூவில் மணம் போன்றவனே! நீ வணங்காதவர்க்குத் தொலைவிலும், வணங்குபவர்க்கு பக்கத்திலும் இருக்கிறாய். மாறுபடுகிற மனம் அற்றவிடத்து மிளிர்பவன் நீயன்றோ!

கறந்தபால் கன்னலொடு நெய் கலந்தாற்போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று


பொருள்: 

கறந்த ஆவின் பாலோடு கருப்பஞ்சாற்றையும் நெய்யையும் கலந்து உண்ணும் பொழுது உண்டாகும் இன்பம் போன்றது, இறைவனிடத்திருந்து வரும் பேரின்பம், அப்பேரின்பமோ நல்ல அடியவர்களது உள்ளத்துள் தேன்போன்று ஊறித் தெவிட்டாது தித்திக்கின்றது.

பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்

பொருள்: 

தொடர்ந்து வருகின்ற பிறவிகளை ஒழிக்கின்ற எங்கள் தலைவா!

நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த

பொருள்:  

கண்ணுக்கு நன்கு புலனாகும் ஐந்து வண்ணங்களோடு கூடியிருந்தும் கூட, செருக்குடனிருந்த தேவர்கள் உன்னைப் போற்றி துதித்தபோது,

மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை


பொருள்:  

அவர்களுக்கு புலனாகாமல் மறைந்திருந்தவனே! திறமை வாய்ந்துள்ள வினைக்கு அடிமைப்பட்டவன் நான். என்னை நான் அறிந்து கொள்ளாதபடி அஞ்ஞான இருள் என்னை மூடிக்கொண்டிருக்கிறது.

அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டிப்

பொருள்:  

நல்வினை தீவினை என்று சொல்லப்படும் கட்டு அறுக்க முடியாத பாசக்கயிறு என்னைக் கட்டிப் பிணித்து வைத்திருக்கிறது.

புறம் தோல் போர்த்து எங்கும் புழுஅழுக்கு மூடி

பொருள்:  

என் உடலின் உள்ளே புழுவுக்கு ஒப்பான தாதுக்களின் தத்துவம் நிறைந்திருக்கிறது. அது ஓயாத அழுக்காக மாறிக்கொண்டிருக்கிறது.  அத்தகைய புல்லிய அமைப்பானது புறத்தில் தோலைப்போர்வையாக போட்டு மூடி வைக்கப்பட்டிருக்கிறது.

மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை

பொருள்:  

ஓயாது அழுக்கையே கொட்டிக்கொண்டிருக்கிற ஒன்பது துவாரங்களை உடைய உடல் என்னும் சிறு வீட்டில் அடைபட்டிருக்கின்றேன்.

மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய

பொருள்: 

அதில் அமைந்துள்ள ஐந்து இந்திரியங்களும் என்னை ஏமாற்றித் துன்புறும்படி செய்கின்றன.

விலங்கு மனத்தால் விமலா உனக்குக் 
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன் மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி


பொருள்: 

மிருகத்துக்கு ஒப்பானது என்மனம். உன்னிடத்து உருகி அன்பு பூண்டு அது நல்ல மனமாகும்படி நீ அருள்புரிந்துள்ளாய். மண் உலகில் உன் காட்சியைக்காணும்படி நீ அருள்புரிந்துள்ளாய்.

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே


பொருள்:  

நாயினும் கீழாகிய என்னிடத்து மெய்ப்பொருளாகிய நீ தாயினும் மேலான தயாளுவாகக் கருணை காட்டியிருக்கிறாய்.

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

பொருள்: 

எங்கும் நிறைவாயிருந்து ஒளிர்கின்ற பழுதற்ற சோதியே,

தேசனே தேனார் அமுதே சிவபுரனே

பொருள்: 

அறிவொளியானவனே, தேனே, அரிய அமிர்தமே, சிவபுரனே,

பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே

பொருள்: 

பாசமாகிய கட்டையறுத்து, என்னை உய்விக்கும் குரு நீ.

நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சங்கெடப்

பொருள்:

ஒன்று படுத்துகிற அருளைச்சொரிந்து, என் நெஞ்சில் உள்ள குறைபாட்டை நீ அகற்றுகிறாய்.

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே

பொருள்:  

குற்றம் நிறைந்த என் நெஞ்சினின்றும் பிரிந்து போகாது, நிலைத்திருக்கிற கருணைப்பேராறே!

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே

பொருள்:

தெவிட்டாத அமிர்தம் நீ. அளப்பரிய பெருமானே,

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே

பொருள்: 

ஆராயாதவர்களது மனத்தில் மறைந்திருக்கும் ஒளியே,

நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே

பொருள்:  

என் மனத்தை நீராய் உருகப்பண்ணி, எனது அரிய உயிராய் நிலைத்திருப்பவன் நீ.

இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே

பொருள்: 

நீ பரம் பொருள் ஆதலால் உனக்கு இன்பமும் துன்பமும் இல்லை.

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாம்

பொருள்: 

உயிர்கள் அனைத்துமாய் நீ விளங்குவதால்,அவ்வுயிர்கள் அனைத்தின் இன்ப துன்பங்கள் உன்னுடையவைகளாம். உன்னை வழிபடுபவர்களுக்கு நீ முற்றிலும் சொந்தமாக இருக்கின்றாய். நீ உலகனைத்துமாய் இருக்கின்றாய். ஆயினும் அதனால் உன் நிஜ சொரூபம் சிறிதேனும் மாறவில்லை.

சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே

பொருள்: 

முரண்பாடுகளெல்லாம் உன்னிடம் கூடுகின்றன. நீ ஆத்ம ஜோதி. கட்புலனாகாத இருள். தோன்றியுள்ள பெருமை. தோன்றாப்பெருமையாகிய அனைத்தும் உனக்கே சொந்தம்.

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

பொருள்: 

சகுனப்பிரம்மம் என்னும் நிலையில்  நீ பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு ஆதிமூலம். இறுதியில் அது உன்னிடத்தில் ஒடுங்குகிறது. இடைநிலையிலும் அது உன்னிடத்திலேயே இருக்கிறது. நிர்க்குண பிரம்மம் என்னும் நிலையில் இந்த விகாரங்கள் உன்னை வந்து தொடுவதில்லை.

ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே

பொருள்: 

ஈசா நீ வலிய  வந்து என்னை ஆட்கொண்டுள்ளாய். நீ எனக்கு தந்தையாகவும் இறைவனாகவும் இருக்கின்றாய்.

கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின்

பொருள்:

மிகக் கூர்மையான மெய்ஞ்ஞானம் படைத்தவர்களே உன்னை உள்ளவாறு உணர்ந்து கொள்வார்கள்.

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே

பொருள்: 

ஊனக்கண் கொண்டு காண முடியாது. ஆனால் தெளிந்த மனக்கண் கொண்டு உன்னைக்காணலாம். அந்தக்கரணம் அல்லது மனக்கண் பண்படுதற்கு ஏற்ப நீ நன்கு உணரப்படுகின்றாய்.

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே

பொருள்: 

பூரணனாகிய நீ எங்கும் இருப்பதால், உனக்கு போதல், வருதல், பிற பொருளை சேர்தல் என்பன இல்லை. கலப்பதற்கு வேறு பொருள் ஒன்றும் இல்லாததால் நீ எப்போதும் புனிதமாகவே இருக்கிறாய். ஆதலால் நீ புண்ணியன். நீ சுத்த சிவம்.

காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே

பொருள்: 

நீ எப்போதும் சாட்சியாக இருந்து என்னைக் காப்பாற்றி வரும் வேந்தன். ஊனக்கண் கொண்டு காணமுடியாத மனசாட்சி எனும் மாறாத ஞானச்சுடர் நீ.

ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய் நின்ற

பொருள்: 

நன்னெறியினின்று உதிக்கின்ற பேரின்ப பெருக்கே. நீ எனக்கு தந்தையாகவும், அதற்கு மேம்பட்டும் இருக்கிறாய்.

தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுர்வாய்

பொருள்: 

சாஸ்வதமாய் உள்ள சுயஞ்சோதிப்பிழம்பே, நீ சொல்லில் அடங்காத பேருணர்வுப் பரம்பொருள்.

மாற்றமாம் வையகத்தே வெவ்வேறே வந்தறிவாம்

பொருள்: 

இடையறாது மாறுபாடு அடைந்து வருகிற நிலவுலகில் வெவ்வேறு வடிவங்களுடன் நீ அறிவாக விளங்குகின்றாய்.

தேற்றனே தேற்றத்தெளிவே என் சிந்தனையுள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே


பொருள்: 

தெளிவானவனே, நிறைந்த தெளிவுடையவனே, நீ என் உள்ளத்தினுள் ஊற்றெடுத்துப்பெருகி உண்பதற்கான அரிய அமிர்தமானாய். என்னை உடைமையாய்க் கொண்டு இருப்பவன் நீயே.

வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப

பொருள்: 

சிறுவன், இளைஞன், கிழவன் என்று வெவ்வேறு விகாரங்களைஉடைய தசையுடலின் உள்ளே குடியிருக்கச் சகியேன்.

ஆற்றேன் எம் ஐயா அரனேயோ என்றென்று 
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்

பொருள்: 

உன்னுடைய அடியார்கள் உன்னை ஐயனே என்றும், அரனே என்றும் வழுத்தி, உன்னை பாராட்டி, உன் மயமாயிருந்து பொய் உடலை தவிர்த்து, சிவ சொரூபமானார்கள். நானும் அப்படியாக வேண்டும்.

மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே

பொருள்: 

 மெய்ஞ்ஞானத்தை திரிபு படுத்தும் தன்மை பொறிகளுக்கு உண்டு. அப்பொறிகளுக்கு உறைவிடம் இவ்வுடல்.

கள்ளப்புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே

பொருள்: 

என் உள்ளத்தினுள் சிவ போதத்தை வளர்ப்பதற்கு ஏற்ப நீ இந்த உடல் அமைப்பை கலைத்து விடுகிறாய். அதனால் நான் வினைக்கு வசப்பட வேண்டியதில்லை. மீண்டும் இவ்வுலகில் வந்து பிறக்கவும் வேண்டியதில்லை.

நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே

பொருள்: 

உயிர்கள் எல்லாம் அயர்ந்து உறங்குகின்ற வேளையிலும் நீ நித்தியமாய் விழித்திருக்கும் தலைவன் ஆகின்றாய்.

தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

பொருள்: 

அகில அண்டங்களையும் ஒழுங்காக இயக்குவித்தல் என்னும்  கூத்தை நடத்துபவனே! நீ சிறப்பாகச் சிதம்பரம் என்னும் தலத்திலும் தமிழ்நாட்டிலும் திகழ்கின்றாய்.

அல்லல் பிறவி அறுப்பானே ஓஎன்று

பொருள்: 

ஓ என்று ஓலமிட்டு அரற்றிப் பூரணனை நாடுபவனது பிறவியையும் அதனின்று விளைகிற துன்பத்தையும் அகற்றுபவன் அவனேயாம்.

சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.


பொருள்:  

சொல்லில் அடங்காத சொற்கொண்டு போற்ற வேண்டும். இறைவனுடைய சொரூபத்தை உள்ளபடி உணர்ந்து போற்றுபவரே அவனது சன்னதி சார்கின்றனர். அப்படி சன்னதி சார்பவர்களை ஏற்கனவே சார்ந்த சிவ பக்தர்கள் பணிவோடு வணங்கி வரவேற்கின்றனர்.



மாணிக்கவாசகரின் திருவாசகம் - ஒரு அறிமுகம் 


http://tamilnation.co/sathyam/east/thiruvasagam/tvasagam0.htm

http://temple.dinamalar.com