SHIRDI LIVE DARSHAN

Sunday, 29 January 2012

யோக வாழ்க்கை" என்ற நூலில் மனம் - ஜீவனின் முக்கிய கரணம்


"யோக வாழ்க்கை" என்ற நூலில் மனம் - ஜீவனின் முக்கிய கரணம்

விலங்கு உடலாலும், உணர்வாலும் வாழ்கிறது. மனிதனுக்கு மனம் உண்டு. ஆனால் அவன் வாழ்வில் மனம் பெரும்பங்கு கொள்ளவில்லை. விலங்குக்குச் சிந்தனையில்லை, மனிதனுக்குச் சிந்தனையுண்டு, சிந்திக்கும் திறனிருந்தாலும், ஆசை எழும் நேரத்திலும், அவசியம் உள்ளபொழுதும், மனிதன் சிந்தனையை விலக்கி உணர்வின்படி நடக்கின்றான். சொத்து, சம்பந்தம் போன்ற விஷயங்களில் மனிதன் உணர்வைப் புறக்கணித்து, தேவைப்படி, உடலையொட்டி முடிவு செய்கிறான். மனம் உடையவன் என்பதாலேயே அவனுக்கு மனிதன் எனப் பெயர். அவனுடைய ஜீவனில் முக்கிய கரணமாக மனத்தைக் கூறினாலும், முக்கியக் கரணம் மனமில்லை. அது ஆன்மாவாகும். இன்றுவரை ஆன்மாவே மனிதனுக்கு முக்கிய கரணமாக உள்ளது. இருந்தாலும் இதுவே முடிவன்று. வருங்காலத்தில் சத்திய ஜீவியம் முக்கியக் கரணமாகும் என்பது ஸ்ரீ அரவிந்தம்.
விஞ்ஞானம் உடலைப் பற்றிச் செய்த ஆராய்ச்சி அதிகம். அவர்கள் கண்டு கொண்டதும் ஏராளம். உணர்வைப் பற்றிப் பண்டைய நாகரீகங்கள் ஏராளமாகத் தெரிந்திருந்தனர். கல்வி பரவும்பொழுது அந்தப் புலன்கள் மறைய ஆரம்பித்தன. 12 புலன்கள் 5 ஆக மாறின. புலன் என்பது உணர்வு. உளநூல் புலன்களை ஆராய்கிறது. முடிவாகச் சொல்லக் கூடியவை குறைவு. மனம் என்பதை அறிஞர்கள் அறிவார்கள். ஆனால் மனம் எப்படி உற்பத்தியாகிறது, எப்படிச் செயல்படுகிறது என்பதை ஆராய வேண்டும் என்று அறிஞர்கட்கு இன்றும் தோன்றவில்லை. அந்த ஆராய்ச்சியைத் தொடங்கும் உரிமை ஆன்மீகத்திற்கேயுண்டு. உலகெங்கும்,
  • ஆன்மீகப் பெருமக்கள் மனத்தைப் பற்றி ஏராளமாக அறிவார்கள்.
  • ஆனால் மனத்தின் ஆதி, அவசியம், அமைப்பு பற்றி இதுவரை இந்திய ரிஷிகளோ, மேல்நாட்டு விஞ்ஞானிகளோ, தத்துவ ஞானிகளோ சிந்தித்ததாகத் தெரியவில்லை.
  • ஸ்ரீ அரவிந்தம் மனம் எப்படி ஏற்பட்டது, எங்ஙனம் செயல்படுகிறது எனக் கூறுகிறது.
  • ஆன்மா, மனம், உணர்வு, ஜடம் ஆகியவற்றைப் பற்றியும் ஸ்ரீ அரவிந்தம் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு அதன் முடிவுகளை Life Divine மூலம் கூறுகின்றது.
  • அடுத்த கட்டத்திற்கும் ஸ்ரீ அரவிந்தம் போகிறது. சிருஷ்டியை அதேபோல் ஆராய்கிறது.
மனம் உற்பத்தியான தத்துவத்தைச் சுருக்கமாகக் கூறி அதன் அம்சங்களை விளக்கமாகக் கருதுவோம். மனத்தின் ஆதி சத்தியஜீவியம். இது இரு பிரிவுகளாக மாறும்பொழுது இடைப்பட்ட நிலையில் மனம் உற்பத்தியாகிறது. இடைப்பட்ட நிலையில் இருப்பதால் அதனால் ஒரு பக்கம்தான் பார்வையுண்டு. ஆனால் திரும்பி அடுத்த பக்கத்தைப் பார்க்க முடியும். சத்திய ஜீவியம் இரண்டாகப் பிரியும்பொழுது மனம் ஏற்பட்டது. மனத்தின் கடமை பொருள்களைத் துண்டாடுவதாகும். இதுவே அதன் தத்துவம். மனத்திலிருந்து உணர்வும் வாழ்வு உடலும் (ஜடமும்) ஏற்பட்டது என்பதையும் ஸ்ரீ அரவிந்தர் இங்குக் கூறுகிறார். மனத்திற்கு ஞானம், உறுதி (knowledge, will) என இரு பகுதிகளுண்டு. ஞானத்திற்கு உறுதியில்லை, உறுதிக்கு ஞானமில்லை. இரண்டும் சேர்ந்து செயல்பட வேண்டும். ஞானம் உறுதியுடன் கலந்தால் ஓரளவு தன்னை இழந்துவிடுகிறது. உறுதி ஞானத்தை ஏற்றால் சக்தி பிறக்கிறது. இந்த சக்தியே உணர்வு, வாழ்வு என நாம் அறிவதாகும். ஜடம் ஏற்பட்ட விதம் மேலும் தத்துவமானது என்பதால் மனம் செயல்படும் வழிகளைக் கருதுவோம். மனத்தின் முக்கியக் குணங்கள், தன்மைகள், அம்சங்கள், திறன்களாவன,
  • ஒன்று பலவானால் சிருஷ்டியுண்டு. ஒன்றைப் பலவாக மாற்ற ஏற்பட்ட கருவி மனம்.
  • மனம் சத்திய ஜீவியத்தின் துணைக் கருவி.
  • இதன் கடமை பொருள்களைத் துண்டிப்பது.
  • சத்திய ஜீவியம் தன் ஆதி என்பதை நினைவு கூறும்வரை மனத்திற்கு அறியாமையில்லை.
  • ஆதியை மறந்தால் மனத்திற்கு அறியாமை எழும்.
  • சிருஷ்டி சத் என்பதில் ஆரம்பித்து சித், ஆனந்தம், சத்திய ஜீவியம்வரை வந்து மனத்துடன் முடிகிறது.
  • சிருஷ்டியின் கடைசி கட்டம் மனம், ஜடமன்று.
  • வாழ்வும், ஜடமும் மனத்தின் மற்ற உருவங்கள்.
  • வாழ்வில் மனம் ஓரளவு மறைந்துள்ளது.
  • முழுவதும் மனம் வாழ்வில் மறைந்தால் வாழ்வு ஜடமாகும்.
  • மனத்தின் கருவி சிந்தனை.
  • சிந்தனையின் முடிவு அறிவு.
  • சிந்தனைக்கு அடிப்படை ஜடமான எண்ணம், உயர்வு சூட்சும எண்ணம்.
  • சிந்தனைக்குக் கருவி எண்ணம்.
  • எண்ணத்திற்கு 3 பகுதிகளுண்டு ஜடம், சூட்சுமம், காரணம்.
  • எண்ணம் முழுவதும் சூட்சுமமானால், அது அழியாது.
  • எண்ணம் மூன்றாம் நிலையான காரணத்தை எட்டினால் மனம் மேதையாகும்.
  • மூளையில் நிலவும் சொல்லான எண்ணம் ஜடம்.
  • மூளையினுள் நுழையுமுன் எண்ணம் சூட்சுமமானது.
  • நினைவு, சிந்தனை, அறிவு, கற்பனை, முடிவு, பாகுபாடு, ஆராய்ச்சி போன்றவை மனத்தின் திறன்கள்.
ஜடமும் வாழ்வும் மனத்தால் உற்பத்தி செய்யப்பட்டவை. நடைமுறையில் மனம் வாழ்வாலும், ஜடத்தாலும் ஆளப்படுகிறது. தானே அதிபதி என மனம் உணர்ந்தால் மனத்திற்கு விடுதலையுண்டு. இன்று ஜடம் மனத்தை ஆள்கிறது. மனம் தானே அதிபதி என அறிந்தால் மனம் ஜடத்தை ஆளும். உடலுக்குப் பசித்தால், உணவு கேட்கிறது. இன்று பசிக்கும் பொழுது நாம் உடலைச் சும்மாயிரு எனக் கூற முடியாது. இதை ஜடமான உடலுக்கு மனம் கட்டுப்பட்டதாகக் கூறுகிறார்கள். மனம் தானே அதிபதி என்று கண்டுகொண்டால், உடலை, உனக்குப் பசி தேவையில்லை என்று கூறினால் வயிறு பசிக்காது. அதுவே மனம் ஜடத்தை ஆள்வதாகும். மனத்திற்கு மேலே ஆன்மாவுண்டு. ஜடம் உடலுக்குக் கீழேயுள்ளது. Life Divineஇல் 1039ஆம் பக்கத்தில்,
  • புறம் அகமானால், ஆன்மா ஜடத்தை ஆளும் என்கிறார் பகவான்.
அது முடிவான சித்தி. அதன் முதல் நிலைகள் நமக்குப் பயன்படும். 'கூ' என வைத்தியமுறையுண்டு. வியாதி வந்தால் அம்முறைப்படி, எனக்கு வியாதியில்லை என மந்திரமாக இடைவிடாமல் கூற வேண்டும். வியாதி குறைந்து மறையும். உடல் தனக்கு வியாதி வந்ததாக நினைக்கிறது. உடல் நினைப்பதை மனம் ஏற்கிறது. மனம் ஏற்பதால் வியாதிக்கு உயிர் வருகிறது. இதுவே 'கூ' முறையின் தத்துவம். மனம் தனக்கு வியாதியில்லை என்பதைச் சொல்வதால், மனம் வியாதியை நம்பாதே என உடலுக்குக் கூறுகிறது. உடல், மனம் கூறுவதை ஏற்றால் வியாதி குணமாகிறது.
  • மனம் விலகினால், வியாதி விலகும்.
சச்சிதானந்த சத், ஜடமாகவும்; சித், வாழ்வாகவும்; ஆனந்தம் சைத்தியப் புருஷனாகவும்; சத்திய ஜீவியம் மனமாகவும் மாறுகிறது என்பது தத்துவம்.
பரிணாமத்தால் பாதை மாறுகிறது.
சிருஷ்டி : பிரம்மம் → சத் → சித் → ஆனந்தம் → சத்தியஜீவியம் → மனம் → வாழ்வு → ஜடம்
பரிணாமம் : ஜடம் → வாழ்வு → மனம் → சத்தியஜீவியம் → ஆனந்தம் → சித் → சத் → பிரம்மம்
சிருஷ்டியில் பிரம்மம் பல நிலைகளைக் கடந்து ஜடமாகிறது. பரிணாமத்தில் ஜடம் பல நிலைகளைக் கடந்து பிரம்மமாகிறது. சிருஷ்டியில் பிரம்மம் தவிர வேறெதுவுமில்லை என்பதால் எல்லாமே பிரம்மம்.
  • ஜடம் மனமாகி, சத்தாகி, பிரம்மமாகிறது. அதுவே ஜடப்பிரம்மம்.
மனம் பிரிக்கும் கருவி. அதனால் சத்திய ஜீவியம் தரும் நிறைவை மனம் குறையாகக் காண்கிறது. தகப்பன் மகனுக்கு 1 கோடி ரூபாயை நிலம், வீடு, மனை, நகை, பணம் என அளித்தால், மகனின் மனம் வெளியூர் போகும் பொழுது கையிலுள்ள 2000 ரூபாயைக் கண்டு, அதை மட்டுமே தகப்பனார் கொடுத்ததாக நினைத்து 1 கோடி ரூபாயை, ரூ. 2000மாகக் காண்கிறது. மனம் எதிரிலுள்ளதை மட்டும் காணும் என்பதால்,
  • நிறைவைக் குறையாக நினைப்பது மனம் என பகவான் கூறுகிறார்.
  • குறையில் ஆன்மீக நிறைவைக் காண்பது சத்திய ஜீவியம்.
கையில் ரூ. 2000/- வந்தபொழுது அது தனக்குக் கிடைத்த 1 கோடியை நினைவுபடுத்தினால் அது மனம் செயல்படுவதில்லை. நம்முள் உள்ள சத்தியஜீவியம் செயல்படுவதாகும். அதனால் ரூ. 2000/- த்தில் 1 கோடியைக் காண முடியும்.
பணம் தேவை. பணமில்லாமல் வாழ்வில்லை. தேவை என்பது வேறு, ஆசை என்பது வேறு. பணத்திற்கு ஒரு குணம் உண்டு. தான் யாரிடம் உள்ளதோ, அவரைத் தனக்கு அடிமையாக்கும் திறன் பணத்திற்குண்டு. சன்னியாசி அனைத்தையும் துறந்தவன். பணத்தையும் துறந்தவன். பணம் வேறு, பணத்திற்குள்ள மரியாதை வேறு. பணத்தைத் துறந்த சன்னியாசி பணத்தின் மீதுள்ள மரியாதையைத் துறந்துவிட்டான் என்று கூறமுடியுமா? அன்னையிடம் வந்தவர்களில் பலர் தங்கள் சொத்து முழுவதையும் அன்னைக்குக் கொடுத்தனர். முழுச் சொத்தும் காணிக்கையான பின்னும் மனத்திற்குப் பணத்தின் மீது மரியாதை, பற்று இருப்பதுண்டு.
  • முழுச் சொத்தும் காணிக்கையான பின்னும் மனத்தைப் பணம் ஆட்கொள்வதுண்டு. I-94 (யோக வாழ்க்கை)
அற்புதம், அதிசயம், ஆச்சரியம் என்பவை பல்வேறு வகைப்பட்டவை. சரணாகதி என்பதற்கு இரு குணங்கள் உண்டு. நதி கடல் சங்கமமாவதை பகவான் உதாரணமாகக் காட்டுகிறார். சிறிய நதி, பெரிய கடல் சங்கமமாகி கடலின் பெரிய பரப்பில் கலந்து மறைகிறது. அடுத்த குணம் மனம் சரணாகதியை நாடினால் மனத்திற்கு அடுத்த கரணமான ஆன்மா வெளிவரும். மனத்திற்கு முந்தைய உணர்வும், உடலும் மனம் தேடும் சரணாகதியை ஏற்று அதன் பலனைத் தாங்களும் பெறுவார்கள். அதனால் ஆன்மா மலரும். அது அற்புதமாகும்.
 
  • அற்புதம் என்பது சரணாகதியில் சந்திக்கும் மனமும் ஆன்மாவுமாகும். I-128
மனம் என்பதன் இருப்பிடம் மூளை. அதன் கருவிகள் புலன்கள். புலன்கள் உணர்வுகளை மனத்திற்குத் தெரியப்படுத்துகின்றன. மனம் மூளை என்ற உடலுறுப்பிலிருந்து ஐம்புலன்களின் வழியாகச் செயல்படும் கரணமாகும். மனத்தின் தலையாய செயல் சிந்தனை. சிந்தனையின் முடிவும், தெளிவும் அறிவு எனப்படும். அறிதல் மனத்தின் தொழில். மனம் சிந்தனையின் மூலம் அறிதல் என்ற தொழிலில் ஈடுபட்டு உலகை அறிகின்றது. அப்படிப் பெறுகின்ற அறிவு தெளிவற்றது. மனத்தின் தெளிவை உணர்வும் உடலும் கரைப்படுத்துகின்றன. மஞ்சள் காமாலை கண்ணுக்குப் பார்ப்பனவெல்லாம் மஞ்சளாக இருக்கும். மனம் உயர்ந்த கருவியானாலும், உடலுக்கு மஞ்சள் காமாலை என்ற நோய் ஏற்பட்டால், அதனால் பாதிக்கப்படுகிறது. மனம் உடலால், அதனுடைய பசி, தாகம், தூக்கம், நோய், வலி இவற்றால் பாதிக்கப்படாத திறனுடையதன்று. மேலும் கேட்கும் செவி, பார்க்கும் கண், நுகரும் நாசி, ருசிக்கும் நாக்கு, தொடும் உடல் ஆகியவற்றாலும் பாதிக்கப்படும். பாதிக்கப்படாத சுதந்திரம் மனத்திற்கில்லை. அவை போக விருப்பு, வெறுப்பு என்ற உணர்ச்சிகளாலும் மனத்தின் அறிவும், தெளிவும் பாதிக்கப்படும்.
உடலாலும், உணர்வாலும் பாதிக்கப்படாத மனம் காய்தல், உவத்தலில்லாத மனம். அம்மனம் தெளிவுக்குரியது. தெளிவுக்குரிய மனம், உயர்வுக்குரியது.
  • தெளிந்த உயர்வே, உயர்ந்த மனம். I-139.
சுபமுகூர்த்தம், கெட்டவேளையுண்டு. சில நேரங்கள் நல்லவை. வேறு சில நேரம் கெட்டவை. நல்ல நேரம் நல்லதைச் செய்யும். கெட்ட நேரம் கெட்டதைச் செய்யும், என்பது உலகம் உணர்ந்த உண்மை. ஸ்ரீ அரவிந்தம் இக்கூற்றை ஏற்க மறுக்கிறது. ஏனெனில், இதற்கு எதிரான அனுபவம் ஸ்ரீ அரவிந்தத்திற்கு உண்டு. எதிரானதும் ஒரு நேரம் உண்மை என்பதால், மேற்கூறியது பொய்யாகாது. மேற்கூறியது அதை நம்புபவர்கட்கு உண்மை. நாமறிந்தவற்றை 3 வகைகளாகப் பிரிக்கலாம்.
1. நல்லவை
2. கெட்டவை
3. நம்மைப்பொருத்து நல்லவையாகவோ, கெட்டவையாகவோ அமைவன.
பால் அமிர்தம், எல்லோருக்கும் நல்லது. எட்டிக்காய் கசப்பு, விஷம், அனைவருக்கும் கெட்டது. கத்தியின் பலன், உபயோகத்தைப் பொருத்தது. கத்தியை உபயோகப்படுத்தத் தெரிந்தவருக்கு பலன் உபயோகத்தைப் பொருத்தது. தெரியாதவனுக்குக் கத்தி தவறாமல் கையை வெட்டும். நம் நிலையுயர்ந்தால் கருவியின் பலனை நாமே நிர்ணயிக்கலாம். நேரம் என்பது மனத்தால் ஏற்பட்ட கருவி, காலம் எனப்படும். காலமும், நேரமும் மனத்திற்குட்பட்டவை. நேரத்தின் தன்மையைவிட மனம் உயர்ந்துவிட்டால், நேரத்தின் தன்மையை நிர்ணயிக்கும் திறன் மனத்திற்கு வரும். மனம் மேலும் உயர்ந்து உயர்ந்த மனமாகிவிட்டால், அம்மனம் செயல்படும் நேரம் சுபமுகூர்த்தமாகும். நேரத்தால் மனிதன் பாதிக்கப்படுவதற்குப் பதில், மனத்தின் உயர்வால் நேரம் உயர்வாகும்.
  • நேரத்தை முகூர்த்தமாக்கும் மனம் I-225,
மனம் தெளிவை ஏற்படுத்தும் கருவி. அதே காரணத்தால் சிக்கலை உற்பத்தி செய்யும் திறன் அதற்குண்டு. இராணுவம் எதிரியிடமிருந்து மக்களைக் காப்பாற்றும், ஆனால் இராணுவம் ஓரூரில் முகாமிட்டால் கொள்ளையடிக்கும் பழக்கம் அந்த நாளில் உண்டு. எதிரியிடமிருந்து காப்பாற்றும் இராணுவம் கொள்ளையடிக்கும் திறனுடையது. இராணுவம் ஆயுதம் தாங்கியது. ஆயுதம் எதிரியை வீழ்த்தும். இராணுவம் பிரியப்பட்டால் அதே ஆயுதம் எந்த மக்களைக் காக்க வேண்டுமோ அவர்களைத் துன்புறுத்தும். மனம் தெளிவுக்குரிய கருவி. சிக்கலை அவிழ்ப்பதே அதன் திறன். சிக்கலை உண்டு பண்ண மனம் முடிவு செய்தால் சிக்கல் தவறாது ஏற்படும்.
  • மனம் உள்ளவரை சிக்கலுண்டு. I-263
  • மனம் திறந்து பேசுவது மனம் மகிழ்ந்து இணைவதாகும். I-329
நியாயம் என்ற சொல்லை வழக்கில் சில சமயங்களில் சௌகரியம் என்ற கருத்தில் சிலர் பயன்படுத்துகிறார்கள். திருடியவன் தன்னைத் தண்டிக்காதது நியாயம் என்று கூறுவதைக் கேட்டு அதிர்ச்சி அடைவதுண்டு. திருடியவனைத் தண்டிக்காமல் அனுப்பியபொழுது அவன் அவ்விடம் விட்டுப் போகாமல் நெடுநேரம் நின்று கொண்டிருந்தான். ஏன் நிற்கின்றான் என விசாரித்ததில் தான் திருடிய பொருளைக் கொடுக்கும்படிக் கேட்டான். இன்று முழுவதும் நான் இதைத் திருடுவதில் செலவு செய்துவிட்டேன், இனி எங்குப் போய் சாப்பாட்டுக்குச் சம்பாதிக்க முடியும், என நியாயம் பேசினான். திருடனுக்குத் தான் திருடிய பொருளின் மீது உரிமையுண்டு என அவன் நினைக்கிறான்!
"அடிபட்டவனுக்கு அழ உரிமையில்லையா?"
"பெற்றவளுக்குப் பிள்ளையை அடிக்க உரிமையில்லையா? என்பதுபோல் எனக்கு என் மருமகளைக் கொடுமைப்படுத்தும் உரிமையில்லையா?" எனக் கேட்கும் மாமியாரும், அதே மனமுடைய முதலாளி, மருமகள், சிப்பந்திகள் உண்டு.
  • கொடுமை செய்யும் உரிமையை மனம் நியாயம் என்று கூறும். I-335.
இது நம்பமுடியாததாக இருக்கலாம். இது இன்று மட்டும் உண்மையில்லை. பைபிள் காலத்திலும் உண்மை. பாரத காலத்திலும் உண்மை. இதை ஒருவரால் நம்பமுடியவில்லை என்றால், கொடுமைக்காரர் ஒருவர் பதவியிலுள்ள ஸ்தாபனத்தில் நடந்தவற்றை அவர் அறிய முற்பட்டால், உடனே புரியும். அதைவிடத் தெளிவாகப் புரியக்கூடிய இடம் ஒன்றுண்டு. அது பொறாமைக்குரிய இடம். பொறாமை பொங்கி எழுந்தால், மனம் கொடுமைச் செய்யத் துடிக்கும். முடியும் என்றால் க்ஷணம் பொறுக்காமல் அக்கொடுமையை செய்வார்கள். செய்தபின் அது தங்கள் உரிமை என்று பேசுவார்கள். சொந்தப் பிள்ளைக்கும், பெற்று வளர்த்தவர்க்கும் இதுபோல் கொடுமை செய்வதுண்டு. அங்கு அது நியாயம் எனப் பேசுவதுண்டு.
தியானத்தில் மனம் அமைதியாகும். அமைதியான மனத்தில் பல உருவங்கள் தோன்றும். அது என்ன என்று மனம் நினைத்தால் உருவம் மறையும். அவ்வுருவங்கள், காட்சிகள் மனம் அமைதியாக இருக்கும்வரை இருக்கும்.
  • மனம் மறைந்தால் திருஷ்டி கிட்டும். I-347
நாம் நல்லெண்ணம், கெட்ட எண்ணம் எனப் பிரிக்கிறோம். அன்னை எண்ணமே கெட்டது என்கிறார். மனத்தில் எண்ணம் நடமாடினால் மாசு படியும்.
  • மனம் கடந்த மாசற்ற நிலை. I-490
எண்ணத்தைக் கடப்பதுபோல், மனத்தையே கடந்தால் மாசற்ற நிலை நிலையாகும்.
காலம் என்பது சித் என்பதிலிருந்து வருவது. நம்மைப் பொருத்தவரை சித் என்பது ஜீவியம் (consciousness) - சித் என்பது சித்தம், மனம். சித் காலத்தை உற்பத்தி செய்தது என்பது தத்துவம். மனம் காலத்தை உற்பத்தி செய்கிறது என்ற கருத்து நமக்குப் பொருந்தும். புலன்களை மனம் கருவிகளாக ஏற்படுத்தியது. மனம் காலத்தையும், புலன்களையும் உற்பத்தி செய்தது எனில், புலன்களையும், மனத்தையும் கடந்தவன் காலத்தைக் கடந்தவனாவான்.
  • புலனையும் மனத்தையும் கடந்தவன் காலத்தையும், இடத்தையும் கடந்தவனாவான். I-514
உடல் அஸ்திவாரம். உணர்வு மேலெழுந்தது. மனம் அதற்கும் மேலுள்ளது. செயலில் பலன் அடிப்படைத் தோற்றம் மேலெழுந்தவாரியானது. மேலெழுந்தவாரியான மனம் மேலெழுந்தவாரியான தோற்றத்தை நாடுகிறது. உரியதை நாடுபவனும், உயர்ந்ததை நாடுபவனும் நிதானமாக இருப்பார்கள். சிறியதை நாடுபவனும், உரிமையற்றதை நாடுபவனும் அவசரப்படுவார்கள், துடிப்பார்கள், பதைப்பார்கள்.
  • பலனை விட மனம் தோற்றத்திற்காகத் துடிக்கும். I-532
மனத்தில் எண்ணம் ஓடியபடியிருக்கும். அதுவே மனத்தின் தன்மை. வானில் மேகக் கூட்டங்கள் இருந்தபடியிருக்கும். அதே போல் மனத்தில் எண்ணமிருக்கும். இருவர் இதற்கு விலக்கு. மௌனம் பெற்ற யோகிக்கும், மனம் வளராத மடையனுக்கும் மனத்தில் எண்ணம் ஓடாது. ஓடும் எண்ணம் நாடும் விருப்பத்தைக் குறிக்கும். எண்ணம் வேகமானால் உடல் பதைபதைக்கும். கடமைகளைப் பற்றிய எண்ணங்கள் கனத்தவை. அவை மனித மனத்தைப் பிடித்து உலுக்காது. ஆசை, பயம், அவா, கற்பனைக் கோட்டை ஆகியவை எண்ணங்களை உற்பத்தி செய்யும். ஒவ்வொரு வகையான எண்ணத்திற்கும் உரிய போக்குண்டு. விவரத்தைத் தேடும் மனம் ஆராயும். முடிவை நாடும் மனம் சிந்திக்கும். அர்த்தமற்ற எண்ணங்கள் அதிவேகமாக எழும். அசை போடும் மனம் அர்த்தமற்றவற்றைக் கருதும். அவை மனத்தை உலுக்கும். கனத்த எண்ணத்திற்கு மௌனமில்லாவிட்டாலும், நிதானமிருக்கும்.
  • அசை போடும் மனம் பேயாய் உலுக்கும் . I-608
மேல்மனம், அடிமனம், உள்மனம், ஆழ்மனம் என்பவை பல நிலைகள். நாமறிந்த வாழ்வு முழுவதும் மேல் மனத்திற்குரியது. உள்மனம் என்பது பரந்தது. ஒருவருடைய உள்மனம் அவரறிவதானால், அவருக்கு விலங்கு, செடி கொடிகள் பாக்ஷை புரியும். அடிமனம் தெரியுமானால் அவருக்கு வீட்டினுள்ளிருக்கும்பொழுதே தெருவில் வருவது யார் எனத் தெரியும். நாம் இன்று வாழும் வாழ்வு முழுவதும் மேல் மனத்தைச் சேர்ந்ததேயாகும்.
  • முழு வாழ்வும் மேல் மனத்திற்குரியது. I-626
  • தூய மனம் தூய ஆன்மாவை அடைவது மோட்சம். I-634
  • மனம் உடலின் அதிபதி. I-735
செப்புப் பாத்திரத்தை மாற்றி வேறொரு பாத்திரமாக்க அதை அனலிலிட்டு உருக்க வேண்டும். பழைய வீட்டை வாங்கி புது பேஷனில் கட்ட வேண்டுமானால், பல இடங்களை இடிக்க வேண்டும். தோண்ட வேண்டும், கூரையை இறக்க வேண்டும். ரிப்பேர் முடிந்தபின் வீடு அழகாக, அலங்காரமாக இருக்கும். இடைநிலை கோரமாக இருக்கும். மனம் இன்றைய நிலையை விட அதிகத் தெளிவு பெற உள்ளதைக் கலைத்து புதியதை நிறுவுமுன் இடைநிலை பயங்கரமாக இருக்கும். மனத்திற்கு அது பைத்தியம்போல் தோன்றும்.
  • தெளிவுக்கு முந்தைய பைத்தியம். I-777
  • மனம் மாறினால் ஜடம் திருவுருமாறும். I-880
  • திருட்டு ஆசையை நாடும் மனம் பிரம்மத்தைத் திருட்டில் வெளிப்படுத்துகிறது. I-901
Stolen pleasure is sweet, திருட்டு ஆசைக்கு ருசி அதிகம் என்பது பழமொழி. மறைவாகச் செய்வதால் திறமை அதிகமாகத் தேவை என்பதால் ருசி அதிகமாக இருக்கும். மனித வாழ்வு, தெய்வீக வாழ்வு என மாறும்பொழுது சரி என்பது எல்லாக் கட்டங்களிலும் தப்பாகத் தெரியும். மனம் மாற்றத்திற்கு ஒத்துக் கொள்ளாது. பாரத யுத்தமும், கிருஷ்ண பரமாத்மாவின் யுக்திகளும் இதற்கு உதாரணம். திருவுருமாற்றத்தை நாடினால், நாம் கிருஷ்ணபரமாத்மா செய்தவற்றைச் செய்ய வேண்டியிருக்கும். கிருஷ்ணன் தெய்வம். தெய்வம் எதையும் செய்யலாம். நாம் தெய்வமாக நடக்க முடியாது என்பதால் கிருஷ்ணன் சொன்னதைச் செய், செய்ததைச் செய்யாதே என்றார் பெரியோர். ஸ்ரீ அரவிந்தத்தை ஏற்க வேண்டுமானால் கிருஷ்ணன் செய்தவற்றைச் செய்ய வேண்டும். எப்படிப் போவது? கிருஷ்ணன் எதிரிகளுக்குச் செய்த துரோகம், தவறான யுக்திகளை கிருஷ்ணன் என்ன மனநிலையில் செய்தானோ அம்மனநிலையில் செய்ய வேண்டும் என்பது பொருத்தமான பதில்.
  • செய்யும் மனப்பான்மை சரியானால், எந்த முறையும் தவறாகாது.
திருட்டு ஆசை தவறு. அதனால் அது கூடாது. திருடினாலும் பிரம்மம் உண்டு. பிரம்மத்தைத் திருட்டில் காண வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வந்தால் பிரம்மத்திற்காகத் திருட்டையும் ஏற்க வேண்டும். ஏற்கும் மனப்பான்மை, பிரம்மத்திற்குரியதாக இருக்க வேண்டும், திருட்டுக்குரிய மனப்பான்மையாக இருக்கக்கூடாது. பிரம்மத்திற்குரிய மனப்பான்மையுடன் திருட்டை ஏற்றால் அது திருடாக இருக்காது, திருவுள்ளமாக இருக்கும்.
  • தரித்திரம் போனாலும் மனம் தத்தளிக்கும். I-923
இம்மனநிலையை முன்னோர் அறிந்ததால் விருதுபட்டிக்குப் போன சனியனை வீடுவரை வந்துவிட்டுப் போ என்ற பழமொழியைச் சொன்னார்கள்.
  • உலகம் தாராத உரிமையை மனம் எதிர்பார்க்கும். II-26
ஓர் எண்ணம் சரியில்லை என்றால், நம்மால் அதை ஒதுக்க முடிவதில்லை. நம்மை மீறி மனம் ஏதாவது நடக்காதா என எதிர்பார்க்கும். மறுக்கும் எண்ணம் உணர்வு பெறுவது எதிர்பார்ப்பதாகும். மனம் எப்படி எதிர்பார்க்கும்? எந்தச் சட்டப்படி, எந்த நியாயப்படி எதிர்பார்க்கும் என்று நம்மால் நிர்ணயிக்க முடியாது. நம் அறிவைக் கடந்த நிலையில், நம் கற்பனை இதுவரை கருதாதவற்றையும் எதிர்பார்க்கும் திறனுடையது மனம்.
  • மனத்தின் ஆழம் ஆசையை ஆழ்ந்து அனுபவிக்கும். II-29
நம் மனத்தை நாம் அறிவோம் என நினைப்பது தவறு. நாம் அறியாத எண்ணங்கள், நாம் அறிய முடியாத எண்ணங்கள் நம் மனத்துள்ளிருக்கும். ஆசைக்கு சந்தர்ப்பம் வந்தபொழுது, அதை மறுக்கும் நிலை ஏற்பட்டபொழுது மனம் பாடுபடுவதை அறிந்தவருக்கு அது புரியும். புத்தி தெளிவாக இருந்தாலும், உணர்வு மாறுபட்டிருக்கும்.
  • பிறரைத் தீண்டும் மனம் உறவை விஷமாக்கும். II-68
உறவு என நாம் கூறுவது இரத்தபாசம். Human relationship என்பதை நாம் உறவு என்ற சொல்லால் குறிப்பிட்டால் சொந்தம் எழுந்து தெளிவு மறையும். உடன் பிறந்தவர், தம்பதிகள், வியாபாரக் கூட்டு, நட்பு இவற்றுள் உள்ள மனித உறவை நான் உறவு எனக் குறிப்பிடுகிறேன். அண்ணனுக்கு 9 பிள்ளைகள் தம்பிக்கு 1 பிள்ளை. சட்டப்படி சமமானாலும் தம்பி அண்ணனுக்குப் பெரிய பாகம் கொடுப்பது, கணவன் கடனுக்குத் தன் நகைகள் அனைத்தையும் கொடுத்த மனைவி, கூட்டில் கூட்டாளி தன் கடனைக் கொடுக்க சம்மதப்பட்ட கூட்டாளி தன் பங்கை விட்டுக் கொடுப்பது, நண்பனுக்கு உபரி இலாபம் வர பிரதிபலனின்றி உழைத்த நண்பன் ஆகியோர் இரத்தபாசத்தையும், திருமணக்கடமையையும், வியாபார நிர்ப்பந்தங்களையும், நட்பின் உரிமையையும் விட்டுக் கொடுத்த மனித உள்ளம் உள்ளவர்கள். மனித நேயத்தைக் கடந்த தெய்வச் சாயல் உள்ள உறவுகள் இவை. இவ்வுறவில் ஆதாயமாகவோ, ஆபாசமாகவோ, கணக்குப்படியோ பேசுவது தவறு. பேசினால் உறவு தன் உயர்ந்த நிலையை இழக்கும்.
  • பெரிய பாகத்தைப் பெற்ற அண்ணன், நீ விட்டுக் கொடுத்தது உண்மைதான், ஆனால் என் கஷ்டம் தீரவில்லையே என்பதுண்டு.
  • "உன் நகை கடனை அடைத்தது, இன்று பிழைக்க வழியில்லையே" எனக் கணவன் கூறுவான்.
  • "உன் பங்கு இலாபம் என் கடனை அடைத்தது உண்மைதான். இன்று முதல் போதவில்லையே".
  • "இலாபம் வந்தது உண்மைதான். ஆனால் மரியாதை வரவில்லையே" எனக் கூட்டாளியும், நண்பனும் பேசினால் மனம் உடைந்துவிடும். இவற்றை மனிதனால் பொறுக்க முடியாது. ஆனால் இதைக் கடந்த நிலையுண்டு. கணவன் மனைவியிடம் நான் விரும்பிய பெண் வேறு என்று கூறினால், அடுத்தவளை கணவன் மனம் தீண்டினால், அதன் பிறகு அங்கிருப்பது திருமணமில்லை. வெறும் உறவுதான்.
  • நேரடியாக மனம் சத்திய ஜீவியத்தை அடைய முடியுமென்றாலும்  அது அரிது  II-74
நாட்டில் தலைமைப் பதவியை நாடுபவர் படிப்படியாக உயருவதே இயல்பு. அதுவே கஷ்டம். நேரடியாக நாட்டின் தலைமைப் பதவிக்கு இந்திராவும், ராஜீவும் வந்தது அரிது. ஆன்மீகச் சட்டம் மனம் சத்திய ஜீவியத்தை நேரடியாக அடைய அனுமதிக்கும். ஆனால் நடைமுறையில் அது அரிது. படிப்படியாக உயருவதே முடியக்கூடியது. ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் அப்படி உயர்ந்தவர்களே. அன்னை சத்திய ஜீவியத்தை நேரடியாக அடைந்தவர்கள். நான் கொல்லைப் புறமாக வந்தேன் என்றார். பகவான் அவதாரப் புருஷர். 6 வருஷ காலத்தில் அத்தனை யோக சித்திகளும் அவரைத் தேடி வந்தன. அவர் இதைக் கூறினால் நாம் எங்கே?
  • மனம் உணரும் ஆனந்தம் அழகு. II-176
சச்சிதானந்தத்தில் உள்ள ஆனந்தத்தை மனமும், உணர்வும், ஆன்மாவும் காண முடியும். ஆன்மாவின் பார்வைக்கு ஆனந்தம் அன்பாகத் தெரியும். உணர்வில் ஆனந்தம் சந்தோஷமாகத் தெரியும். மனத்தின் கண்ணில் ஆனந்தம் அழகாகத் தெரியும்.
  • மனம் ஏற்காவிடில் எதிரான பலனிருக்கும். II-337
இது முக்கியமான செய்தி. ஆன்மீகப் பலனைப் பெறும் தகுதியைக் குறிக்கிறது. பெறுபவர் எக்காரணத்தாலோ தன்னை உயர்வாகக் கருதினால், தாழ்ந்தவரிடமிருந்து ஆன்மீகப் பலன் பெற முடிவு செய்தால், அதை அவர் மனம் ஏற்காவிட்டால், பலன் எதிராக இருக்கும். வயதாலோ, படிப்பாலோ, ஜாதியாலோ, பெண் என்பதனாலோ, தம்மைவிடத் தாழ்ந்தவரிடமிருந்து தீட்சை பெற முடிவு செய்தவர் பெறும் பலன் தீட்சையாக இருக்காது. தீட்சை பெற்றவுடன் அவருக்கு நோய் அல்லது விபத்து வரும். தீட்சை, ஆசி, அனுக்கிரஹம், கருணை ஆகியவை உயர்ந்தவை. தான் உயர்ந்தவன் என்ற எண்ணத்துடன் அதைப் பெற முடியாது. பெற முன் வந்தால் வீட்டில் தவறு நடக்கும். அது விலக்கப்பட வேண்டியது. குரு ஸ்தானத்தில் உள்ளவர் இதற்குச் சம்மதிக்கமாட்டார்.
  • அடங்கிய மனதை சுயநலம் மறக்கும். II-584
உடலும், உணர்வும் தேவை எழும் நேரம் அடக்க முடியாத வேகமுள்ளவை. மனத்திற்கும் அது உண்டு என்றாலும், பொதுவாக நாம் அதைக் காண்பதில்லை. மனிதன் விரும்பித் தவறு செய்வதுண்டு. தவறே மனதில் எழாத நேரம் பிறர் மூலம் ஆசையைச் சந்தர்ப்பம் கிளப்புவதுண்டு. முதல் நிலையிலுள்ளவனுக்கு நாம் சொல்லக் கூடியதில்லை. அவனுக்கே அவன் செய்வது தவறு என்று புரிய வேண்டும். தானே தவற்றை நாடி நான் போகவில்லை. பிறரால் நான் கெட்டுப் போனேன் என்பவன் செயலைப் பொருத்தவரை முந்தைய நிலையிலுள்ளவனிலிருந்து வேறுபட்டவனில்லை. எந்த அளவுக்கு மாறுபட்டவன்? ஏன் அந்த நிலை?
பிறர் தூண்டுதலையும் புறக்கணித்து முறையாக நடப்பவன் மனிதன். பிறர் தூண்டுதலுக்கு இரையானதற்குக் காரணம் மன உறுதியில்லை எனலாம். மன உறுதியுடன் எல்லா இடங்களிலும் நடந்தவருக்கும், பிறர் தூண்டுதல் சில சமயங்களில் காலை வாரி விடுவதுண்டு. அதற்குரிய பல காரணங்களில் ஒன்று கர்ம பலன். அதுவும் தன்னுடைய கர்மமாக இருக்கலாம். பிறர் கர்ம பலனில் தான் பங்கு கொண்டதாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் பலியானவன் பங்கு என்ன?
"வேகம் உள்ளத்தில் மறுக்க முடியாததாக இருப்பது ஒரு காரணம்"
மறுக்க முடியாத வேகம், அடக்க முடியாத உணர்ச்சி, பிறரைத் தூண்டச் செய்யும். நம்முள் உள்ள வேகம் அடக்க முடியாததானால், வெளியிலிருந்து சுயநலம் நம்மைத் தூண்டும். இது மனத்தின் தன்மை.
பூர்த்தியான மனத்திற்குப் புரியாதது இல்லை. II 713
எந்தக் காரியத்தை முடிப்பதும் பிரார்த்தனையால் முடியும். இது திறமையின் முதற்படி. அடுத்த கட்டத்தில் திறமை என்பது இனிமையான மனம். முதல் நிலை உடலுக்குரியது, அடுத்தது உணர்வுக்குரியது. மூன்றாம் கட்டத்தில் மனம் செயல்படுகிறது. மனம் தவறாது காரியத்தை முடிக்க, எனக்குப் புரியாதது இல்லை என்று சொல்ல வேண்டும். அம்மனம் பூர்த்தியானது.
  • மனத்தால் சரணாகதியை ஏற்பது மலை ஏறுவது போலாகும். II-869
சரணாகதிதத்துவத்தை கீதை மேற்கொண்டது. வைஷ்ணவர்கள் பின்பற்றுவது. நாயனார்கள் போற்றியது. மோட்சத்தை நாடி சரணாகதியை இவர்கள் மேற்கொண்டார்கள். நாம் நாடுவது மோட்சமன்று, பரிணாமம், திருவுருமாற்றம். இதற்குத் தேவையானது சரணாகதி என்றால் சொல் ஒன்றே என்றாலும், பொருள் வேறு. முதலீடு செய்து தொழில் செய்கிறோம். சிறிய தொழிலுக்கும் முதல் வேண்டும், பெரிய தொழிலுக்கும் முதல் தேவை. இரண்டுக்கும் தேவையானது முதல் என்றாலும் பெரிய தொழிலுக்குத் தேவையானது பெரிய முதல். வித்தியாசம் பெரியது. 
  • மோட்சம் பெற ஆசையையும், அகந்தையையும் சரணம் செய்ய வேண்டும். அகந்தை என இங்கு குறிப்பிடுவது ஒரு கரணத்திற்குரிய அகந்தை.
  • பரிணாமம், திருவுருமாற்றம் பெற சரணாகதி தேவை என்றால் மனிதன் தன் ஜீவன், ஜீவியம், சக்தி, ஆனந்தம் ஆகிய நான்கையும் சரணம் செய்ய வேண்டும். இவற்றுள் 4 கரணங்கட்குரிய அகந்தைகள் அடங்கியுள்ளன. 4 அகந்தைகளும் சரணம் செய்யப்படவேண்டும்.
  • பகவான் சரணாகதி கடினம் என்கிறார்.
  • சரணாகதியை இதுவரை ஏற்றவர்கள் பகவானும், அன்னையும் மட்டுமே.
எல்லாக் கரணங்கட்கும் உரிய எல்லா அகந்தைகளையும் மனம் மட்டும் சரணம் செய்ய முடியாது. பூரண யோகம் ஒரு கரணத்தால் மனத்தால் செய்யப்படுவதன்று. அதனால் பூரணமான செயலை ஒரு கரணம் மனம் மேற்கொள்வது மலை ஏறுவது போலிருக்கும்.
  • மனத்தைக் காண முடியாது. எண்ணத்தைக் காணலாம். II-916
10 மடையன்கள் ஆற்றைக் கடந்து வந்த பிறகு 10 பேரும் இருக்கின்றார்களா என ஐயம் ஏற்பட்டு எண்ணினார்கள். 9 பேர் எனத் தெரிந்தது. ஒவ்வொருவரும் எண்ணினார்கள். முடிவு 9 என வந்தது. ஒருவரைக் காணோம் என அழுதார்கள். வழிப்போக்கன் விசாரித்து ஒருவரும் தவறவில்லை என 10 பேரிருப்பதாக எண்ணிக் காட்டியதாகக் கதை. எண்ணுபவர் தம்மை எண்ண மறப்பதால் 10 பேர் 9 பேராகத் தெரிந்தது. இது மடையனைப் பற்றிய கதை என நாம் சிரிக்கலாம். வாழ்வில் எவரும் ஒரு முறையாவது இதுபோல் நடக்காமலிருக்க மாட்டார்கள். கண்ணாடியைத் தேடுபவர்கள் போட்டுக் கொண்டே தேடுவதுண்டு.
எண்ணம் மனத்தின் கருவி என்பதால் எவரும் எண்ணத்தைக் காணமுடியும். நாமே மனம் என நினைப்பதாலும், மனத்தோடு நாம் ஐக்கியமாகி விடுவதாலும் நம் மனத்தை நாம் காண முடியாது. உடலைவிட்டு வெளியே போகும் திறமையுள்ளவர், வெளியிலிருந்து தம்முடல் தரையில் படுத்திருப்பதைக் காண்பார்கள். நம்மால் அது முடியாது. மனத்தை விட்டு வெளியே வந்தவர்கள் தங்கள் மனத்தை பிறர் மனம்போல் பார்க்கலாம். உடலை விட்டு வெளியேறுவது அனைவராலும் முடியாது. மனத்தை விட்டு வெளியேறுவது அதைவிடக் கடினம்.
ஒருவர் அதைச் செய்யப் பிரியப்பட்டால் அதற்கு முன் செய்யக் கூடியதுண்டு. தம் குறைகளை பிறர் அறிவதுபோல் அவர் அறிந்தால் அவருக்கு அத்தகுதியுண்டு.
*****

No comments:

Post a Comment