SHIRDI LIVE DARSHAN

Monday, 30 January 2012

எண்ணமும் அன்பும் ஜே. கிருஷ்ணமூர்த்தி


எண்ணமும் அன்பும்


ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)



உணர்வுமிக்க மனவெழுச்சியையும் கிளர்ச்சியையும் எப்போதும் உள்ளடக்கமாகக் கொண்ட எண்ணம், அன்பு இல்லை. எண்ணம், தொடர்ந்து அன்பைத் தடுக்கிறது. எண்ணம் நினைவென்கிற ஞாபக சக்தியால் தோற்றுவிக்கப் படுகிறது. ஆனால், அன்பானது நினைவோ ஞாபகமோ இல்லை. நீங்கள் நேசிக்கிற ஒருவரைப் பற்றி நீங்கள் எண்ணும்போது, அந்த எண்ணம் அன்பு இல்லை. உங்கள் நண்பரின் பழக்கங்களையோ, பண்புகளையோ, அவருக்கே உரித்தான சுபாவங்களையோ நினைவில் அசை போட்டு - அவருக்கும் உங்களுக்குமிடையேயான உறவில் நிறைந்த இனிமையான சம்பவங்களையோ, நிகழ்ந்த கசப்பான அனுபவங்களையோ நீங்கள் நினைத்துப் பார்க்கிற பொழுது, அந்த எண்ணமானது மனத்திலே எழுப்புகிற காட்சிகளும் படங்களும் அன்பு இல்லை. எண்ணமானது, அதன் அடிப்படை இயல்பிலேயே, பிளவுபட்ட, தொடர்ச்சியற்றத் தன்மையுடையது. நேரம், இடம் என்கிற அறிவும், பிரிவு, துயரம் என்கிற புலனும் எல்லாம் எண்ணத்தின் இயக்கத்தால் பிறக்கின்றன. எப்போது எண்ணத்தின் இயக்கம் நிற்கிறதோ, அப்போது தான் அங்கே அன்பு இருக்கும்.

எண்ணம், உரிமை கொள்கிற உணர்வையே தவிர்க்க இயலாமல் போஷித்து வளர்க்கிறது. அந்த உரிமை கொண்டாடுகிற நிலையானது - -பிரக்ஞையுடனோ, பிரக்ஞையற்றோ - பொறாமையை வளர்க்கிறது. எங்கே பொறாமை இருக்கிறதோ, அங்கே அன்பு இல்லை. ஆனாலும், பெரும்பாலோர் பொறாமையை அன்பின் அடையாளமாக எடுத்துக் கொள்கிறார்கள். பொறாமை எண்ணத்தின் விளைவாகும்.; அது மனத்தின் உணர்ச்சிமிக்க உள்ளடக்கத்தின் மறுமொழி ஆகும். உரிமை கொள்கிற அல்லது உரிமை கொள்ளப்படுகிற உணர்வுகள் தடுக்கப்படும்போது - மனத்தில் பெரும் சூன்யம் உண்டாகி - பொறாமையும் பகையும் அன்பின் இடத்தை ஆக்ரமித்துக் கொள்கின்றன. எப்படியெனில், எண்ணமானது அன்பின் பாத்திரமேற்பதால், எல்லாச் சிக்கல்களும், துயரங்களும் எழுகின்றன.

நீங்கள் அடுத்தவரைப் பற்றி நினைக்கவில்லை என்றால், நீங்கள் அவரை நேசிக்கவில்லை என்று சொல்லுவீர்கள். ஆனால், அடுத்தவரைப் பற்றி நீங்கள் நினைக்கும்போது, அந்த நினைவும் எண்ணமும்தான் அன்பா ? நீங்கள் நேசிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிற ஒரு நண்பரைப் பற்றி நீங்கள் நினைக்கவில்லை யென்றால், எண்ணவில்லை என்றால், நீங்கள் கலக்கமும் திகிலும் அடைவீர்கள். இல்லையா ? இறந்துபோன உங்கள் நண்பரைப் பற்றி, நீங்கள் நினைக்கவில்லை யென்றால், நீங்கள் உங்களைத் துரோகி என்றும், அன்பற்றவர் என்றுமெல்லாம் கணித்துக் கொள்வீர்கள். அத்தகையதொரு நிலையை நீங்கள் அலட்சியம் என்றும், கொடூரமான மனநிலை என்றும் கருதுவீர்கள். அதனால், நீங்கள் அந்த நண்பரைப் பற்றி நினைவு கூரவும் எண்ணவும் தொடங்குகிறீர்கள்; புகைப்படங்கள் வைத்துக் கொள்கிறீர்கள்; கையாலும், மனத்தாலும் தீட்டப்பட்ட சித்திரங்கள் சேகரிக்கிறீர்கள். ஆனால், இப்படியெல்லாம் உங்களின் இதயத்தை மனத்தின் விஷயங்களால் நிறைப்பதால், அங்கே அன்பிற்கு இடம் இல்லாமல் போகிறது. நீங்கள் ஒரு நண்பருடன் இருக்கும்போது, அவரை நினைவு கூர்வதோ, அவரைப் பற்றி எண்ணுவதோ இல்லை. அவர் இல்லாத போதே, உங்கள் எண்ணம், அவர் தொடர்பான இறந்துபோன காட்சிகளையும் அனுபவங்களையும் மறுபடைப்பு செய்கிறது. இப்படி - கடந்து போனதற்கு, நிகழ்ந்து முடிந்ததற்கு, இறந்த காலத்துக்குப் புத்துயிர் அளிப்பது அன்பென அழைக்கப்படுகிறது. எனவே, நம்மில் பெரும்பாலோர்க்கு அன்பென்பது மரணம்; அன்பென்பது வாழ்க்கையை மறுப்பது. நாம் இறந்த காலத்தில் வாழ்கிறோம்; இறந்து போனவர்களோடு வாழ்கிறோம். அதனால் - நாம் அதனை அன்பென அழைத்தாலும் - நாமும் உயிரற்றவர்களே.

எண்ணத்தின் இயக்கம் எப்போதும் அன்பைத் தடுக்கிறது. எண்ணத்திற்கே உணர்ச்சிமிக்க சிக்கல்கள் உள்ளன, அன்பிற்கு இல்லை. எண்ணமே அன்பை அடைவதற்கான மாபெரும் தடையாகும். எதுவொன்றைக் குறித்தும், 'இது என்ன ' என்பதை உணர்ந்து அறிகிற உண்மை நிலைக்கும், 'இப்படித்தான் இருக்க வேண்டும் ' என்கிற நிலைக்குமான பிளவையும் பிரிவையும் எண்ணம் உருவாக்குகிறது. அறநிலையும், நல்லொழுக்கமும் இப்பிரிவை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன. ஆனால், நீதியின்வழியொழுகும் ஒழுக்கமோ ஒழுக்கங்கெட்ட பாவமோ அன்பை அறிய இயலாது. அறத்தின் பாற்பட்ட இத்தகைய அமைப்பானது, சமூக உறவுகளைக் காப்பதற்காக, ஒன்றிணைப்பதற்காக, மனத்தால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். அவ்வமைப்பு அன்பு இல்லை. மாறாக, சிமெண்ட்டைப் போல ஒரு கெட்டிப்படுத்தும் செயலே ஆகும். எண்ணம் அன்பிற்கு அழைத்துச் செல்வதில்லை; எண்ணம் அன்பினை வளர்ப்பதில்லை. ஏனெனில், தோட்டத்து செடியைப் போல அன்பை உரமிட்டு வளர்க்க இயலாது. அன்பினை வளர்க்க வேண்டும் என்கிற அவாவே எண்ணத்தின் செயல்தான்.

நீங்கள் விழிப்புடன் இருந்தால், உங்கள் வாழ்வில் எண்ணம் எவ்வளவு முக்கியமான பங்காற்றுகிறது என்பதை நீங்கள் கண்டுணரலாம். எண்ணத்திற்கென்று நிலையான ஓர் இடம் இருக்கிறது. ஆனால், அது எந்த விதத்திலும் அன்புடன் தொடர்புடையது அல்ல. எது எண்ணத்துடன் தொடர்புடையதோ, அதை எண்ணம் புரிந்து அறிந்து கொள்ளும்; ஆனால், எது எண்ணத்தைச் சார்ந்ததில்லையோ அதை மனம் கிரகித்தறிய இயலாது. அப்படியானால், அன்பு என்றால் என்ன என்று நீங்கள் கேட்கலாம். அன்பென்பது எண்ணம் இருக்கிற, இயங்குகிற நிலையில் இல்லாத நிலையாகும். ஆனால், அன்பை வரையறுக்கிற செயலே, எண்ணத்தின் இயக்கம்தான்; எனவே அது அன்பில்லை.

நாம் எண்ணத்தைப் புரிந்து கொள்ளவேண்டும்; எண்ணத்தின் மூலம் அன்பினை அடைய முயற்சிக்கக் கூடாது. எண்ணத்தை மறுதலிப்பது அன்பினைக் கொணர்வதில்லை. எண்ணத்தின் ஆழமான முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளும்போதே எண்ணத்திலிருந்து விடுதலை பிறக்கிறது. அதற்கு - ஆழ்ந்த தன்னறிவும், சுய ஞானமும் அத்யாவசியமானவை; வீணான உறுதிப்பாடும், மேலோட்டமான வலியுறுத்தலும் அல்ல. தியானம் - ஆனால் செக்குமாடு போல செய்ததைதே திருப்பிச் செய்வது அல்ல, விழிப்புணர்வு - ஆனால் வரையறைகள் அல்ல, ஆகியவை மனத்தின் வழிகளை வெளிக்கொணர்கின்றன. விழிப்புடன் இல்லாமலும், எண்ணத்தின் இயக்கத்தையும் வழிகளையும் அனுபவித்து உணராமலும், அன்பு என்கிற நிலை இருக்க இயலாது.

(மூலம்: வாழ்க்கை குறித்த வர்ணனைகள் - வரிசை: 1 - ஜே. கிருஷ்ணமூர்த்தி [Commentaries on living - Series: I - J. Krishnamurthi])

No comments:

Post a Comment