Pages

Paghttp://copiedpost.blogspot.in/2012/03/blog-post_20.htmles

Sunday, 29 January 2012

ஸ்ரீ வேதாத்திரி மகரிஷி பதில்கள்


ஸ்ரீ வேதாத்திரி மகரிஷி பதில்கள்


வினா:
சிலர் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு மாறாகவும் பயனை அனுபவிக்கின்றனர். இது ஏன்?
மகரிஷியின் விடை:
செயலுக்குதக்க விளைவு என்பது இயற்கை நியதி. இதில் சிறிது கூட தவறு இராது. செயலுக்கும் விளைவுக்கும் இடையே கால நீளம் வேறுபடும். மனிதன் ஆயுள் ஒரு எல்லை உடையது. இதனால் எல்லா செயலுக்கும் விளைவை இணைத்து பார்ப்பதில் தவறு ஏற்படுகிறது. ஒரு செயலுக்கு அடுத்த நிமிடமே விளைவு உண்டாகலாம். மற்றொரு செயலுக்கு 100 ஆண்டுகள் கழித்து விளைவு வரலாம். ஒரு செயல் அதை செய்தவரிடம் கருவமைப்பாக பதிந்து நான்கு தலைமுறைக்கு பின் விளைவு வரலாம். ஆக கணித்து இணைத்து பார்ப்பதில் தவறு இருக்குமே தவிர இயற்கை சட்டத்தில் தவறு இருக்க முடியாது.
வினா:
இன்றைய வாழ்க்கையில் கொலை செய்வோர், கற்பழிப்போர், களவு செய்வோர் ஆகியோர் பால் சினம் கொள்ளாமல் வாழ இயலுமா?
மகரிஷியின் விடை:
கற்பழித்தல், திருடுதல் முதலிய குற்றங்கள் செய்பவரை எவ்வாறு ஏற்றுக்கொள்வது, எவ்வாறு அவர் மீது சினம் எழாமல் இருப்பது என்ற கேள்வி எழுந்தது. ஒவ்வொருவரும் உள்நோக்கி பாருங்கள். நமது ஆயுளிலே தெரிந்த வரையில் எத்தனை குற்றங்களை செய்திருப்போம். அவ்வாறு பல குற்றங்கள் செய்த நிலையிலே, அதாவது பிடிபடாத குற்றவாளிகளாக ஒவ்வொருவரும் இருக்கும் போதே வேறு ஒருவர் குற்றம் செய்யும்போது ஒத்துப்பர்த்து, அவர்தான் குற்றவாளி என்று எண்ணுவது ஒரு சாதாரண மனித மனதின் இயல்பு என்றாலும் ஆழ்ந்து சிந்தித்து பார்த்தோமானால் இந்த உண்மைகளைஎல்லாம் உணர்ந்து யார் மீதும் சினம் எழாமல் காக்கும் அளவுக்கு மன விரிவும் அறிவின் உயர்வும் ஏற்படும்.
வினா:
காயகல்ப பயிற்சி தினந்தோறும் செய்யவேண்டும் என்கிறீர்களே, ஐயா..! உடல் நிலை சரியில்லாதபோது செய்யலாமா..?
மகரிஷியின் விடை:
தினந்தோறும் காயகல்பம் செய்யவேண்டும் என்று நான் சொன்னபோது சரியாக உள்ள நாட்களைத்தான் (Normal Days) நான் குறிப்பிட்டேன். உடல்நிலை பாதிக்கபட்ட நாட்களில் காயகல்ப பயிற்சி செய்ய வேண்டியதில்லை. அசுவினி முத்திரை மட்டும் போடலாம். விரைவில் குணமடைய அது உதவும். பழகிவிட்ட பிறகு நினைக்கும் போது 10 தடவை அசுவினி முத்திரை செய்யலாம். உடலுக்கும் நல்லது.; மனதுக்கும் நன்மை பயக்கும்.

வினா:
குழந்தைகள் எந்த பாவமும் செய்யாத முன்னம் ஏன் பல துன்பங்களுக்கு உட்படுகின்றன?
மகரிஷியின் விடை:
குழந்தை என்பது பெற்றோர் கர்மங்களின் தொடர் நிகழ்ச்சி என்பதை முதலில் நினைவு கொள்ள வேண்டும். வித்தில் ஏற்பட்ட பதிவு விளைவாக மலரும் இடம் குழந்தைகள் தான். பெற்றோர் குழந்தைகள் இவர்களுடைய உடல்கள் தாம் வேறுபட்டனவே தவிர உயிர் வேறுபடவில்லை.  கர்மம் வேறுபடவில்லை. எனவே குழந்தைகள் வருந்துவதற்கு பெற்றோர் மாத்திரம் அல்ல, பல தலைமுறை தாண்டிய பாட்டன் பாட்டிகளும் பொறுப்பாவார்கள்.

வினா:
ஐயா, எண்ண அலைகளைப் பரப்பி நன்மை செய்விக்க முடியும் என்று கூறுகிறீர்கள். தங்களால் மழை பெய்யவைத்து உலகம் உய்ய வழி செய்ய முடியுமா ? இயற்கை ஆற்றலின் நியதியை மீறி எதுவும் நம்மால் செய்ய முடியாது என்பது தங்களின் பதிலானால் மனிதமனம் முயற்சி செய்வது எல்லாம் இயற்கையை எதிர்த்து தானே ? தாங்கள் மனதைப் பற்றி கூறும் அறிவுரைகளும் இயற்கையை எதிர்த்துச் சென்று மனதை நிலை நிறுத்துவது தானே ? விளக்க வேண்டுகிறேன் ?
மகரிஷியின் விடை:
அகத்தவத்தால் மனவலிவு ஏற்பட்டு பல காரியங்களை சாதிக்க முடியுமென்றால் நீங்கள் உங்கள் மனோவலிமையால் மழை பெய்விக்க முடியுமா என்று சவால் விட்டிருக்கிறீர்கள். இயற்கையை, மெய்ப்பொருளை உணந்தவர்கள் பஞ்ச பூதங்களையும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கட்டுப்படுத்த முடியும். அந்த சாதனை அவர்கள் கருணையுள்ளத்திலே தோய்ந்து இயல்பாக இருக்கின்றது. ஆனால் ஒரு அன்பரின் சவாலுக்கு பதில் போன்று அம்மாபெருங்காரியத்தில் அந்த கையவர்கள் இறங்குவார்களா ? என்பதை ஒருவர் மிக நுணிகி நின்றே அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் சவாலில் வெற்றி பெற்று சிறு புகழ் தேடிக் கொள்வதில் அத்தகையவர்கள், அவ்வளவு கீழ் இறங்கிவிடமாட்டார்கள் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
மனவலைக்கலையில் தேர்ந்த அன்பர் ஓர் இடத்தில் மழை பெய்விக்கச் செய்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அப்போது என்ன சொல்வீர்கள். இது இயற்கையாக தற்செயலாக மழை பெய்தது. நீங்கள் பெய்வித்தாக எவ்வாறு நம்புவது என்று தான் சொல்வீர்கள்.
என்னைப் பொறுத்தவரை மழை பொழிவதன் காரணமும், பொய்ப்பதின் காரணமும் அறிவேன். மனிதர்களின் மனோநிலைக்கும், இயற்கையின் இயல்புக்கும் உள்ள தொடர் நிகழ்ச்சிகளில் மழை பொய்த்துபோவதும் ஒன்று. இயற்கை ஆற்றலானது எல்லாம் வல்ல ஒரு பேரியக்க நியதி. இவ்வாற்றலை காலம், தூரம், பருமன், விரைவு எனும் நான்கு கணக்கீடுகளைக் கொண்டு மனித மனத்தால் அறுதியிட்டுக் கூற முடியாது.
இயற்கையின் ஆற்றலும் அதன் ஒழுங்கமைப்பும் அவ்வப் போது ஆங்காங்கு அமையும் சூழ்நிலைக்கேற்ப எண்ண ஆற்றல் அதிர்வலைகளாகவே நிகழ்கின்றது. மனித மனத்தின் எண்ண ஆற்றலுக்கு ஒரு வரம்பு உண்டு. உணர்வு, இச்சை, துணிவு, கனிவு, உணர்ச்சி வயம், விடாமுயற்சி என்ற மனநிலைகளில் அழுத்தத்திற்கும் விரைவிற்கும் ஏற்ப இயற்கையாற்றலின் ஒரு சிறு பகுதியை காலம், விரைவு, பருமன், தூரம் என்ற ஒரு எல்லைக்குள் தனது விருப்பம் போல் பயனாக்கி கொள்ள முடியும்.
ஆனால் தனது விருப்பம் போல் அவ்வப்போதைய இயற்கை நிகழ்ச்சிகள், ஆற்றலை கணக்கிட முடியாமலும், தப்புக் கணக்கு போடுவதிலும் மனித எண்ணம் தோல்வியுறுகின்றது. உதாரணம் : மரம் ஒரு இயற்கையாற்றலின் பகுதி நிகழ்ச்சி. அதனை அதன் தன்மையை, அதன் ஆற்றலை உணரும் அளவில் மனிதன் பயனாக்கிக் கொள்கிறான். ஆனால் கையை மூடிக் கொண்டு மரம் மீது ஓங்கி ஒரு குத்து விட்டால் என்ன ஆகும் ? கைவலி அல்லது சிறுகாயம் உண்டாகலாம்.
இயற்கை நியதியறியாமை என்ற மருளால் மனிதன் மனிதனுக்கு பகையாகிப் பொதுவான சமுதாயமே சாபத்துக்குள்ளாகின்றது. ஒவ்வொரு வரும் பிறருக்கு துன்பமளிக்க வேண்டும் என்று விரும்புவது அதற்கு துணிந்து செயல் புரிவதும் பெரும்பாலான மக்களிடம் இயல்பாக வளர்ந்து வருகின்றது. மனித எண்ண ஆற்றல் இயற்கை ஆற்றலின் ஒரு பகுதி இயக்கமே என்று முன்னரும் விளக்கியிருக்கிறேன். அதன் விளைவு என்னவாகும் ? மனித குல வாழ்வில் துன்பங்களும், சிக்கல்களும் பெருகும். இயற்கைச் சீற்றம், போர், மழையின்மை இவ்வாறாக இயற்கை ஆற்றலும், மனித ஆற்றலும் கூடி மனித எண்ண ஆற்றலால் தீய விளைவுகளாகின்றன.
மனிதன், மனிதன் மதிப்பை உணர்ந்தும் பிறர்க்குத் துன்பமளிக்காமல் இயன்ற அளவில் உதவி செய்து கொண்டும் எல்லோரும் இன்புற்று வாழ வேண்டுமென்று மனமார வாழ்த்தி நல்லெண்ண அலைகளைப் பரப்பிக் கொண்டும் வாழ்ந்தால் கால மழை ஒத்த அளவில் உலகில் பெய்யும். போர், வறுமை, பஞ்சம் இவையின்றி மக்கள் செழிப்போடு வாழ்வார்கள்.
நாம் இப்போது காணும் இப்பஞ்ச நிலைமையில் மழையில்லா வறட்சி நிலையில் மக்கள் அனைவரும் கூடி மனித இனம் அடையும் துன்பங்களை நினைத்து, கருணை உள்ளத்தோடு எல்லோரும் வளவாழ்வு பெற மழை பொழிய வேண்டும், என அழுத்தமாக நினைத்தால் கட்டாயம் மழை பொழியும். ஒரு மனிதன் மட்டும் அவன் எண்ண ஆற்றலைப் பரப்பி மழை பொழியச் செய்ய நினைத்தால், செய்தால் அது இயற்கை ஆற்றலின் நியதிக்கே முரண்பாடாக அமையும். உதாரணமாக ஒரு மனிதன் உணவு செரியாமை, பேதி என்னும் நிலையில் மருத்துவரிடம் சென்று மருந்து பெற்று உண்ணுகிறான். அம்மருந்து சரியாக பலன் தரவேண்டுமெனில் நோயாளி உணவில் கட்டுப்பாடு பின்பற்ற வேண்டும். அதன்படி மருந்து உண்டுவிட்டு மேலும் உணவை மிகுதியாகவே உண்டால் என்ன விளையும், நோய் போகாது மிகுந்து போகலாம். இதனால் மருந்துக்கு வலுவில்லை என்று கொள்ள முடியாது. அது போதிய பலன் விளைக்கத் தக்கதும் ஒத்ததுமான சூழ்நிலைகள் அமையவில்லை என்று தான் பொருள்.
மழையை பெய்விக்கும் ஆற்றல் மனித எண்ண ஆற்றலில் உண்டு. அந்த உயர்வில் மனவளம் பெற்றவர்கள் அதனை சித்தாகவோ , சில மக்களிடம் ஒரு புகழ் விரும்பியோ பயன்படுத்தும் அளவிற்கு கீழே இறங்கிவிட மாட்டார்கள். மனிதனிடம் அறிவை உயர்த்தி அவன் ஆற்றலும் அற உணர்வும் மேலோங்கிச் செய்வதால் தனிமனிதனும், சமுதாயமும் நிரந்தரமாகப் பல வளங்களையும் பெற்று வாழும். இயற்கை ஒழுங்கமைப்பை ஒட்டி மனவளம் பெற்றோர் அந்தத்துறையில் இன்று உலகுக்குத் தொண்டாற்றி வருகின்றார்கள். அவர்கள் கருணையின் ஊற்று மிகும் போது மழையும் பெய்யலாம்.

வினா: சுவாமிஜி, தர்மம் செய்வதும், தர்மம் வாங்குவதும், மற்றவருக்காக இறங்குவதும் மனிதனின் பலவீனத்தைத் தானே காட்டுகிறது ?
மகரிஷியின் விடை:
தர்மம் செய்வதும், பிறர் துன்பம் கண்டு இறங்குவதும் தான் மனிதன் இயல்பாகும். இது பலவீனம் அல்ல. ஆன்மாவின் பலமாகும். வாங்குவதை விட கொடுப்பது அதிகமாக இருக்க வேண்டும். தேவையுள்ள போது வாங்குவதில் தவறில்லை. கொடுப்பவரின் மனத்திருப்திக்காகவும் வாங்கலாம்.
ஒருவர் பிச்சை எடுக்கிறான் என்றால் அங்கு தான் ஏழ்மை மற்றும் பலவீனம்(Poverty and Weakness) வருகிறது. பட்டினி கிடப்பவனுக்கு உணவு அளிக்க வேண்டியது தான். ஆனால் நன்றாகச் சாப்பிட்டு விட்டு இருப்பவனுக்கும், வீட்டில் சென்று அறுசுவை உணவு உண்பவருக்கும் சாப்பாடு போடுவது தர்மம் ஆகாது.
வினா: ஐயா, நான் இதுவரை வாழ்வில் உண்மைக்கும், நேர்மைக்கும் மதிப்பளித்து வாழ்ந்து விட்டேன். ஆனால் நான் பெற்றதோ, துன்பமும் கஷ்டமுமே ஆகும். இப்போது நேர்மையில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் என்ன செய்ய ?
மகரிஷியின் விடை
அறநெறியில் நம்பிக்கையோடு தான் மனிதன் வாழ்ந்தாக வேண்டும். வினைப்பதிவுகள் தீரும் காலத்தில் துன்பம் தோன்றும். அதை அனுபவித்துத்தான் தீர்க்க முடியும். ஆன்மீகப் பயிற்சிகள் உங்களுக்கு இதை மாற்றும் மனவலிமையைக் கொடுக்கும். அதற்கு வேறு மாற்று வழியில்லை.
உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் நீங்கள் நேர்மையற்ற முறையில் சிறிது காலம் வாழ்ந்து பாருங்கள். பிறகு உண்மை புரியும்.
வினா: சுவாமிஜி, என்னைச் சூழ்ந்துள்ளவர்களுடைய பொறாமையை வென்று அவர்கள் தரும் தொல்லைகளை எதிர்த்து வாழ்வில் வெற்றியும் மேன்மையும் அடைய உரிய வழியினை அருள் கூர்ந்து சொல்லித் தரும்படி வேண்டுகிறேன் ?
மகரிஷியின் விடை2:
நீங்கள் முதலில் பிறரிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக் கூடாது. இயற்கையிலேயே உங்களிடம் அபரிமிதமான ஆற்றல்களும் திறமைகளும் அமைந்திருக்கின்றன. இதை உணருங்கள். அவற்றைப் பெருக்கி நீங்களும் பயன் பெற்று, பிறருக்கும் தாராளமாக உதவமுடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அமைதியாக உட்கார்ந்து நீங்கள் ” எங்கு, எவ்வாறு, என்னவாக இருக்கிறீர்கள்? ” என்று கணித்துக் கொள்ளுங்கள். அதாவது – வயதில், உடல் வலுவில், உடல் நலத்தில், கல்வியில், தொழில் திறனில், அறிவு வளர்ச்சியில், அதிகாரத்தில், செல்வ நிலையில் சூழ்நிலையமைப்பில் – நீங்கள் எவ்வாறு இருக்கின்றீர்கள் என்று கூர்ந்து அறிவோடு கணித்துக் கொள்ளுங்கள். இவ்வளவு இருப்பையும் வைத்துக் கொண்டு நீங்கள் ஏன் பிறரிடமிருந்து எதையோ எதிர்பார்க்க வேண்டும் ?
தான், குடும்பம், சுற்றம், ஊர், உலகம் என்ற அளவில் ஒவ்வொருவருக்கும் ஐவகைக் கடமைகள் உள்ளன. உங்களிடமுள்ள இருப்பை வைத்துக் கொண்டு, எந்த அளவில் எவ்வாறு இக் கடமைகளைச் செய்து, பிறர்க்கு எப்பொழுதும் உதவி செய்து கொண்டே இருக்க முடியும் என்னும் பெருந்தன்மையை மனதில் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கடமைகளைச் சிறப்பாகச் செய்வதற்காக எந்தத் திறமை அல்லது இருப்பை வளர்த்துக் கொள்ள முடியுமோ அந்த அளவு அதற்காகவும், ஆற்றலைச் செலவிட வேண்டும். இந்த மாதிரியான உயர்ந்த மனநிலையை வளர்த்துக் கொள்ள ஒரு மாத காலம் இன்று முதல் பழகிக் கொள்ளுங்கள். இந்த தன்னிறைவுத் திட்டத்தைத் தான் நமது மன்றத்தைச் சேர்ந்த அன்பர்களுக்கு வலியுறுத்தி வருகிறேன். இந்தத் திட்டத்தில் மனச் சோர்வுக்கோ, சினத்திற்கோ, கவலைக்கோ இடமில்லை. தன் முயற்சியில், செயலில் விளைவைக் காணும் “கர்ம யோகம்” இதில் அடங்கியிருக்கிறது.





No comments:

Post a Comment