SHIRDI LIVE DARSHAN

Monday, 30 January 2012

அடையாளம் காண்கிற தற்காப்பு ஜே. கிருஷ்ணமூர்த்தி


அடையாளம் காண்கிற தற்காப்பு


ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)




ஏன் நீங்கள் உங்களை இன்னொருவருடன் அல்லது ஒரு குழுவுடன், இயக்கத்துடன் அல்லது ஒரு தேசத்துடன் இணைத்து அடையாளம் காண்கிறீர்கள், அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள் ? ஏன் நீங்கள் உங்களை கிறிஸ்துவர் என்றோ, இந்து என்றோ, பெளத்த மதத்தவர் என்றோ, எண்ணிக்கையில் அடங்காத மதப்பிரிவுகளின் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவர் என்றோ அழைத்துக் கொள்கிறீர்கள் ? அங்ஙனம் அவற்றுள் ஒன்றுக்குச் சொந்தம் கொண்டாடுகிறீர்கள் ? பாரம்பரியத்தாலோ, பழக்கத்தாலோ, உத்வேகத்தாலோ (impulse), பாரபட்சத்தாலோ (prejudice), மற்றவரைப் பார்த்து போலியாகவோ, சோம்பலாலோ - 'அதைச் சார்ந்தவர் ' என்றும் 'இதைச் சார்ந்தவர் ' என்றும் - மதப்பூர்வமாகவும், அரசியல்பூர்வமாகவும் - ஒருவர் தன்னை அடையாளம் காண்கிறார். அத்தகைய அடையாளம், ஆக்கபூர்வமான புரிந்து கொள்ளலுக்கும், விவேகத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது. அதற்கப்புறம், ஒருவர், தன்னுடைய இயக்கத்தின் தலைமைக்கோ, மதகுருவுக்கோ, ஆஸ்தான தலைவருக்கோ, வெறும் கைப்பாவை ஆகிவிடுகிறார்.

அன்றொரு நாள் - ஒருவர் தன்னைக் 'கிருஷ்ணமூர்த்தியைப் பின்பற்றுபவர் ' என்றும் - மற்றொருவரைக் குறிப்பிட்டு, அவர் - 'வேறொருவரை 'ப் பின்பற்றுகிற குழுவைச் சார்ந்தவர் என்றும் - சொன்னார். அப்படிக் குறிப்பிடும்போது, இவ்வாறெல்லாம் ஒருவரை அடையாளம் காண்பதில், அடையாளப்படுத்திக் கொள்வதில் இருக்கிற நோக்கத்தை, பொருளை, கஷ்டத்தை, சிக்கலை அவர் உணர்ந்திருக்கவில்லை. அவர் ஒரு தற்குறியோ அசடோ அல்ல; அவர் நிறையப் படித்தவர்; நாகரிகமும் நற்பண்புகளும் நிறைந்தவர். எனவே, முன்யோசனையில்லாமலோ, படிப்பறிவின்மையின் காரணமாகவோ அவர் அப்படிச் சொல்லவில்லை. உணர்வுவயப்பட்டோ, மனவெழுச்சியின் காரணமாகவோ கூட அவர் அப்படிச் சொல்லவில்லை. மாறாக, தெளிவாகவும் தீர்மானமாகவும் அவர் அப்படிச் சொன்னார்.


ஏன் அவர் 'கிருஷ்ணமூர்த்தியைப் பின்பற்றுவரா 'க மாறினார் ? மற்றவர்களையும், சோர்வுண்டாக்குகிற குழுக்களையும், சலிப்புண்டாக்குகிற இயக்கங்களையும் அவர் ஏற்கனவே பின்தொடந்துப் பார்த்திருக்கிறார். கடைசியில் கிருஷ்ணமூர்த்தி என்கிற மனிதருடன் அவர் தன்னை அடையாளம் கண்டு கொண்டிருக்கிறார். அவர் சொன்ன விதத்திலிருந்து, அவருடைய தேடலும், பயணமும் முடிந்ததெனத் தோன்றியது. அவர், ஒரு முடிவெடுத்து அந்த முடிவைச் 'சிக் 'கெனப் பிடித்துக் கொண்டதால், அந்த விஷயம் அவருக்கு முடிந்துபோன ஒன்றாகும். தன்னுடைய இடத்தை, தன்னுடைய அடையாளத்தை அவர் தேடிப் பிடித்து விட்டதால், வேறெதுவும் அவரை அவர் நிலையிலிருந்து மாற்ற முடியாது. இப்போது அவர் ஆற அமர ஒரு செளகரியமான செளந்தர்ய நிலையில் தன்னை இருத்திக் கொண்டு, இதுவரையில் சொல்லப்பட்டவைகளையும், இனி சொல்லப்படுபவற்றையும் ஆர்வத்துடன் பின்பற்றுவார்.

நாம் மற்றவருடன் இணைத்து நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் போது, அது அன்பினைச் சுட்டுகிறதா ? சொல்கிறதா ? அடையாளம் காண்பது சோதனையின் குறியீடா ? அன்பிற்கும் சோதனைக்கும், அடையாளம் முடிவு கட்டுவதில்லையா ? அடையாளம் காண்பது என்பது நிச்சயமாக - உடைமையை, சொந்தத்தை வலியுறுத்துகிற - சுவாதீனமே ஆகும். ஆனால், உரிமையானது அன்பினை திரஸ்கரிக்கிறது. இல்லையா ? உரிமை கொள்வது என்பது பாதுகாப்பின் பொருட்டும் உத்திரவாதத்தின் பொருட்டும் தானே. எனவே உரிமை கொள்வது ஒரு தற்காப்பின் வெளிப்பாடு - ஒருவர் காயப்படாமல் தடுக்க உதவுகிற வழிமுறை. ஆகவே, அடையாளம் காண்பதிலே - நுண்ணியதான அல்லது முரட்டுத்தனமான - ஓர் எதிர்ப்பு விசை இருக்கிறது. அன்பானது, தற்காத்துக் கொள்ள உதவுகிற எதிர்ப்பின் ஒரு வடிவமா ? பாதுகாப்பும், தற்காப்பும் இருக்கிற இடத்திலே அன்பு இருக்கிறதா ?

அன்பு மென்மையானது; பலவீனமானது; சுலபமாக வளையக் கூடியது; எளிதாக ஏற்றுக் கொள்கிற இயல்புடையது. அது நுட்பமான, எளிதில் உணரக்கூடிய உணர்வுகளின் மிக உன்னதமான வடிவமாகும். ஆனால், அடையாளம் காண்பது, ஓர் உணர்ச்சியற்ற, உணர்வுகளை மறுதலிக்கிற தன்மையே. ஒன்று மற்றொன்றை அழிக்கவல்லது என்பதால், அன்பும் அடையாளமும் இணைந்து இருக்கவோ, இயங்கவோ இயலாது. அடையாளம் காண்பது என்பது அடிப்படையில் எண்ணத்தின், சிந்தனையின் இயக்கமே. அதனால், மனமானது தன்னைப் பாதுகாத்துக் கொண்டு, அந்தப் பாதுகாப்பினால் விரிவடைகிறது. தான் விரும்பிய வண்ணம் ஆவதற்கு மனமானது கட்டாயம் எதிர்க்கவும், தற்காத்துக் கொள்ளவும் வேண்டும்; நிச்சயம், உரிமை கொள்ளவும், ஒதுக்கி விலக்கவும் வேண்டும். ஒன்றாக ஆகிற அந்த இயக்கத்திலே- மனம் அல்லது மனத்தால் சுட்டப்படும் 'தான் ' என்கிற சுயநிலை - வலிமையாகவும், உறுதியாகவும், திறமிக்கதாகவும் ஆகிறது. ஆனால், இது அன்பு இல்லை. அடையாளம், சுதந்திரத்தை அழிக்கிறது. சுதந்திரத்திலேயே, நுட்பமான, எளிதில் உணரக்கூடிய உணர்வுகளின் உன்னத வடிவம் (அன்பு) இருக்க இயலும்.

சோதனை செய்ய, அடையாளம் காண்கிற இயக்கம் தேவையா ? அடையாளம் காண்கிற செய்கை, விசாரணையையும், கண்டுபிடிப்பையும் முற்றிலும் நிறுத்திவிடுவதில்லையா ? உண்மை கொணர்கிற இன்பமானது, தன்னைக் கண்டுபிடிக்கிற சோதனையின்றி வர இயலாது. அடையாளம் கண்டுபிடிப்பை நிறுத்திவிடுகிறது. அடையாளம் காண்பது சோம்பலின் மற்றொரு வடிவமே. அது நம்மை நாம் அறியாமல், நம்மில் பிறரைக் காண்கிற அல்லது பிறரில் நம்மைக் காண்கிற செய்கையே ஆதலால் - பிறரின் பொருட்டு நாம் அனுபவிக்கிற அனுபவமே ஆகும். ஆகவே அது முற்றிலும் பொய்யானது, போலியானது.

உண்மையான அனுபவத்திற்கு, எல்லா அடையாளங்களும் களையப்பட வேண்டும். சோதனை செய்ய, சோதனைக்கு உட்பட, பயம் என்பதே இருக்கக் கூடாது. பயம் அனுபவத்தைத் தடுக்கிறது. பயம்தான் - மற்றவருடன், ஒரு குழுவுடன், இயக்கத்துடன், ஒரு கொள்கையுடன் என்றெல்லாம் - நம்மை அடையாளம் காண வைக்கிறது. பயம் எதிர்க்கப்பட வேண்டும்; நசுக்கப்பட வேண்டும். தற்காப்பு என்கிற நிலையிலே, எங்ஙனம், காற்றிலேறி விண்ணைச் சாடுகிற, கடல்கள் வென்று கால்கள் பதிக்கிற சாகசங்கள் செய்ய இயலும் ? உண்மையோ, சந்தோஷமோ தன்னையறிகிற, தன்னுள் நீள்கிற பயணங்கள் மேற்கொள்ளாமல் கிடைக்காது. நீங்கள் நங்கூரம் பாய்ச்சப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தால், உங்களால் எங்கும் போக இயலாது. அடையாளம் என்பது ஒரு புகலிடம். புகலிடத்திற்குப் பாதுகாப்பு தேவை. எது பாதுகாக்கப்படுகிறதோ அது விரைவில் அழிக்கப்படுகிறது. அடையாளம் சுய அழிவைக் கொண்டு வருகிறது. அதனாலேயே பல்வேறு அடையாளங்களுக்கிடையே நிலையான மோதல் நிகழ்ந்த வண்ணமிருக்கிறது.

எந்த அளவிற்கு ஓர் அடையாளம் கொண்டும் அல்லது ஓர் அடையாளம் மறுத்தும் நாம் துன்புறுகிறோமோ, அந்த அளவிற்கு புரிந்து கொள்வதற்கும், விவேகத்திற்கும் தடையேற்படுகிறது. அடையாளம் காண்கிற இயக்கத்தை - அது அகம் சார்ந்ததாயினும் சரி, புறம் சார்ந்ததாயினும் சரி - ஒருவர் உணர்ந்திருந்தால், புறத் தோற்றமும், வெளிப்பாடும் அகத் தேவைகளால் திட்டமிடப்படுகின்றன என்பதை அறிந்திருந்தால், உண்மையைக் கண்டுபிடிப்பதற்கும் அதனால் மகிழ்வுக்கும் வாய்ப்பிருக்கிறது. தன்னை மற்றொன்றுடன் அடையாளம் காண்பவர் - எல்லா உண்மைகளையும் கொணர்கிற - சுதந்திரத்தை ஒருபோதும் அறியவோ, காணவோ முடியாது.

(மூலம்: வாழ்க்கை குறித்த வர்ணனைகள்: வரிசை 1 - ஜே. கிருஷ்ணமூர்த்தி [Commentaries on living - J. Krishnamurthi])

No comments:

Post a Comment