Pages

Paghttp://copiedpost.blogspot.in/2012/03/blog-post_20.htmles

Sunday, 11 March 2012

ஸ்ரீரங்கம் ரங்கநாதர்



திருவானைக்காவிலிருந்து ஸ்ரீரங்கம் 2 கி.மீட்டர் தூரத்திலும் திருச்சியில் இருந்து 5 கி.மீ. தூரத்திலும் உள்ளது.
காவிரியும் கொள்ளிடமும் மாலையாகவும் அந்த மாலையைச் சூடியதுபோன்று ஸ்ரீரங்கமும் அமைந்துள்ளது!
பழம்பெரும் வைணவத் தலம் எனப் பெருமை பெற்றுத் திகழ்கிறது இந்த ஸ்ரீரங்கம்!
இந்து சமய வரலாற்றில் கி.பி.7ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.13ஆம் நூற்றாண்டு வரை வைணவம் அரசோச்சிய போது அதன் தலைமை இடமாக இந்த ஸ்ரீரங்கம் திகழ்ந்தது. இந்திய நாட்டில் உள்ள மிகப் பெரிய வைணவ ஆலயங்களில் மிகச் சிறந்தது என்றும் மிகப் புனிதம் கொண்டது என்றும் இந்த ஸ்ரீரங்கம் மதிக்கப்படுகிறது.
சிலப்பதிகாரம், நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் ஆகியவற்றில் ஸ்ரீரங்கம் பாடப் பெற்றுள்ளது.
முதன்முதலில் சோழமன்னன் தர்மவர்மன் என்பவரால் இக்கோயில் உருவாக்கப்பட்டது என்றும் அது காலப் போக்கில் நதியால்-அதன் வெள்ளத்தால் மூழ்கப் பெற்றது என்றும் பின்னர் அடுத்து வந்த சோழ மன்னர் ஒருவர் இதனை அகழ்ந்து எடுத்தார் என்றும் கி.பி.7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கையாழ்வாரால் மேலும் விரிவு படுத்தப்பட்டது என்றும் அறிகிறோம்!
சோழ மன்னர்கள் ஏராளமாகச் சாசனங்களை வழங்கியுள்ளனர் என்று 400 கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது.
ராஜமகேந்திரச் சோழன் முதல் பிராகாரத்தில் எழுப்பியுள்ள மதில் ராஜ மகேந்திர வீதி என்று வழங்கப்பெறுகிறது!
13ஆம் நூற்றாண்டில் மைசூர் ஹொய்சாள மன்னர்களின் ஆட்சியில் ஸ்ரீரங்கம் வந்த பின்னர் இக்கோயிலின் பெரும் பகுதிகள் கட்டப்பட்டன!
14ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் ஹொய்சாளர்களை விரட்டினான். விஜய நகர அரசர்கள், நாயக்க மன்னர்கள் ஆகியோர்களும் 15-16ஆம் நூற்றாண்டில் இக்கோயிலுக்கு ஏராளமான அளவில் திருப்பணி செய்துள்ளனர்!
17ஆம் நூற்றாண்டில் ஹைதர் அலி-திப்புசுல்தான் ஆகியோரின் படை எடுப்பிற்கும் இந்த ஸ்ரீரங்கம் இலக்கானது.
18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வசம்  வந்தபோது இக்கோயிலின் விலைமதிப்பற்ற நவரத்தினங்களைக் கவர்ந்து சென்றனர் என்றும் ரஷ்ய ஜார் மன்னன் மகுடத்தை ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் விலையே மதிக்க முடியாத வைரக்கற்கள் அலங்கரித்தன என்றும் வரலாறு கூறுகிறது.
மாறவர்ம குலசேகரபாண்டியன் காலத்தில் போர்த்துக்கீசியப் பயணியான மார்க்கோபோலோ ஸ்ரீரங்கத்திற்கு வந்து கோயிலின் சிறப்பையும் தலத்தின் செழிப்பையும் பெரிதும் வியந்து போற்றினான்!
ஸ்ரீரங்கம் கோயிலின் கொடி மரம் முதன்முதல் சுந்தர பாண்டியனால் நிறுவப்பட்டு-முகலாயர்படை எடுப்பினால் அழிக்கப்பட்டு-மீண்டும் மல்லிகார்ஜுன ராயரால் செம்பினால் செய்யப்பட்டுத் தங்கத்தகடு போர்த்தப்பட்டு உள்ளது!
முகமது பின் துக்ளக் அரசனின் படைகள் ஸ்ரீரங்கம் கோயிலில் புகுந்து கொள்ளையடித்தபோது, அதனைத் தடுக்கும் முயற்சியில் தேவதாசி ஒருத்தி ஈடுபட்டு உயிர் இழந்தாள் என்று அறியமுடிகிறது!
ஜடாவர்ம சுந்தர பாண்டியன் ஸ்ரீரங்கம் கோயிலைப் பொன்னாலேயே பலவிதத்திலும் அலங்கரித்துச் சிறப்புகள் செய்தான்!
கோபுரங்கள்-மண்டபங்கள் என்றெல்லாம் நிறுவிய அம்மன்னன் பொன்பீடம், பொன்மகாத்தோரணம், பொன் கருடவாகனம், மரகதமாலை, பொன் கிரீடம், பொன் பட்டாடை, பொன்தேர், பொன் பாத்திரங்கள் இப்படி கார்வண்ண மேனியனுக்கு எல்லாமே பொன் என்னும் அளவிற்கு வாரி வழங்கினான்.
தெப்ப உற்சவம் நடத்த இரண்டு படகுகளைப் பொன்னாலேயே செய்து விட்டான் என்றும் தனது எடை அளவிற்கு இரண்டு ரங்கநாதர் உற்சவர்களைச் செய்து தந்தான் ஜடாவர்ம சுந்தரபாண்டியன் என்றும் அறிய முடிகிறது?
பிரிட்டனின் ஏழாம் எட்வர்ட் அரசனானப் பிறகு விளங்கிய வேல்ஸ் இளவரசர் ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் பெரிய பொன் குவளையை அளித்தார் !
இக்கோயில் 7 பிராகாரங்களைக் கொண்டது. 21 கோபுரங்கள் உள்ளன. 7-வது பிராகாரத்தில் உள்ள ராஜகோபுரம் 16-17ஆம் நூற்றாண்டிலேயே மிக மிக உயரமாக எழுப்பிடத் திட்டமிடப்பட்டு அடித்தளம் இடப்பட்டது. ஆனால் பல நூற்றாண்டுகளாகத் தடை பட்டு வந்த இந்த ராஜகோபுரத் திருப்பணி தற்போது ஜீயர் சுவாமிகளால் விரைந்து முடிக்கப்பட்டு வருகிறது. 70 மீட்டர் உயரம் உள்ள கோபுரமாக நமது நாட்டின் மிக உயர்ந்த கோபுரமாக ஸ்ரீரங்கம் ஆலயம் பெருமையடையும்!
இந்தக் கோபுரப் பணி முற்றுப் பெற்றதும் இலங்கை அழியும் என்று புராணத்தில் எழுதியுள்ளதாகச் சில பண்டிதர்கள் கூறுகின்றனர்! அது சரியா என்பது இனி போகப் போகத் தெரியலாம்!
ராமன் ஆராதித்துப் பூஜை செய்து வந்த ரங்கநாதரைப் பரிசாக, ராவணவதம் முடிந்ததும் விபீஷணனுக்கு அளிக்க விமானத்தோடு கூடிய அரங்கநாதனை எடுத்துச் சென்ற விபீஷணன், காவிரியில் நீராட எண்ணி சிறுவன் ஒருவன் கையில் கொடுக்க-அவனோ மூன்று தரம் தான் கூப்பிடுவதற்குள் வரவில்லை எனில் சிலையைக் கீழே வைத்துவிடுவதாகவும் கூற-அதன்படி மூன்று தரம் அழைத்தும் வராததால் கீழே வைத்து விட்டுச் சென்றுவிட்டான். நீராடி முடித்த விபீஷணன் வந்து எவ்வளவு முயற்சித்தும் அரங்கனைத் தரையில் இருந்து எடுக்க முடியவில்லை! இலங்கையை நோக்கியபடி இருக்கும் ரங்கனை விட்டுவிட்டு வெறுங்கையுடன் தன்நாடு ஏகினான் விபீஷணன். அந்த ரங்கனும் அவனது விமானமும் காவிரிக் கரையில் மணலில் புதைந்துவிட- அது பற்றி வேட்டைக்கு வந்த இடத்தில் கிளி ஒன்று மன்னன் தர்மவர்ம சோழனிடம் சொல்ல-அவன் அகழ்ந்து எடுத்தான் ரங்கனை!
ஏழு பிராகாரங்கள் கொண்டது இந்த ஆலயம். அந்த ஏழும், தர்மவர்மா பிராகாரம், ராஜமகேந்திரன் பிராகாரம், குலசேகரன் பிராகாரம், ஆவிநாடன் பிராகாரம், அகளங்கன் பிராகாரம், திருவிக்ரமன் பிராகாரம், மாட மாளிகைப் பிராகாரம் எனப்படுபவை ஆகும்!
இந்தக் கோயிலுக்கு என பெரியதொரு மதிலைக்கட்ட வேண்டும் என்று திருமங்கை மன்னன் எண்ணி இருந்தான். ஆனால் அவனது காதலி குமுதவல்லியோ புலமை பெற்ற பண்டிதர்கள் பாகவதர்களுக்கு தினந்தோறும் த்தியாராதனை என்னும் விருந்துபசரிப்பு செய்ய வேண்டும் என்று தனது விருப்பத்தைக் கூற-அதன்படி இருவரும் அரங்கனைத் துதித்துப் பாடும் அடியார்கள்-பாகவத, பண்டிதர்களுக்கு தங்களால் ஆன திருப்பணியைச் செய்து வந்தனர். கையில் பொருள் இல்லாதபோது மன்னனே வழிப்பறியும் செய்கிறான். வழிப்பறி செய்து அன்னதான உபசரிப்பு செய்யும் மன்னனிடம் புதுமணத் தம்பதி ஏராளமான பொன் பொருள் நவரத்தின அணிகலன்களுடன் வந்து சிக்கிக் கொள்ளக் கொள்ளையடித்தவைகளை மூட்டையாகக் கட்டியபின் அதனைத் தூக்கமுடியாமல் திணறிக் கொண்டிருந்த வேளையில்-
திரு நாராயணரின் அஷ்ட அட்சர மந்திரம் சொன்னால் பலன் கிட்டும் என்று வழிப்பறிக்கு ஆளானவரே யோசனை சொல்ல-
அப்படி அஷ்ட அட்சர நாராயண மந்திரத்தைச் சொன்னதும் ஞானம் பெற்றான். கொள்ளையடித்த மன்னன், வழிப்பறிக்கு வந்த தம்பதி வேறு யாருமல்ல. ரங்கனும், ரங்கநாயகியும் தான் என்று அறிந்து-ரங்கனின் தலங்கள்தோறும் சென்று அவன் புகழ் பாடிப் பாடித் தேடித் தேடிச் சேர்த்த பொருள்களை எல்லாம் கொண்டு ஸ்ரீரங்கத்தில் பெரியதொரு மதிலைக் கட்டியிருக்கிறார் திருமங்கை மன்னர்.
வடநாட்டில் புஷ்கரம், நைமிசாரண்யம், சாலிக்கிராமம், பத்திரிகாச்ரமம் என்ற தலங்கள் போல தென்னாட்டிலும் தலங்களும் உண்டு. அவை திருப்பதி, வானமாமலை, ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீரங்கம் ஆகும்.
இந்தத் தலத்தில் இருக்கும் 21 கோபுரங்களில் முக்கியமாகக் குறிப்பிடும் கோபுரங்கள் இரண்டு. அவை-வெள்ளைக் கோபுரம், நான்முகன் கோபுரம். இந்த நான்முகன் கோபுர வாசல்  வழியே அதாவது தென்திசை நோக்கியபடி சயனித்து இருக்கும் ரங்கனைத் தரிசிக்க இத்தென்வாயில் வழி செல்ல வேண்டும்! ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்ட பெருமாளைப் பக்தர்கள் ஒருவழிப்பாதை போல் கால் பக்கமிருந்துதான் வரிசையில் நின்று சேவிக்கிறார்கள். தலைமாட்டுப் பக்கத்தில் ‘துரியோதனன்’ பக்கம் என்று ஒதுக்கி விடுகிறார்கள். இந்தத் தலைமாட்டுப் பக்கம் யாரும் வராமல் இருக்க இதற்கான வழி அடைந்தே இருக்கிறது. ரங்க மண்டபம், நாலுகால் மண்டபம், கார்த்திகை மண்டபம் இவற்றைக் கடந்து கருவறை வரவேண்டும். கருவறையின் மேலே உள்ள விமானமே அந்நாளில் விபீஷணன் கொணர்ந்தது. இதற்குப் பொன்னால் கூரை வேய்ந்துள்ளனர்.
இதிலே ரங்கன் சயனித்துத் துயில் கொண்டுள்ளான். ஆதிசேஷன் பதினைந்தடி தூரம் இந்தக் கருவறையில் பரவியிருக்க-அவனது பரவலையே சுகம் தரும் பாயாக எண்ணி ரங்கன் அனந்த சயனம் கொண்டு இருக்கும் காட்சி அரிய காட்சி! அற்புதமான காட்சியும்கூட! கைகள் இரண்டு. வலது கை தலையைத் தாங்கி தலையணையாகவும் இடது கையை நன்கு இடுப்புக்கும் கீழே நீட்டிய படியும் சுதை உருவில் காட்சி அளிக்கிறான்! தனது இனிய துணைவிகள் ஸ்ரீதேவியும் பூதேவியும் இல்லாமல் தன்னந் தனியனாக தான் மட்டும் எழுந்தருளியிருக்கிறான்!
இவனுக்கு-இந்த ரங்கனுக்கு எழுவர் துணைவியர் எனினும் இவனது பட்ட மகிஷி ரங்க நாயகியே! ரங்கநாயகி தனித்து இருக்கிறாள்!
ரங்கனை சேவித்து வெளி வந்தால் வழியில் உள்ளது மண்டபம் ஒன்று.
இந்த மண்டபம் இலக்கியப் பெருமையைப் பறைச் சாற்றும் வகையில் உள்ளது. இந்த மண்டபத்தில் கம்பனின் ராமாயணம் அரங்கேற்றம் நிகழ்ந்த போது ஓர் அதிசயம் நிகழ்ந்ததாம்! மண்டபத்தில் நரசிம்மத்தின் சிற்பம் தத்ரூபமாகத் தோன்றும் அளவில் வடிக்கப்பட்டுள்ளது. கம்பராமாயணம் அரங்கேற்றம் நடந்தபோது சிற்பத்தில்- சிற்பமாக இருந்த நரசிம்ம்ம் தன் தலையை தலைவணங்கும் விதத்திலும் பாராட்டும் விதத்திலும் அசைத்துத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அடுத்து ரங்கநாயகி சந்நிதி. பதிவிரதை படிதாண்டி அறியாள். ஏன் உற்சவ காலங்களில்கூட ரங்கநாயகியைத் தேடிக்கொண்டு ரங்கநாதர் தான் வருவது வழக்கம்.
ஏற்கனவே பட்ட மகிஷி என்று ரங்கநாயகியைக் குறிப்பிடக் காரணம் உண்டு! பட்டமகிஷி என்று குறிப்பிடும்போது இந்த ரங்கநாயகனுக்கு மேலும் சில நாயகிகளும் உண்டு!
உறையூரை ஆண்ட நந்த சோழனின் மகள் கமலவல்லி. பெயரைப் போலவே-பொருத்தமாக தாமரை ஓடையில் தாமரை மலர்களோடு பிறந்த இந்தக் கமலவல்லி ரங்கநாதர்மேல் தீராத காதல் கொண்டதால் இவளையும் மணந்தார். அடுத்து சேரன் குலசேகரன் மகள் சேரகுலவள்ளி ரங்கனையே மணந்தாள். பெரியாவார் மகளான ஸ்ரீஆண்டாளை ரங்கமன்னராக மணந்தார். டில்லி பாதுஷா ஸ்ரீரங்கத்தில் படை எடுத்து வந்து விக்கிரகங்கள் எல்லாவற்றையும் எடுத்துச் சென்றபோது-அழகு கொஞ்சும் ரங்கனின் விக்கிரகத்தை பாதுஷாவின் புதல்வி தனது அந்தப்புரத்திற்கு எடுத்துச் சென்று கொஞ்சி மகிழ்ந்திருந்த வேளையில் எப்படியோ மகள் உறங்கும் சமயத்தில் ரங்கனின் விக்கிரகத்தை மட்டும் ஸ்ரீரங்க மக்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க எடுத்துக் கொடுத்துவிட்டார். காலையில் கண்விழித்தவள் தன்னருகில் ரங்கனைக் காணாது தவித்து பின்னர் ஸ்ரீரங்கத்திற்கே வந்துவிட்ட அந்தப் பாதுஷாவின் மகளான துலுக்க நாச்சியார் என்பவளை இந்த ரங்கன்  மணந்து கொண்டுவிட்டார். இந்தத் துலுக்கநாச்சியாருக்குத் தனியாகத் சந்நிதியும் உண்டு. வைவேத்தியமாக ரங்கனுக்குப் படைக்கப்பட்ட ரொட்டியும் வெண்ணையும்-இதற்காக மாமனார் டில்லி பாதுஷா கொறநாட்டில் இரண்டு கிராமங்களைச் சீதனமாக மாப்பிள்ளை ரங்கனுக்குக் கொடுத்துவிட்டார்!
இப்படி எல்லாம் செய்தால் பட்டமகிஷி எப்படி ரங்கனைத் தேடி வருவாள்? அதனால் ரங்கநாயகி ரங்கநாதரைத்தேடி வராததிலும் ரங்கநாதர் தானே ரங்கநாயகியைத் தேடிவருவதிலும் அர்த்தமும் நியாயமும் புரிகிறது!
வேணுகோபாலன் சந்நிதி, உள் ஆண்டவர் சந்நிதி, சக்கரத்தாழ்வார், உடையவர் சந்நிதி, தாயார் சந்நிதி, பட்டாபிராமர் கோயில், கோதண்டராமர் சந்நிதி, பரமபதநாதன் சந்நிதி, சீனிவாசன் சந்நிதி ஆகிய தெய்வ சந்நிதிகளும் கண்டு வணங்கத் தக்கவை.
இந்தத் தலத்தின் விருட்சம் புன்னை மரம்!  தீர்த்தம் சந்திர தீர்த்தம்!
இந்தத் தலத்தில் சித்திரை மாதம் முதலாம் செவ்வாய்க் கிழமை தேரோட்டமும்-அடுத்த வெள்ளியன்று தெப்ப உற்சவமும்-சித்திரை மாதக் கடைசியிலிருந்து வைகாசி முதல் நாள்வரை பஞ்சப்பிரகார உற்சவமும், தைப்பூசத்தன்று தாயார் கொள்ளிடம் கரையில் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறும். மாசியில் பூச்சொரியல் விழாவும் நடைபெறும்.
ஸ்ரீரங்கத்து ரங்கநாதனை ஆழ்வார்கள் அனைவருமே போற்றிப் பாடியுள்ளனர்!
இந்த ஆலயத்தில் ரங்கநாதனுக்கு நிவேதனம் செய்ய-தினமும் உருவாக்கப்படும் மண்பாண்டங்களில் மட்டுமே பிரசாதங்கள் செய்யப்படுகின்றன என்றும்-அப்படி பிரசாதம் செய்து முடிக்கப்பட்டதும் அவைகள்-அந்த மண்பாண்டங்கள் அடுத்து உபயோகப்படுத்தப்படுவது இல்லை என்றும் கூறுகிறார்கள்!
யுனெஸ்கோ எனப்படும் ஐ.நா.கல்வி கலாச்சாரப் பண்பாட்டுக்கழகம் இந்தச் சரித்திரப் பிரசித்தி பெற்ற பழம் பெருமை வாய்ந்த கோயிலுக்கு அதன் புகழையும் பெருமையையும் காக்கும் வகையில் பல லட்ச ரூபாய் அளித்து உதவி செய்து வருகிறது.
எங்குச் சுற்றியும் ரங்கனை சேவி என்பதற்கேற்ப ஸ்ரீரங்கம் ரங்கநாதரை சேவிப்பவர்க்கு வாழ்வில் க்ஷேமமும் சொர்க்கத்தில் இடமும் நிச்சயம் உண்டு!

No comments:

Post a Comment