SHIRDI LIVE DARSHAN

Wednesday 24 April 2013

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை. MP3


 ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை 



பாசுரம் 1 முதல் 30 வரை.MP3





பாசுரம்   1 முதல் 5 வரை .MP 3





பாசுரம்  1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

பொருள்:

  அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

விளக்கம்:

  இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.

பாசுரம்  2

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:

  திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணக் கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்). தீய செயல்களை மனதாலும் நினைக்கக் கூடாது. தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.

விளக்கம்:

  ஒரு செயலில் வெற்றி பெற கட்டுப்பாடு மிகவும் அவசியம். வாயைக் கட்டிப்போட்டால் மனம் கட்டுப்படும். மனம் கட்டுப்பட்டால் கடவுள் கண்ணுக்குத்தெரிவான். அதனால் தான் பாவை நோன்பின் போது நெய், பால் முதலியவற்றை தவிர்த்து உடலைக் காப்பதுடன், தீயசொற்கள், தீயசெயல்களைத் தவிர்த்து மனதை சுத்தமாக்குவதையும் கடமையாக்குகிறாள் ஆண்டாள்.

எல்லாச் செல்வங்களையும் தன்னிடத்தில் வைத்துக்கொண்டிருப்பதால் வையம் என்ற சொல் பூமியைக் குறிக்கிறது. எனினும் பூமியின் ஒரு பகுதியில் உள்ள திருஆய்ப்பாடியையே உணர்த்துகின்றது.
கண்ணன் பிறந்த திருவாய்ப்பாடியில் வாழும் காலத்தில் அவ்விடத்தில் அவனோடு சேர்ந்து வாழும் பெரும்பேறு பெற்றவர்களே! மழைக்காக நாம் செய்யும் நோன்பினை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைக் கூறுகிறேன் கவனத்துடன் கேளுங்கள்.
அடியார்களுக்கு அருள்வதற்காகவே நாராயணன் பாற்கடலில் அரவணைமேல் பள்ளிகொண்டு யோகநித்திரை செய்கின்றான். அப்படிப்பட்ட பரமனைப் பாடிக்கொண்டே இருக்க வேண்டும். விடியற்காலையில் நீராட வேண்டும். திருஆய்ப்பாடியில் நெய்யும் பாலும் நிறைந்திருந்தாலும் நாம் உண்ணக்கூடாது. மை என்பது மங்களகரமான பொருளாக இருந்தாலும் அதைக் கண்களில் இட்டு அலங்காரம் செய்துகொள்வதையும், தலையில் மலர்களை வைத்துக்கொள்வதையும் விரதகாலம் முடியும்வரை தவிர்க்க வேண்டும். பெரியோர்கள் இப்படிப்பட்ட காலங்களில் எந்தெந்தச் செயல்களைச் செய்யாமல் விட்டார்களோ, அந்தச் செயல்களை நாமும் செய்யாதிருக்க வேண்டும்.
ஒருவர்மேல் ஒருவர் கோள் சொல்வது தீமை பயக்குமாததால், அத்தகைய தீக்குறளைச் சொல்லக்கூடாது. யாசகர்களுக்கு "இல்லை' என்று சொல்லாமல் பொன்னும் பொருளும் வாரி வழங்க வேண்டும். உணவு இடவேண்டும்; பிச்சை இட வேண்டும்; அவ்வாறு கொடுக்கும் இடத்தையும் காட்ட வேண்டும். இவை எல்லாம் நீங்கள் நன்மைபெறும் வழிகள். இவற்றைச் செய்யும்போது மனமுவந்து செய்ய வேண்டும் என்கிறாள் ஆண்டாள். நல்ல அறிவுரைகளைக் கேட்டு நடப்பது நமக்கும் நல்லது; பிறர்க்கும் நல்லது.


 இந்தப் பாடல் 107 வது திருப்பதியான திருப்பாற்கடல் குறித்து பாடப்படுகிறது.

பாசுரம்  3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:

  சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன். அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும்.

விளக்கம்:

  திருப்பாவை என்றாலே கிருஷ்ணாவதாரம் குறித்து பாடப்படுவது தான். அதிலே முதல் பத்து, அடுத்த பத்து, அதற்கடுத்த பத்து என மூன்று பிரிவாக்கி அதற்குள் ஒரு பாடலில் வாமன அவதாரத்தை பாடுகிறாள் ஆண்டாள். திருமாலின் பாதம் பட்டால் மோட்சம் நிச்சயம். அதனால், அதை உத்தம அவதாரம் என்று வேறு போற்றுகிறாள். பகவானை வணங்கினால் எல்லா வளமும் சித்திக்கும் என்பதும் ஆண்டாளின் அனுக்கிரஹமாக இருக்கிறது.

மாதம் மும்மாரிப் பெய்து நாடெல்லாம் ஷேமமாக இருக்க வேண்டும் என்று ஆண்டாள் ஆசைப்படுகிறாள். நோன்பு நோற்கிறவர்கள் ஓங்கி உலகளந்த உத்தமனாகிற திரிவிக்கிரமனின் பெயரை (அஷ்டாக்ஷர மஹாமந்திரத்தை) சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு நோன்பு நோற்றால் மாதத்திற்கு மூன்று மழை பொழியும். ஒருநாள் மழைபெய்து அத் தண்ணீர் பூமியில் ஒன்பது நாள் ஊற வேண்டும். அவ்வாறு மழை பொழிந்தால் நாட்டில் எந்தத் தீமையும் ஏற்படாது. வயல்களில் யானைபோல் பருத்திருக்கும் கயல் மீன்கள் பயிர்களின் நடுவே செல்ல முடியாமல் மேலே துள்ளி எழுந்து மற்றோரிடத்தில் விழும். வயல்களில் தேங்கி இருக்கும் தண்ணீரில் குவளை மலர்கள் பூத்து மலர்ந்திருக்கும். தேனைப் பருகும் வண்டுகள் அந்த மலர்களிலுள்ள தேனைப் பருகிக்கொண்டே மயங்கி உறங்கும். திருவேங்கடமலைபோல் இருக்கும் பசுக்கள் உள்ள இடத்திற்குத் தயங்காமல் சென்று பால் கறக்கத் தொடங்கினால், வள்ளல் போன்ற பசுக்கள் குடம் குடமாகப் பாலைக் கொடுத்துக்கொண்டே இருக்கும். இவ்வாறு வளம் பெருகி நீங்காத செல்வம் நிறைந்திருக்கும் திருமந்திரத்தைச் சொல்லி, பகவானைப் பாடினால் திருவாய்ப்பாடியில் நீர்வளம், நிலவளம், பால்வளம் எல்லாம் பெருகும். லக்ஷ்மிகடாக்ஷம் பெருகி நிலைத்திருக்கும். பகவானின் திருப்பெயர் எதைத்தான் தராது? எல்லாவற்றையும் கொடுக்கும் என்கிறாள் ஆண்டாள். 

இந்தப் பாடல் திருக்கோவிலூர்(விழுப்புரம் மாவட்டம்)  உலகளந்த பெருமாளைக் குறித்து பாடப்பட்டுள்ளது.

பாசுரம்  4

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:

  மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.

விளக்கம்:

  ஆயர் குல சிறுமிகள் மழை, வெயிலுக்குரிய தெய்வங்கள் இன்னதென அறியமாட்டார்கள். ஏனெனில், அவர்களிடம் கல்வியறிவு இல்லை. எனவே பொதுவாக, "ஆழிமழைக் கண்ணா என்று அழைக்கிறார்கள். ஒரு தோற்றத்துக்கு இவர்கள் கண்ணனையே அழைத்தார்களோ என்று எண்ணத்தோன்றும். இது, நாம் சாதாரணமாக ஒரு குழந்தையை அழைக்க பயன்படுத்தும் "கண்ணா என்ற வார்த்தையைப் போல! எனவே "பர்ஜந்யா என்பதற்குப் பதிலாக "கண்ணா என்றழைத்தார்கள். அவனும் வந்தான். அவனிடம் தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்.

பாசுரம்  5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

பொருள்:

வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும்,
மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை, நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்.

விளக்கம்:

  "உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும் என்பது ஒரு தாய்க்கு பிள்ளை செய்ய வேண்டிய கடமை. தேவகி தாய்க்கு கண்ணனை பெற்றதால் பெருமை. "ஈங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் என்று அவள் பெருமைப்படுகிறாள். குழந்தைகள், பெற்றவர்களுக்கு நல்ல பெயர் வாங்கித் தரவேண்டும் என்பது இதன் உட்கருத்து.



பாசுரம்   6 முதல் 10 வரை .MP 3


பாசுரம்  6

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

பொருள்:

  அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து. தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் "ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.

விளக்கம்:

பூதகி என்ற அரக்கியை கம்சன் அனுப்பி வைத்தான். அவளை இம்சை செய்து கண்ணன் கொன்றிருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. அவனுக்கு பால் தந்து தாய் ஸ்தானத்தை அடைந்து விட்டாளே! அந்த தாய்மையைப் பாராட்டும் விதத்தில் அவளது மடியில் அமர்ந்து பாலைக் குடிப்பது போல் அமைதியாக உயிரைக் குடித்து அவளுக்கு மோட்சமளித்தான் எம்பெருமான்.

கேரளாவில் அம்பலப்புழையில் இருந்து 25 கி.மீ., தூரத்திலுள்ள திருவமுண்டூர் என்ற தலம் குறித்து இந்தப் பாடலை ஆண்டாள் பாடியதாகச் சொல்வர்.

பாசுரம்  7

கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
சின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

பொருள்:

அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்கவில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் இணைந்து ஒலியெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை? எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே! நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன? பிரகாசமான முகத்தைக் கொண்டவளே! உன் வீட்டுக்கதவைத் திற.

விளக்கம்:

  பெருமாளுக்கு பல திருநாமங்கள் உண்டு. இதில் "கேசவா என்ற திருநாமத்தை ஏழுமுறை சொல்லிவிட்டு, அன்றாடப்பணிகளுக்கு கிளம்பினால், அன்றையப் பணிகள் தங்கு தடையின்றி முடியும் என்பது நம்பிக்கை. "கேசவன் என்ற சொல்லுக்கே "தடைகளை நீக்குபவன் என்று தான் பொருள்.
வாழ்வில் ஏற்படும் தடைகளைக் கடக்கும் இப்பாடலை, திவ்ய தேசங்களில் ஒன்றான ஆயர்பாடி (டில்லி-ஆக்ரா ரயில்பாதையிலுள்ள மதுராவில் இருந்து 12 கி.மீ.,) தலத்தை மனதில் கொண்டு ஆண்டாள் பாடியருளினாள்.

பாசுரம் 8

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பொருள்:

  மகிழ்ச்சியை மட்டுமே சொத்தாகக் கொண்ட சிலை போன்று அழகு கொண்ட பெண்ணே! கிழக்கே வெளுத்துவிட்டது. எருமைகள் மேய்ச்சலுக்காக பசும்புல் மைதானங்களில் பரந்து நிற்கின்றன. அநேகமாக, எல்லாப் பெண்களும் நீராடுவதற்காக வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்கள், உடனே குளிக்கப் போக வேண்டும் என அவசரப்படுத்துகிறார்கள். அவர்களை உனக்காக தடுத்து நிறுத்தி விட்டு, உன்னைக் கூவிக் கூவி அழைக்கிறோம். கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களை வென்றவனும், தேவாதி தேவனுமாகிய ஸ்ரீகிருஷ்ணனை நாம் வணங்கினால், அவன்  "ஆஆ என்று அலறிக்கொண்டு நமக்கு அருள் தருவான். பெண்ணே! உடனே கிளம்புவாயாக.

விளக்கம்:

  திவ்ய தேசமான சின்னக்காஞ்சிபுரம் (அத்திகிரி) வரதராஜப் பெருமாளை எண்ணி இப்பாடலை ஆண்டாள் பாடுகிறாள். தேவாதி தேவன் என்று இங்குள்ள பெருமாளைக் குறிபபிடுவர். கண்ணனின் வீரச்செயல்கள் இப்பாடலில் புகழப்படுகின்றன. பெண்கள் தைரியசாலிகளையே விரும்புவார்கள் என்பது இப்பாடலின் உட்கருத்து.

பாசுரம்  9

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

பொருள்:

  பிரகாசமான நவரத்தினங் களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிச்சூழ விளக்கெரிய, நறுமணதிரவியம் மணம் வீச, அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே! உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே! அவளை நீ எழுப்பு. உன் மகளை எத்தனை நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம்! அவள் பதிலே சொல்லவில்லையே! அவள் ஊமையா? செவிடா? சோம்பல் அவளை ஆட்கொண்டு விட்டதா? அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா? உடனே எழு. எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்பவன், மாதவத்துக்கு சொந்தக்காரன், வைகுண்டத்துக்கு அதிபதி என்றெல்லாம் அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல்.

விளக்கம்:

  உலக மக்கள் மாடமாளிகை, பஞ்சு மெத்தை என சொகுசு வாழ்க்கையில் சிக்கி சோம்பலில் கட்டுண்டு கிடக்கின்றனர். இதில் இருந்து அவர்களை மீட்டு பகவானின் இருப்பிடமான வைகுண்டமே நிலையானது என்பதை அறிவுறுத்த வேண்டும்.
 அந்த வைகுண்டத்தை அடைய பகவானின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும்.

பாசுரம்  10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

பொருள்:

முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக் கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே! கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த தடுமாற்றமும் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா.

விளக்கம்:

  யாராவது நன்றாகத் தூங்கினால் "சரியான கும்பகர்ணன் என்று சொல்வோம். இது ஆண்டாள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன "ஜோக் என்பதை இந்தப் பாடல் தெளிவுபடுத்துகிறது. நகைச்சுவை உணர்வு ஆயுளை அதிகரிக்கும். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். ஆண்டாள் நமக்கு திருப்பாவையின் மூலம் ஆயுள்விருத்தியைத் தந்திருக்கிறாள். 



பாசுரம்  11 முதல் 15 வரை .MP 3 



பாசுரம்  11

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

பொருள்:

  கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாகவும், தங்களைப் பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும், மாசுமருவற்றவனுமான கோபாலனை தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே! புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே! நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள். அவர்கள் மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே! இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே! அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது?

விளக்கம்:

  நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. தோழியோ எழுந்து வந்தபாடில்லை! நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? அவளை விட்டுவிட்டு, நீராடச் சென்றிருப்போம். ஆனால், பக்திநெறிக்கு இது அழகல்ல. பிறரை விட்டுவிட்டு, தான் மட்டும் இறைவனை அடைய முயன்றால் அது நடக்காத ஒன்று. எல்லோருமாய் இறைவனை நாட வேண்டும், அவன் புகழ் பேச வேண்டும். அப்போது தான் அவனருள் கிடைக்கும். இதனால் தான் கூட்டுப்பிரார்த்தனைக்கு மகத்துவம் அதிகமாக இருக்கிறது.

பாசுரம்  12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:

  பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றது. இந்த அளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின் தங்கையே! கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய அந்த நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம். நீயோ, இன்னும் பேசாமல் இருக்கிறாய். எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன்பேருறக்கம்?

விளக்கம்:

  எருமைகள் பால் சொரிந்து உறங்கும் தோழியின் இல்ல வாசலை சேறாக்கி விட்டதால், அவளது வீட்டுக்குள் நுழைய முடியாத பெண்கள், அவளது வீட்டு வாசலிலுள்ள ஒரு கட்டையைப் பிடித்துக் தொங்கியபடி அவளை எழுப்பு கிறார்களாம் இந்தப் பாடலில். தலையிலோ பனி பெய்கிறது. மார்கழியில் எழுந்து குளிர்தாங்காமல் வெந்நீரில் குளிப்பவர்கள், இவர்கள் படும் கஷ்டத்தை உணர வேண்டும். கீழே பால் வெள்ளத்தால் குளிர்ச்சி, மேலே பனியின் குளிர்ச்சி, இத்தனையையும் தாண்டி இறைவனை அடைய எத்தனிக்கிறார்கள் இவர்கள். எவ்வளவு சிரமப் பட்டேனும் ஒருவர் விடாமல் எல்லாரும் அவன் திருப்பாதம் சேரவேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

பாசுரம் 13

புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:

பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும், பிறன் மனை நாடிய ராவணனின் தலையைக் கொய்யவும் அவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் பாடியபடியே, நம் தோழியர் எல்லாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்றாகி விட்டது. கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து விட்டது. வியாழன் மறைந்து விட்டது. பறவைகள் கீச்சிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற கண்களையுடைய பெண்ணே! விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும் உடல்நடுங்கும்படி, குளிர்ந்த நீரில் நீச்சலடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய்? அந்தக் கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே! மார்கழியில் அவனை நினைப்பது இன்னும் சிறப்பல்லவா? எனவே, தூக்கம் என்கிற திருட்டை தவிர்த்து எங்களுடன் நீராட வா.

விளக்கம்:

  "கள்ளம் தவிர்ந்து என்கிறாள் ஆண்டாள். தூக்கம் ஒரு திருட்டுத்தனம். பொருளைத் திருடினால் மட்டும் திருட்டல்ல! நேரத்தை வீணடிப்பதும் ஒரு வகையில் திருட்டு தான்! அதிலும், பகவானை நினைக்காத ஒவ்வொரு நிமிடமும் நமக்கு நாமே செய்யும் திருட்டு தான். வயதான பிறகு திருப்பாவையைப் படிக்கலமே என நினைக்கக் கூடாது. அப்போது, வாய் உளற ஆரம்பிக்கும். சில நேரங்களில் பாட முடியாமலே போய்விடும். இந்தப் பாடல் வெளியாகும் பத்திரிகையைப் பிடிக்க முடியாமல் கைகள் நடுங்கும். அப்போது, பகவானை நினைத்து என்ன பயன்?
இளமையிலேயே, பகவானின் திருநாமங்களைச் சொல்லி, அவனது திருக்கதையைப் படித்தால் செல்வங்கள் நம்மைத் தேடி வராதோ?

கண்ணழகு மிகுந்தவன் கண்ணன். அவனைத் தாமரைக் கண்ணன் என்றும் கூறுவார்கள். கண்ணனையும் இராமனையும் சேர்த்துப் பாட இசைந்து, இப் பாடலில் "புள்ளின் வாய்க் கீண்டானை' என்று கண்ணனையும், 'பொல்லாவரக்கனைக் கிள்ளிக் களைந்தானை' என்று இராமனையும் பாடினார்கள். கண்ணன் மாடுகளை மேய்த்துக் கொண்டு ஒரு நீர்நிலைக்குச் செல்லும்போது, கம்சனால் ஏவப்பட்ட ஓர் அசுரன் கொக்கு வடிவத்தில் இருந்துகொண்டு கண்ணனருகில் ஓடிவந்தான். கண்ணன் அந்தப் பகாசுரன் மீது பாய்ந்து அதன் அலகுகளை இரண்டாகப் பிளந்து அவனைக் கொன்ற நிகழ்ச்சியையும், ராமன், பொல்லாவரக்கனான ராவணனை எளிதில் அழித்த வீர சரித்திரத்தையும் பாடிக்கொண்டே எல்லாப் பெண்களும், ஒன்றுசேரும் இடமாகிய பாவைக் களத்திற்குச் சென்றுவிட்டார்கள். வானத்தில் வியாழன் நட்சத்திரம் மறைந்து வெள்ளியும் தோன்றிவிட்டது. பறவைகளும் சிலம்புகின்றன. இத்தகைய நல்ல வேளையில் யமுனையாற்றில் குள்ளக்குளிர அமிழ்ந்து நீராடாமல் படுத்திருக்கிறாயே! இது ஒரு நன்னாள்! தனிமையில் கொள்ளும் இறையின்பமும் கள்ளம். இப்படிப்பட்ட கள்ளம் தவிர்த்து எங்களோடு சேர்ந்து கண்ணனை அனுபவிக்கலாம் எழுந்து வா! என்று அழைக்கிறார்கள் என்று இப்பாசுரம் கூறுகிறது.
 இப் பாசுரம் "திருக்குடந்தை' என்ற திவ்ய தேசத்தைக் குறிப்பிடுகிறது. இப்பாசுரத்தின் வழி எழுப்பப்படுபவர் "தொண்டரடிப்பொடியாழ்வார்' என்பர்.

பாசுரம் 14

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.

பொருள்:

எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே! கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர்.ஆனால், பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே!

விளக்கம்:

  கொடுத்த வாக்கை தவற விடவே கூடாது. வாக்கு கொடுப்பது மிக எளிது. அதைக் காப்பாற்ற முடியுமா என தெரிந்து பேச வேண்டும். வாக்கு கொடுத்து விட்டு பிறரை ஏமாற்றுபவர்கள், கொஞ்சம் கூட வெட்கமின்றித் திரிகிறார்களே என ஆண்டாள் வருந்துகிறாள். நாக்கு சரியானதை மட்டுமே பேச வேண்டும், சொன்னதைச் செய்ய வேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

எல்லோருக்கும் முன்னதாகவே தான் எழுந்திருந்து எங்களை எழுப்புவதாகச் சொல்லிவிட்டு, எல்லோரும் வந்து எழுப்பும்படி படுத்திருக்கும் ஓர் ஆயர்மகளை நங்காய்! நாணாதாய்! என்றெல்லாம் சொல்லி எழுப்புகிறார்கள் தோழியர்கள். கதிரவன் தோன்றியதும் செங்கழுநீர் மலர் மலர்ந்து, ஆம்பல் வாய் மூடிக் கொள்வதை ஓரிடத்தில் பார்த்த பெண்கள், அதையே அனுமான ப்ரமாணமாகக்கொண்டு, உங்கள் வீட்டுப் புழக்கடையில் உள்ள வாவியில், செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின என்றும், செங்கற் பொடியின் நிறத்தைப் போன்று செந்நிறமுடைய ஆடையை அணிந்த துறவியர் சத்துவகுணம் நிறைந்த விடியற்காலையை உணர்த்துவதற்காகச் சங்கு ஒலிக்கத் தாங்கள் தங்கள் கோயிலுக்குச் சென்றுவிட்டார்கள். சிலர் சென்றுகொண்டு இருக்கிறார்கள் என்று கூறி, வாய்ச்சொல்லில் வல்லவளே எங்களை எழுப்புவதாகச் சொன்னாயே தவிர செயலில் காட்டவில்லையே! இதற்கு நீ வெட்கப்படுவதாகவும் தெரியவில்லை! ஆனால், நீ பேச்சில் வல்லவள், அனுமன் முதன் முதலில் ராமனைச் சந்தித்தபோது அவனோடு சிறிது உரையாடினான். அவனுடைய பேச்சில் ராமன் தன் மனதைப் பறிகொடுத்தான்.
நீயும் உன் சொற்களால் கண்ணனின் மனதைக் கவரக்கூடியவள். பெண்களில் சிறந்தவளே! கண்ணன் அன்புமிக்க அடியார்களுக்கு நான்கு கைகளைக் கொண்டவனாகவே காட்சியளிப்பான்; பகைவர்களுக்குக் காட்சியளிக்கும்போது இரண்டு கைகளை உடையவனாகவே தோன்றுவான். கண்ணன் கமலக்கண்ணன்! அவனுடைய கண்ணழகையும், மிகவும் ஒளிபொருந்திய திருச்சக்கரத்தையும், செங்கமல நாண்மலர்மேல் தேன் நுகரும் அன்னம் போன்ற வெள்ளை விளிசங்கினையும் ஏந்தி இருக்கும் அழகோடு சேர்த்துப் பாடுவதற்கு எழுந்து வாராய்! என்று எழுப்புகிறார்கள்.
ஒவ்வொருவரும் விடியற்காலையிலே உறங்கி எழுந்தவுடன் இறைவனைப் பக்தியோடு நினைப்பதும், அவன் பெருமைகளைப் பாடுவதும் சிறந்த செயலாகும். அது வாழ்க்கையை ஒளிர்விக்கும்.
இப்பாசுரம் "திருவழுந்தூர்' என்ற திவ்ய தேசத்தைக் குறிக்கிறது. இப்பாசுரத்தின் வழி எழுப்பப்படுபவர் "திருப்பாணாழ்வார்' என்பர்.


பாசுரம்  15

எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.

பொருள்:

  ""ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே? என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர். அப்போது அந்த தோழி, ""கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்! இதோ வந்து விடுகிறேன், என்கிறாள்.

உடனே தோழிகள், ""உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபிக்காதே என்கிறாயே, என்று சிடுசிடுத்தனர்.அப்போது அவள், ""சரி..சரி...எனக்கு பேசத்தெரியவில்லை. நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன், என்கிறாள்.""அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது? என்று கடிந்து கொள்கிறார்கள். அவளும் சண்டைக்காரி. பேச்சை விட மறுக்கிறாள். ""என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா? என்கிறாள்.தோழிகள் அவளிடம், ""நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார். வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே வருவாய், என்கிறார்கள்.

விளக்கம்:

ஒரு பாடலை இருதரப்பார் பாடுவது போல், அவர்களின் பெயரைக் குறிப்பிடாமலே இனிமைபட பாடியிருக்கிறாள் ஆண்டாள். பெண்களுக்கு பேசக்கற்றுத்தரவா வேண்டும்! இந்தப் பாடலில் ஒரு பெண்ணை மற்ற பெண்கள் கலாய்க்கும் படியான ஒரு சூழலை நகைச்சுவை ததும்ப பாடியிருக்கிறாள். படிக்கப்படிக்க சர்க்கரைத் துண்டாய் இனிக்கும் பாடல் இது. இந்தப் பாட்டுடன் தோழியை எழுப்பும் படலம் முடிந்து விடுகிறது.

அடியார்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்திருக்கும் கூட்டத்தைக் காணவேண்டும் என்று ஆசைப்படுகிறவள் ஓர் ஆயர்மகள். அப்படிப்பட்டவளை இப் பாசுரத்தில் எழுப்புகிறார்கள் தோழியர்கள். ஏனைய பாசுரங்கள் போல் இல்லாமல் இந்தப் பாசுரம் உரையாடல் நடையில் அமைந்துள்ளது.
தோழியர்கள் இவளுடைய வீட்டுக்கு வரும்போது, இவள் இனிய குரலில் கண்ணனைப் பாடிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். வந்தவர்கள் வந்த நோக்கத்தை மறந்து இவளுடைய அழகிலும் இசையிலும் மனதைப் பறிகொடுத்து, "எல்லே இளங்கிளியே!' என்று புகழ்ந்து பாடிக்கொண்டிருக்கும் வேளையில், தோழியர் எழுப்புவது தன் செயலுக்கு இடையூறு என்று நினைத்த அப்பெண் "சில்' என்று அழைக்காதீர்கள்! நங்கைமீர்! இதோ வந்துகொண்டிருக்கிறேன் என்று சினத்துடன் பதில் கூறினாள்.
இவள் கூறியதைக் கேட்ட தோழியர், "நீ இவ்வாறு கடுமையாகப் பேசுவாய் என்பது எங்களுக்கு வெகுநாள்களாகவே தெரியும்' என்றார்கள். கடுமையாகப் பேசுவதில் நீங்களே வல்லவர்கள் என்று மிகக் கடுமையாகச் சொன்ன ஆயர்மகள், அடியார்களோடு வாதிடக்கூடாது என்று கூறப்படுவதால் கடுமையைக் குறைத்துக்கொண்டு, "நானே பேச்சில் வல்லவளாக இருந்துவிட்டுப் போகிறேன்' என்று கூறி அடங்கிவிட்டாள். அப்படியாகில் "எங்களோடு சேர்வதைவிட நீ என்ன பெரிய வாய்ப்பை எதிர்பார்க்கிறாய்! விரைவாக வந்துசேர்' என்றார்கள் தோழியர்கள். எல்லாரும் வந்தனரா? என்றாள் படுத்திருப்பவள்.
வந்துவிட்டனர் நீ வந்து ஒவ்வொருவராக எண்ணிப் பார்த்துக்கொள்! வலிமை மிக்க குவலயாபீடம் என்கிற யானையை அழித்தவனும், பகைவர்களின் பகையை நீக்கவல்லவனும் முதலில் கோபியர்களுக்குத் தோற்று, பிறகு அவர்களைத் தோற்கடிப்பவனுமாகிய மாயனைப் பாட எழுந்துவாராய் என்று அழைக்கிறார்கள்.

 இந்தப் பாசுரம் திருமங்கையாழ்வாரை எழுப்புவதாகக் கூறுவர். இந்தப் பாசுரம் திருவல்லிக்கேணி என்ற திவ்ய தேசத்தைக் குறிப்பிடுகிறத

பாசுரம்  16 முதல் 20 வரை  


பாசுரம்  16

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.

பொருள்:

  எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே! ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக. மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை (சிறு முரசு) தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதனைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம். அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம். "அதெல்லாம் முடியாது என உன் வாயால் முதலிலேயே சொல்லி விடாதே. மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறப்பாயாக.

விளக்கம்:

ஒருவர் ஒரு செயலைச் செய்யப் போவதாக தெரிந்த ஒருவரிடம் சொல்கிறார். ஒருவேளை, அது அவருக்கு பிடிக்காமல் இருந்தாலும் கூட, ஆரம்பத்திலேயே, ""இதைச் செய்யாதே, நீ செய்யப் போவது உருப்படவா போகுது போன்ற அபசகுனமான வார்த்தைகளை பேசிவிடக்கூடாது. "அப்படியா? என்று ஆரம்பித்து, செய்யப்போகும் பணியைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, அதன் பின், "இப்படி செய்தால் நன்றாக இருக்குமே என்று சாந்தமாக அறிவுரை சொல்லலாம். சொற்கள் மனித வாழ்வில் மிக முக்கியமானவை என்று ஆண்டாள் இப்பாடல் மூலம் நமக்கு அறிவுறுத்துகிறாள்.

கோபியர்கள் எல்லோருமாகச் சேர்ந்து, கண்ணனை எழுப்புவதற்காக ஸ்ரீநந்தகோபரின் மாளிகைக்குச் செல்கிறார்கள். அங்கு சென்று கோயில் காப்பானையும், வாயில் காப்பானையும் எழுப்புகிறார்கள். இறைவன் இருப்பிடம் கோயில். எங்களுக்கு நாயகனாய் இருக்கும் நந்தகோபருடைய கோயிலைக் காப்பவனே! எழுந்திராய்! என்று எழுப்பி உள்ளே செல்கிறார்கள். கொடிகள் கட்டியிருக்கும் வாயில் காப்பானே! நவரத்தினமணிகளால் இழைக்கப்பட்ட கதவின் தாழ்ப்பாளைத் திறந்து எங்களை உள்ளே விடு. நாங்கள் எல்லோரும் ஆயர்சிறுமியர்கள்! எங்களுடைய நோன்புக்குரிய பறையை நேற்றே கொடுப்பதாகக் கண்ணன் கூறியிருக்கிறான். நாங்கள் அகத்தூய்மை, புறத்தூய்மையுடன் வந்திருக்கிறோம். திருப்பள்ளியெழுச்சி பாட வந்திருக்கிறோம். முதன் முதலில், நாங்கள் விரும்பும் கோரிக்கையை மறுத்துவிடாதே! ஒன்றோடொன்று பிணைந்திருக்கும் கதவுகளை நீ திறப்பாயாக! என்கிறார்கள். கோயிலுக்குப் போகும்போது ஒருவரை தடுக்கக்கூடாது.

 இந்தப் பாசுரம் ஸ்ரீராமானுஜரையும், திருக்குறுங்குடி என்கிற திவ்ய தேசத்தையும் குறிப்பிடுகிறது.

பாசுரம்  17

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்.

பொருள்:

  ஆடைகளையும், குளிர்ந்த நீரையும், உணவும் பிறர் திருப்திப்படும் அளவுக்கு தர்மம் செய்யும் எங்கள் தலைவரான நந்தகோபரே! தாங்கள் எழுந்தருள வேண்டும். கொடிபோன்ற இடைகளையுடைய பெண்களுக்கு எல்லாம் தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே! மங்களகரமான தீபம் போன்ற முகத்துடன் பிரகாசிப்பவளே! நீ எழ வேண்டும். விண்ணையே கிழித்து உன் திருவடிகளால் உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே! நீ கண் விழிக்க வேண்டும். செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்த செல்வத்திருமகனான பலராமனே! நீயும், உன் தம்பியும் உறக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்கு தரிசனம் தர வேண்டும்.

விளக்கம்:

திருப்பாவையில் வாமன அவதாரத்தைச் சிறப்பாக பாடுகிறாள் ஆண்டாள். மூன்று பாசுரங்களில் இந்த அவதாரத்தை அவள் சிறப்பித்திருக்கிறாள். "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி என்று மூன்றாவது பாடலிலும், இந்தப் பாடலிலும், 24வது பாடலில் அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி என்றும் சொல்கிறாள். அசுரனாயினும் நல்லவனான மகாபலி, தேவர்களை அடக்கி கர்வம் கொண்டிருந்தான். இந்த கர்வம் அடங்கினால் இறைவனை அடைவது உறுதி என்பதாலேயே நாராயணன் வாமனனாக வந்து அவனை ஆட்கொண்டார். திருப்பாவை பாடுபவர்கள் "தான் என்ற கர்வத்தை அடக்க வேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

நந்தகோபரின் மாளிகை நான்கு அறைகளாக அமைந்திருக்கிறது. அதில் முதற் கட்டில் படுத்திருக்கும் நந்தகோபரை, உடை, தண்ணீர், உணவு ஆகியவற்றை எல்லோருக்கும் வாரிவழங்கும் வள்ளலே! எழுந்திரு! என்று எழுப்பினர். அடுத்த அறைக்குச் சென்று, பெண்கள் குலத்துக்கே கொழுந்து போன்றவளே! குலவிளக்கே! எங்கள் தலைவியே எழுந்திரு! என்று யசோதையை எழுப்பினர். ஒரு சமயம் வாமன அவதாரம் எடுத்து, மகாபலி சக்கரவர்த்தியிடம் சென்று, மூவடி மண்கேட்டு, பெரிய உருவங்கொண்டு மூன்று அடிகளால் எல்லா உலகங்களையும் திருவடியால் அளந்துகொண்ட தேவாதி தேவனே! உறங்காதே எழுந்திரு என்று எழுப்பி, அடுத்த அறைக்குச் சென்றனர். செம்பொன்னால் செய்யப்பட்ட வீரக்கழல் அணிந்த செல்வனே! பலராமனே! நீயும் உன் தம்பியான கண்ணனும் உறங்காதே எழுந்திருங்கள் என்கின்றனர். இந்தப் பாசுரம் ஸ்ரீநந்தகோபர், யசோதை, கண்ணன், பலராமன் ஆகிய நால்வரையும், எழுப்புவதாகும்.

முதல் இரண்டடிகள் நந்தகோபரைச் சொல்வதாக இருந்தாலும் ஆசார்யரைக் குறிக்கிறது. மூன்றாவது நான்காவது அடிகள் யசோதையைக் குறித்தாலும், "மந்த்ரோ மாதா' என்றபடி ஆசார்யன் உபதேசிக்கும் அஷ்டாக்ஷர திருமந்திரத்தைக் குறிப்பிடுகிறது. ஐந்து, ஆறாவது அடிகள் மந்திரத்துக்கு உள்ளீடான பகவானைக் குறிக்கிறது. ஏழு, எட்டு அடிகள் பகவானுக்குத் தொண்டுசெய்யும் அடியார்களைக் குறிக்கிறது என்பதாகக் கூறுவர்.

 இந்தப் பாசுரம் "காழிச்சீராம விண்ணகரம்' என்கிற "சீர்காழி' திவ்ய தேசத்தைக் குறிப்பிடுகிறது.


பாசுரம்  18

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:

மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத
தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற! கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே! உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத உன் அழகிய வளையல்கள் ஒலிக்க, செந்தாமரைக் கையால் உன் வாசல் கவைத் திறந்தால் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும்.

விளக்கம்:

பெருமாள் கோயிலுக்குப் போனால் நேராக சுவாமி சன்னதிக்கு போகக்கூடாது. தாயாரை தான்  முதலில் சேவிக்க வேண்டும். வீட்டில் கூட அப்படித்தானே! அப்பாவிடம் கோரிக்கை வைத்தால் "எதற்கடா அதெல்லாம் என்று மீசையை முறுக்குவார். அதையே, அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்கச்சொன்னால், அதே கோரிக்கை பத்தே நிமிடத்தில் நிறைவேறி விடும். இதுபோல் தான் நாராயணனிடம் ஒரு கோரிக்கை வைத்தால்...அந்த மாயன் அவ்வளவு எளிதில் ஏற்கமாட்டான். அதையே தாயாரிடம் சொல்லி வைத்துவிட்டால் அவனால் தப்பவே முடியாது. நரசிம்மரின் கோபத்தைக் கூட அடக்கியவள் அல்லவா அவள்! அதனால், கண்ணனின் மனைவி நப்பின்னையை எழுப்பி, கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.

இந்தப் பாசுரம் நப்பின்னைப் பிராட்டியின் பெருமையைக்கூறி அவளை எழுப்புகிறது. உந்து மதகளிற்றன் என்ற சொல் கண்ணனாகிற யானைக்கன்றை உடையவன் நந்தகோபன் என்றும் கூறலாம். பெரியாழ்வார் "தொடர்ச்சங்கிலிகை' என்ற பாசுரத்தில், அணிந்துகொண்டு இருக்கும்படியான அணிகலன்கள் ஒலிக்க, யானை (வாரணம்) வருவதுபோல் அழகிய திருவடிகளால் கம்பீரமாக நடந்து வா என்று கண்ணனைக் கூறுகிறார். எனவே, நந்தகோபருக்கு கண்ணனே ஒரு யானை என்றும் கூறலாம். பகவான் நான்கு வகை நடைகளை உடையவன். அதில் கம்பீரமாக நடந்து வருவதை "கஜகதி' (யானைபோன்ற நடை) என்பர். உந்து மதகளின் என்பதற்கு மதங்கொண்ட யானையை எதிர்த்துப் போரிடுபவன் என்றும், யானையை உடையவன் என்றும் பொருள். மதங்கொண்ட யானையை உடையவரும், போர்க்களத்தில் புறமுதுகு காட்டி ஓடாமல் வலிமையை உடையவரான ஸ்ரீநந்தகோபரின் மருமகளே! நறுமணம் வீசும் கேச பாசத்தை உடையவளுமான நப்பின்னைப் பிராட்டியே! கதவைத்திற. உதயமாவதற்கு அடையாளமாக எல்லா இடங்களிலும் கோழிகள் கூவி அழைக்கின்றன, வந்துபார். மாதவிக் கொடி படர்ந்த பந்தலின் மேல், குயில்கள் பலமுறை கூவுகின்றன. கண்ணனோடு வந்து விளையாடி, வெற்றிபெற்ற கையிலே பந்தை வைத்துக்கொண்டிருப்பவளே! கண்ணனின் பெயரைப் பாடுவோம். கையிலே அணிந்திருக்கும் வளையல்கள் ஒலிக்க, எங்களுக்காக எழுந்துவந்து கதவைத் திறந்து உதவ வேண்டும் என்கிறார்கள். வளையொலி செவிகளுக்கும், பாடுவது வாய்க்கும், நப்பின்னையைக் காண்பது கண்ணுக்கும், அவளது கேசபாசம் மூக்குக்கும் அவளுடன் சேர்வது உடலுக்குமாக விருந்தாக இந்தப் பாசுரம் அமைகிறது.
எம்பெருமானார் (ஸ்ரீராமானுஜர்) மிகவும் உகந்த பாசுரம் என்பர் ஆன்றோர். இந்தப் பாசுரம் நாச்சியார்கோயில் என்கிற திருநறையூர் திவ்ய தேசத்தைக் குறிப்பிடுகிறது.

பாசுரம்  19

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.

பொருள்:

  ""குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே! நீ எங்களுடன் பேசுவாயாக. மை பூசிய கண்களை உடைய நப் பின்னையே! நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை. காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய். இப்படிசெய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா?

விளக்கம்:

பஞ்சசயனம் என்பது அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தையில், தன் மனைவியின் மார்பின் மீது தலை வைத்து தூங்குகிறானாம் கண்ணன். எழுவானா? அவள் தான் எழ விடுவாளா? ஆனாலும், கண்ணன் ஓரக்கண்ணால் தன் பக்தைகளைப் பார்க்கிறானாம்."நீ எங்களுடன் பேசு என்று பாவைப் பெண்கள் கோரிக்கை எழுப்ப, அவன் ஓரக்கண்களால் பார்த்து "நீங்களே அவளிடம் சொல்லுங்கள் என்று தன் மனைவியை நோக்கிசைகை காட்டுகிறானாம். தாயே! நீயே எங்கள் கோரிக்கையை கவனிக்கவில்லையானால், அந்த மாயவனிடம் யார் எடுத்துச் சொல்வார்கள்? அவன் உன் மார்பில் தலைவைத்து கிடக்கும் பாக்கியத்தைப் பெற்றவள் நீ. எங்களுக்கு அவன் வாயால் "நன்றாயிருங்கள் என்று ஒரே ஒரு ஆசி வார்த்தை கிடைத்தால் போதும் என்கிறார்கள்.

நப்பின்னையும் நானும் இருக்கும்போது நப்பின்னையை மட்டும் கோபியர்கள் எழுப்புகிறார்களே என்று கண்ணன் குறைபட்டுக் கொண்டான். அதனால், இந்தப் பாசுரத்தின் மூலம் கண்ணனையும் நப்பின்னையையும் எழுப்புகிறார்கள். முதல் நான்கடிகளில் கண்ணனையும், அடுத்த நான்கடிகளில் நப்பின்னைப் பிராட்டியையும் எழுப்புகிறார்கள். வீரன் கொண்டுவரும் பொருளை வீரப்பத்தினி மிகவும் விரும்புவாள். அதுபோல், கம்சனால் ஏவப்பட்ட "குவலயாபீடம்' என்ற யானையோடு சண்டையிட்டு அதைக் கொன்று, அதன் தந்தங்களைப் பறித்து வந்தான். அந்த தந்தங்களினால் செய்யப்பட்ட கட்டிலில் நப்பின்னையும், கண்ணனும் உகந்து படுத்துள்ளனர். பாசுரத்தில் "கோடு' என்பது தந்தத்தைக் குறிக்கும்.  மங்களகரமாக குத்துவிளக்கு ஒளிவீச, தந்தத்தினால் செய்யப்பட்ட கால்களைக்கொண்ட கட்டிலின் மேல், மென்மையான துயிலணையின் மேல் - கொத்துக் கொத்தாக தலையில் மலர்களை அணிந்த நப்பின்னையோடு படுத்திருக்கும் மலர்ந்த மார்பை உடையவனே! எங்களைப் பார்த்து 'மாசுச:' (கவலைப்படாதே) என்று ஒரு வார்த்தை சொல்லலாமே! என்றனர். அவன் வார்த்தை சொல்லத் தொடங்கியதும் நப்பின்னை அவன் வாயை மூடிவிட்டாள். இந்த நிகழ்ச்சியை கோபியர்கள் சாளரத்தின் வழியாகக் கண்டார்கள். கண்ணன் வராததற்கு நப்பின்னைதான் காரணம் என்று உணர்ந்த கோபியர்கள், அழகிய கண்களை உடையவளே! நீ உன் மணாளனை ஒருபொழுதும் பிரியவிடமாட்டாய். லோகமாதாவான உனக்கு இது ஸ்வபாவமுமன்று; ஸ்வரூபமுமன்று என்று கூறுவதாக இந்தப் பாசுரம் சொல்கிறது. 

இந்தப் பாசுரம் "திருவிடவெந்தை' என்ற திவ்ய தேசத்தை உணர்த்துகிறது. பெருமாளையும் பிராட்டியையும் சேர்த்துச் சொல்கிறது இந்தப் பாசுரம். 

பாசுரம் 20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.

பொருள்:

  முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.

விளக்கம்:

  கண்ணனின் திருக்குணங்களையும், நப்பின்னையின் அழகையும் வர்ணிக்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். கண்ணன் கடவுள். அவள் எல்லோருக்கும் பொதுவானவன், அவன் நப்பின்னைக்கு மட்டும் சொந்தமானவன் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் அவனையும் கேட்கிறார்கள். உக்கமும் தட்டொளியும் ஆகிய விசிறியையும், கண்ணாடியையும் ஏன் கேட்கிறார்கள். விசிறினால் காற்று வரும். வீசுபவனுக்கு மட்டுமல்ல, அருகிலுள்ளவனுக்கும் சேர்த்து! நம் செயல்பாடுகள் நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயன் தருவதாக அமைய வேண்டும் என்பது இதன் உட்கருத்து. கண்ணாடி உருவத்தைக் காட்டும். ஆனால், உருவத்தில் ஒட்டியுள்ள அழகையோ, அழுக்கையோ தன்னில் ஒட்டிக்கொள்ளாது. வாழ்க்கை என்றால் பட்டும் படாமலும், இந்த உடல் ஒரு வாடகை வீடு, இதை எந்த நேரமும் காலி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனும் இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. ஆண்டாளின் கவித்திறமையில் ஒளிந்துள்ள மறைபொருளுக்கு ஈடேது!

கோபியர்கள் இந்தப் பாசுரத்திலும் பகவானையும், பிராட்டியையும் எழுப்புகிறார்கள். தேவர்கள் முப்பத்து முக்கோடி பேர்கள். அஷ்டவசுக்கள், ஏகாதச ருத்ரர்கள், துவாதச ஆதித்யர்கள், அஸ்வினி தேவர்கள் இரட்டையர்கள் இவர்கள் தலைமையில் முப்பத்து முக்கோடி தேவர்கள். கோஷ்டி என்பதை கோ(ட்)டி என்பர். இவர்களுக்கு மரணம் என்பதே கிடையாது. அதனால் இவர்கள் "அமரர்கள்' எனப்படுவர். நீ தேவர்களுக்குத் தலைவனாகிய இவர்களுக்கு ஆபத்து வருவதற்கு முன், முன்னே இருந்துகொண்டு, பகைவர்களால் ஏற்படும் ஆபத்தை நீக்கி, இவர்களுடைய நடுக்கத்தைப் போக்கும் மிடுக்கு உடையவனே எழுந்திராய்! (பாரதப்போரில் பகதத்தன் அர்ஜுனன் மீது குறிவைத்து போடப்பட்ட ஒரு சக்திமிக்க ஆயுதத்தை தேரோட்டியான கண்ணன், தேரிலிருந்து எழுந்திருந்து தன் மார்பில் வாங்கிக் கொண்டான். பீஷ்மர் போட்ட அஸ்த்ர சஸ்திரங்களை எல்லாம் தான் ஏற்றுக்கொண்டு அர்ஜுனனைக் காப்பாற்றினான்).
 நேர்மையும் திறமையும் கொண்டவனே! பகைவர்களுக்கு பயத்தை உண்டுபண்ணுபவனே! மிகவும் தூய்மையானவனே! என்று கண்ணனை எழுப்பினார்கள். ஆனால், அவன் எழுந்திருக்கவில்லை. கீழ்ப்பாசுரத்தில், நப்பின்னையை "தத்துவமன்று தகவுமன்று' என்று பேசிவிட்டார்கள் என்று கண்ணனுக்கு எண்ணம். அதனால் நப்பின்னையின் திருமேனி அழகைக் கூறுகிறார்கள். சாமுத்திரிகா லட்சணத்தில் சொல்லப்பட்டபடி, அழகிய திருமேனியைக்கொண்ட மகாலட்சுமியைப் போன்ற நப்பின்னையே எழுந்திரு. எங்கள் கோஷ்டிக்கு விசிறியும், கண்ணாடியும் கொடுத்து எங்களை கண்ணனோடு இப்போதே சேர்க்கவேண்டும் என்கிறார்கள்.
இந்தப் பாசுரம் "திருக்கண்ணங்குடி' என்ற திவ்ய தேசத்தைக் குறிப்பிடுகிறது.



பாசுரம்  21 முதல் 25 வரை
 


பாசுரம் 21

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

பொருள்:

 கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக் களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே! கண்ணனே! நீ எழுவாயாக. வேதங் களால் போற்றப் படும் வலிமையானவனே! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! துயில் எழுவாயாக! உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து, உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக.

விளக்கம்:

  "மன்னாதி மன்னர்களெல்லாம் உன் காலில் விழ காத்துக் கிடப்பது உன்னிடமுள்ள பயத்தால்! ஆனால், நாங்கள் அவர்களைப் போல பயந்த சுபாவம் உள்ளவர்கள் அல்ல! நாங்கள் வா என்று அழைத்தால் நீ வந்தாக வேண்டும். வர மறுத்தால், உன்னை எங்கள் அன்பென்னும் கயிறால் கட்டிப் போட்டு விடுவோம். அப்போது, நீ தப்பவே முடியாது என்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். ஆம்...ஆண்டாள் மாலைக்குள் புதைந்து கிடந்த ஒரு தலைமுடியால் அவனைக் கட்டிப் போட்டு விட்டாளே! அந்த ரங்கநாதன் அவளிடம் வசமாக சிக்கிக் கொண்டானே! இதுதான் பக்தியின் உச்சநிலை. பகவானிடம் நம்மை அர்ப்பணித்து விட்டால், அவன் நம்மிடமிருந்து தப்பி ஓடமுடியாது என்பது இப்பாடலின் உட்கருத்து.

பாசுரம்  22

அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:

  கண்ணா! எங்களை விட உயர்ந்த வீரர்கள் இருக்கிறார்களா என தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டவர்களும், இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்
களுமான அரசர்கள் மிகுந்த பணிவுடன் உன் பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும், சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்கிறார்கள். அவர்களைப் போல் நாங்களும் உன் அருகில் நிற்கிறோம். எங்கள் மீது, கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய்போலவும், தாமரைப்பூ மெதுவாக மலர்வது போலவும், உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறந்து விழிக்கமாட்டாயா? சந்திரனும், சூரியனும் உதித்தது போல, அந்தக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால், எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடுமே!

விளக்கம்:

இறைவனின் கடைக்கண் பார்வை பட்டால் போதும். சாபங்கள் கருகிப்போகும். எப்படி அவனது பார்வையை நம் மீது திருப்புவது. மிக எளிதாக ஆண்டாள் பாடிய திருப்பாவையின் பாடல்களையும் மார்கழியில் மட்டுமல்ல! எந்நாளும் பக்தியுடன் படித்தால் போதுமே! அதற்கு அவகாசமில்லையா! அவள் சொல்லியிருக்கிறாளே! இந்த பாவையில் கோவிந்தா, விக்ரமா போன்ற எளிய பதங்களை... அவற்றைச் சொன்னாலே போதுமே! அவனது பார்வை பட்டுவிடும்.

இந்தப் பாசுரத்தில் கோபியர்கள் கண்ணனின் அருளைப் பெறவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். கோபியர்களே! நீங்கள் எல்லோரும் வந்த காரணம் என்ன? என்று கண்ணன் கேட்கிறான். உன்னை விட்டுப் பிரிந்திருந்த சாபம் நீங்கவேண்டும். இனியும் அப்படி ஒருநிலை ஏற்படக்கூடாது. அழகு, விசாலம், போகப் பொருள்கள் நிறைந்த இந்த பூமியில் வாழும் அரசர்கள் தங்களது அபிமானம் இழந்து, உன்னுடைய அருள் நோக்கே வேண்டும் என்று கூட்டங் கூட்டமாக திருப்பள்ளி அறையின் வாசலில் நிற்பதுபோல், நாங்களும் ஸ்த்ரீத்வ அபிமானம் இழந்து வந்து நிற்கிறோம். உன்னை வந்து அடைவோமோ என்று எண்ணினோம், அடைந்துவிட்டோம். கிண்கிணியைப் போன்று இருக்கும் அழகிய தாமரைக் கண்ணால் எங்களை மெல்ல கடாக்ஷிக்க வேண்டும்.
 வாடிய பயிரின் மேல் ஒரு பாட்டம் பெருமழை பொழிவதுபோல் இல்லாமல், மாத உபவாசிக்குப் புறச்சோறு இடுவதுபோல் கொஞ்சம் கொஞ்சமாகக் கடாக்ஷிக்க வேண்டும். ஒருவன், ஒருமாத காலம் பட்டினி இருந்தால், ஒரு மாதத்திற்குப் பிறகு, அவனுடைய உடலுக்கு உணவுச்சத்து பிடிப்பதற்கு, சோற்றை நன்கு அரைத்து உடம்பில் பூசுவார்களாம். இது முற்காலத்தில் செய்யும் வைத்தியம். இதனால் உடம்பில் சக்தி கொஞ்சம் கொஞ்சமாக வரும். அதுபோல் நீ சிறிது சிறிதாகப் பார்த்தால், உன்னை விட்டுப் பிரிந்திருக்கும் பிரிவாற்றாமை என்னும் நோய் நீங்கும். சூரியனையும் சந்திரனையும் போன்ற கண்களால் எங்களைக் கடாக்ஷித்தால் எங்கள் மீது இருக்கும் சாபமும் நீங்கும்.  
இந்தப் பாசுரம் "அழகர்மலை' எனப்படும் திருமாலிருஞ்சோலை என்ற திவ்ய தேசத்தைக் குறிக்கும்.


பாசுரம் 23

மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பொருள்:

மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.

விளக்கம்:

  எதிரே இருப்பவன் கடவுள் என்பதற்காக வீட்டைக் கொடு, பொருளைக் கொடு, நகையைக் கொடு, வாகனத்தைக் கொடு...என நம் கோரிக்கைகளை ஆண்டவன் முன்னால் வைக்கக்கூடாது. அவை நமக்கு அமைய வேண்டுமென்ற விதியிருந்தால், நம் உழைப்பைப் பொறுத்து அவை இறைவனால் நமக்குத் தரப்பட்டு விடும். எனவே, நியாயமான கோரிக்கைகளையே இறைவனிடம் சொல்ல வேண்டும். இதைத்தான் ஆயர்குலப் பெண் கள் நாங்கள் கேட்பது நியாயம் எனத் தெரிந்தால் மட்டும் அதைக் கொடு எனக் கேட்கிறார்கள். அவர்கள் கேட்டது என்ன? அந்தக் கண்ணனையே கேட்டார்கள். அவனோடு கலந்து விட்டால் சோறு  எதற்கு? வாகனம் எதற்கு? இதர வசதிகள் எதற்கு? அதற்கெல்லாம் மேலான பேரின்பமல்லவா கிடைக்கும். அதனால் அவனையே கேட்டார்கள் ஆயர்குலப் பெண்கள்.

கண்ணன் கோபியர்களை இன்னமும் உங்களுக்கு வேண்டியது என்ன? என்று கேட்க, உன்னுடைய நடையழகையும், வீற்றிருந்த திருக்கோலத்தையும் சேவிக்க வேண்டும். பழைய காலத்தில், மலைக்குகையில் ஓர் அசேதனப் பொருள்போல் ஒன்றும் அறியாமல் உறங்கிக் கொண்டிருக்கும் சீரிய சிங்கம், மழைக்காலம் முடிந்தவுடன், அறிவுபெற்று, கோபத்துடன் கண்ணைத் திறந்து, சுற்றும் முற்றும் பார்த்து, தன்னுடைய உடம்பில் படிந்திருக்கும் வேரிமயிர்கள் வாசனையைக் காட்டிக்கொண்டு எழுந்திருந்து, கால்களை முன்னும் பின்னும் நீட்டி மடக்கி, கர்ஜித்து வெளியில் வருவதுபோல், நீயும் சயன அறையிலிருந்து புறப்பட்டு உனக்குரிய சிங்காசனத்தில் அமர்ந்து கொள்ளவேண்டும். அப்போது, எங்களது தேவையைக் கூறுகிறோம். சொல்லமுடியாத குறைகளை நீயாகவே ஆராய்ந்து அருளவேண்டும் என்று வேண்டுகிறார்கள். கண்ணனுடைய நின்ற திருக்கோலத்தையும், நடையழகையும் காண்கிறார்கள்.

இந்தப் பாசுரம், வைணவர்களால் "கோயில்' எனப்படும் "திருவரங்கம்' என்ற திவ்ய தேசத்தைக் குறிப்பிடுகிறது.

பாசுரம்  24

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

பொருள்:

மகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம். ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு வந்தனம்.கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும். கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.

விளக்கம்:

இந்த பாசுரம் மிக முக்கியமானது. இதை தினமும் நாம் பாராயணம் செய்யலாம். இதை "போற்றிப் பாசுரம் என்பர். இந்த பாசுரத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து, கண்ணன் பாலகனாக இருந்த போது நிகழ்த்திய வீரச்செயல்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இதன் மூலம் அவர்கள் தைரியத்தை வளர்த்துக் கொள்வார்கள்.

பாசுரம்  25

ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:

தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.

விளக்கம்:

  பக்தன் பக்தி செலுத்தும் போது, இறைவன் அவனுக்கு சேவகனாகி விடுகிறான். தனது உயிருக்குயிரான பக்தன் பிரகலாதனுக்கும் அவனது தந்தை இரணியனுக்கும் வாதம் நடக்கிறது. "உன் நாராயணன் எங்கே இருக்கிறான்? என்று இரணியன் கேட்க, பெருமாளுக்கு கை, கால் உதறி விடுகிறது. உடனே உலகிலுள்ள எல்லா ஜீவன்களுக்குள்ளும் அவன் சென்று விட்டான். ஒரு அணுவைக் கூட அவன் பாக்கி வைக்கவில்லை. பிரகலாதன் என்ன பதில் சொன்னாலும் அதற்குள் இருந்து வெளிப்பட வேண்டுமே என்ற பயத்தில் அவன் இருந்தான். அவன் "தூண் என்று சொல்லவே, அதற்குள்ளும் மறைந்திருந்த பகவான், நரசிம்மமாய் வெளிப்பட்டார். பக்தனுக்கு அவர் செய்த சேவையைப் பார்த்தீர்களா! தன்னிடம் பக்தி செலுத்திய பாண்டவர்களுக்காக அமாவாசை நேரத்தையே மாற்றிய தயாள குணம் படைத்தவரல்லவா! இவற்றையெல்லாம் படித்தாலே நாம் அவனை அடைந்து விடலாம் என்பது இப்பாடலின் உட்கருத்து.

மழைக்காலமாகிய ஆவணி மாதத்தில் ரோகிணி நட்சத்திரத்தில் கம்சனுடைய சிறைச்சாலையில் தேவகிக்கு மகனாகப் பிறந்து, அந்த இரவில் ஒருவருக்கும் தெரியாமல் வசுதேவரால் எடுத்துச் செல்லப்பட்டு ஸ்ரீநந்தகோபரின் வீட்டில், யசோதைக்கு மகனாய் வளர்ந்தாய். உனக்குத் தாய், தகப்பனார் என்று ஒருவரும் இல்லாதபோதும், அவதாரத்துக்கு தேவகியை தாயாகவும், வசுதேவரை தகப்பனாகவும் கொண்டாய். கம்சனுக்குத் தெரியாமல் இவை நடந்தாலும், உன்னுடைய பிறப்பை அவனால் பொறுக்க முடியவில்லை. உனக்கு தீங்கு செய்ய நினைத்தான். பல அசுரர்களை ஏவினான். ஆனால் அவனது எண்ணம் நிறைவேறவில்லை. அவனுடைய வயிற்றில் எப்போதும் நெருப்பாக இருந்தாய். எங்கள் மீது அன்பு கொண்ட பெருமானே! நீ அந்தப் பறையைக் கொடுத்தால் வருத்தம் தீர்ந்து மகிழ்வோம் என்கிறார்கள்.

 இந்தப் பாசுரம் "திருக்கண்ணபுரம்' என்ற திவ்ய தேசத்தைக் குறிக்கிறது.


பாசுரம் 26 முதல் 30 வரை




பாசுரம் 26

மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.

பொருள்:

பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும் மார்கழி நோன் பிற்கு, உல கத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும், உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.

விளக்கம்:

  பாஞ்சஜன்யம் என்னும் சங்கை திருமால் ஏந்தியிருக்கிறார். இந்த சங்கின் கதையைக் கேளுங்கள். பஞ்சசன் என்ற அசுரன் சாந்தீபனி என்ற முனிவரின் மகனைக் கொன்று விட்டு, கடலில் போய் மறைந்து கொண்டான். கிருஷ்ணர் அவரிடம் மாணவராகச் சேர்ந்தார். குருதட்சணையாக தன் மகனைக் கொன்ற அசுரனை பழிவாங்க வேண்டும் என சாந்தீபனி முனிவர் உத்தரவிட்டார். கிருஷ்ணரும் பஞ்சசனைக் கொன்று அவனைச் சங்காக மாற்றி தனது கையில் வைத்துக் கொண்டார். அசுரசங்கு என்பதால் தான் குருக்ஷத்திரக்களத்தில் அதை ஊதும்போதெல்லாம் அதன் பேரொலி கேட்டு எதிரிப்படைகள் நடுங்கின.
மாலே! மணிவண்ணா! நாங்கள் மார்கழி நீராட்டம் என்ற நோன்பை அனுஷ்டிக்கிறோம். இது சாஸ்திரங்களில் சொல்லப்படும் அனுஷ்டானமா என்று கேட்காதே, இது பெரியோர்கள் செய்துவரும் ஒரு செயல். பெரியோர்கள் செய்வதை நாமும் செய்ய வேண்டும் என்று நீ கீதையில் சொன்னாய். ஆகையால் நாங்களும் செய்கிறோம். இதற்கு வேண்டிய சில பொருள்களை உன்னிடம் வேண்டுகிறோம். திருவாய்ப்பாடி முழுவதும் நடுங்கி உயர்விக்கும்படி உன் கையில் பாலின் நிறத்தைப்போல் இருக்கும் பாஞ்சசன்னியத்தைப் போன்ற சங்குகள், எல்லா இடங்களிலும் கேட்கும்படியாக ஓசை ஏற்படுத்தும் மிகப்பெரிய பறை, உனக்கு பல்லாண்டு பாடுகிறவர்கள் இருப்பதுபோல், எங்கள் கோஷ்டிக்கும் பல்லாண்டு பாடுவோர், அழகிய விளக்கு, ஒரு கொடி, மேலே பனிச்சாரல் விழாதபடி ஒரு மேற்கட்டு ஆகியவையும், இவற்றைப் போன்று பல பொருள்களும் எங்களுக்குக் கொடுத்து உதவ வேண்டும். பிரளய காலத்தில் எல்லா உலகங்களையும் வயிற்றில் அடக்கிக்கொண்டு ஓர் ஆலந்தளிர் மேல் குழந்தையாகப் படுத்துக்கொண்டு காப்பாற்றினாயே! உன்னால் முடியாதது ஒன்றுமில்லை என்கிறார்கள்.

இந்தப் பாசுரம் "ஸ்ரீவில்லிபுத்தூர்' திவ்ய தேசத்தைக் குறிப்பிடுகிறது.

பாசுரம்  27

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:

எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது. கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்.

விளக்கம்:

  "கூடாரை வெல்லும் என்ற சொற்றொடரில் இருந்து "கூடாரவல்லி என்ற வார்த்தை பிறந்தது. இப்போது பெருமாள் கோயில்களிலும், வைணவர்களின் வீடுகளிலும் கூடாரவல்லி விழா கொண்டாடப்படும். இன்று அக்கார அடிசில் எனப்படும் உணவு பிரசித்தம். சாப்பாட்டின் மீது நெய் மிதக்கும். சர்க்கரைப் பொங்கல் போன்ற இந்த உணவின் சுவை அலாதியானது. விரதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் ஆகியவற்றைத் துறந்த ஆயர்குலப் பெண்கள், இப்போது கண்ணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் இனிப்பான இந்த உணவை சாப்பிடுகிறார்கள். பால்சோறு என்பது பாற்கடலையும் குறிக்கும். ""கண்ணா! உன் தரிசனம் கிடைத்து விட்டது. நாங்கள் நீ பள்ளிகொள்ளும் பாற்கடலில் இருப்பது போல் உணர்கிறோம். இதுவே நித்யசுகம். இந்த சுகத்தை எங்களுக்கு நிரந்தரமாகக் கொடு, என வேண்டுகிறார்கள்.

இந்தப் பாசுரம் திருவேங்கடத்தை உணர்த்துகிறது.


பாசுரம் 28

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

பொருள்:

  குறையே இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள். எங்களுக்கு அறிவென்பதே இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும். உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம் உறுதியென்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம் என்பதே அது. உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது. விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள்! அதுபோல் கண்ணா! மணிவண்ணா! கருணாகரா! என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் இறைவனே! எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக.

விளக்கம்:

  "குறையொன்றுமில்லாத கோவிந்தா என்ற வார்த்தையைப் படிக்கும் போது, கண்ணனுக்கு ஏதோ குறை இருந்தது போலவும், இப்போது தீர்ந்து விட் டது போலவும் தோற்ற மளிக்கிறது. அவனுக்கு என்ன குறை? ராமாவதாரத்தில், ராமபட்டாபிஷேகம் நடந்த போது, இந்திர லோகத்தில் எட்டு திசை காவலர்கள் பட்டாபிஷேகம் நடத்தியது போல, அயோத்தியில் வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஷ்யபர், காத்யாயனர், ஸுயஜ் ஞர், கவுதமர், விஜயர் என்ற எட்டு முனிவர்கள் என்று வால்மீகி ஏதோ ஆர்வத்தில் எழுதிவிட் டார். ராமனுக்கு இது ஒரு குறை. இந்திரனை ஜெயித்து இந்திரஜித் என்று பட்டம் பெற்றவனை நாம் நம் தம்பியை வைத்து ஜெயித்தோம். அப்படிப் பட்ட கீழான இந்திரனுடன் நம்மை வால்மீகி ஒப்பிட்டு விட்டாரே! அது மட்டுமல்ல, அவன் கவுதமரின் மனைவி அகலிகையுடன் தப்பாக நடந்தவனாயிற்றே! அவனோடு நம்மை ஒப்பிடலாமா? என்ற குறை இருந்ததாம். கிருஷ்ணாவதாரத்தில், அந்த இந்திரன் தனக்கு செய்த பூஜையை ஆயர்கள் நிறுத்தியதால் சீற்றமடைந்து மழை பெய்யச் செய்தான். கோவர்த்தனகிரியை தூக்கி மக்களைக் காத்த கண்ணனின் காலில் அந்த இந்திரன் விழுந்தான். ராமாவதாரத்தில் ஏற்பட்ட குறை கிருஷ்ணாவதாரத்தில் நீங்கிவிட்டதால், ஆயர்குலப்பெண்கள் அவரை இப்படி வர்ணித்தார்கள்.

இந்தப் பாசுரம் விருந்தாவனம் (பிருந்தாரண்யம்) என்ற திவ்ய தேசத்தைக் குறிக்கிறது


பாசுரம்  29

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

பொருள்:

  கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை  பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே! நீ தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. என்றும், ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு.

விளக்கம்:

  விடியற்காலையில் எல்லோரும் வந்து, உன்னை சேவித்து, உன் திருவடித் தாமரைகளை போற்றிக்கொண்டு எங்களுக்கு வேண்டியதைக் கூறுகிறோம். நீ அதற்கு செவிசாய்க்க வேண்டும். மாடு கன்றுகளை மேய்த்து, அதில் வரும் வருவாயைக் கொண்டு உண்டு பிழைக்கிறோம். அப்படிவாழும் எங்கள் குலத்தைப் பார்த்தும், இந்தக் குலத்தில் வந்து பிறந்தாய். ஆதலால் நாங்கள் செய்யும் குற்றேவல்களை நீ ஏற்றுக்கொள்ளாமல் போகக்கூடாது. நாங்கள் பறையைக் கேட்டோம் என்பதற்காக, பெரிதும் ஒலிக்கின்ற பறையைக் கொண்டுவந்து கொடுக்கின்றார்கள். அறிவென்றுமில்லாத எங்கள் குலத்தில் பிறந்ததால், நாங்கள் கேட்கும் பறை என்ற சொல் உனக்குத் தெரியாமல் போயிற்றா? "கோவிந்தா' எத்தனை பிறவி எடுத்தாலும், ஏழேழ் பிறவியிலும் உனக்கு உற்றார் உறவினராகவே ஆகவேண்டும். உனக்கே கைங்கர்யம் செய்ய வேண்டும். ஏதேனும் ஒரு நேரத்தில் எங்களுடைய மனம் வேறுவழியில் சென்றால், செல்லாமல் தடுத்து திருப்பி உன் கைங்கர்யத்திலே ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். கோபியர்கள் பல பாடல்களில் கேட்டுக்கொள்ள வந்த "பறை' என்ற சொல்லின் பொருளை, அந்தரங்கக் கைங்கர்யம் என்று வெளியிட்டார்கள். 
 இந்தப் பாசுரம் "துவராபதி' என்கிற "துவாரகை' திவ்ய தேசத்தைக் குறிப்பிடுகிறது

பாசுரம்  30

வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

பொருள்:

  அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள். இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களை யுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.

விளக்கம்:

  இந்தத் திருப்பாவையைச் சொன்னால் என்ன பயன் ஏற்படுகிறது என்பதைக் கூறுகிறது இந்தப் பாசுரம். கடலுக்குள் இருக்கும் அமுதத்தை எடுத்து, பகவான் தேவர்களுக்குக் கொடுத்தான். இப்படிப்பட்ட மாதவனை சந்திரன் போன்ற திருமுகத்தைக் கொண்டவர்களும், சிறந்த ஆபரணங்களை அணிந்த கோபியர்கள் அடைந்து, அவனைப் போற்றிப் புகழ்ந்து பறை என்ற ஒலிக்கருவியையும் கைங்கர்யத்தையும் கேட்டுப் பெற்றார்கள். அதை எப்படிப் பெற்றார்கள் என்பதை ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த பட்டர்பிரான் என்ற பெரியாழ்வாரின் திருமகளான ஆண்டாள் அருளிச்செய்த சங்கத் தமிழ் மாலையாகிய திருப்பாவை முப்பது பாசுரத்தையும், ஒரு பாசுரத்தையும் விடாமல் பக்தியோடு கூறுகிறார்கள். சதுர்ப்புஜனாயும் தாமரைக் கண்ணனாயும் இருக்கும் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் என்று இப்பாசுரம் கூறுகிறது.




Monday 22 April 2013

ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஸ்தோத்திரம் .MP3







          
               ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஸ்தோத்திரம் .MP3




கமலாகுச சூசுக குங்குமதோ
நியதாருணி தாதுல நீலதனோ
கமலாயத லோசன லோகபதே
விஜயீபவ வேங்கட சைலபதே

ஸசதுர்முக ஷண்முக பஞ்ச முக
ப்ரமுகாகில தைவ தமௌளிமனே
சரணாகத வத்ஸல ஸாரநிதே
பரிபாலய மாம் வ்ருஷசைலபதே

அதிவேலதயா தவ துர்விஷஹை:
அனுவேல க்ருதை ரபராதசதை:
பரிதம் த்வரிதம் வ்ருஷசைலபதே
பரயா க்ருபயா பரிபாஹி ஹரே

அதிவேங்கட சைல முதாரமதே
ஜனதாபி மதாதிக தானரதாத்
பரதேவதயா கதிதான் நிகமை:
கமலா தயிதான்ன பரம் கலயே

கலவேணு ரவா சதகோபவதூ
சதகோடி வ்ருதாத்ஸ்மர கோடிஸமøத்
ப்ரதிவல்ல விகாபி மதாத் ஸுகதாத்
வஸுதேவஸுதான் ந பரம் கலயே

அபிராம குணாகர தாசரதே
ஜகதேக தனுர்த்தர தீரமதே
ரகுநாயக ராம ரமேச விபோ
வரதோ பவதேவ தயாஜவதே

அதனீ தனயா கமனீயகரம்
ரஜனீகரசாரு முகாம்புருஹம்
ரஜனீ சரராஜ தமோமிஹிரம்
மஹனீய மஹம் ரகுராம மயே

ஸூமுகம் ஸூஹ்ருதம் ஸுலபம் ஸுகதம்
ஸ்வனுஜஞ்ச ஸுகாய மமோக சரம்
அபஹாய ரகூத்வஹ மன்யமஹம்
ந கதஞ்சன கஞ்சன ஜாது பஜே

வினா வேங்கடேசம் ந நாதோ ந நாதத்
ஸதா வேங்கடேசம் ஸ்மராமி, ஸ்மராமி !
ஹரே வேங்கடேச ப்ரஸீத ப்ரஸீத
ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச !!

அஹம் தூரதஸ்தே பதாம் போஜ யுக்ம
ப்ரணாமேச்சயாகத்ய ஸேவாம் கரோமி !
ஸக்ருத் ஸேவாய நித்ய ஸேவாபலம் த்வம்
ப்ரயச்ச ப்ரயச்ச ப்ரபோ வேங்கடேச !!

அக்ஞானினா மயா தோஷா ந
சேக்ஷõன் விஹிதான் ஹரே !
க்ஷமஸ்வ த்வம் க்ஷமஸ்வ த்வம்
சேக்ஷசைல சிகாமணே !!




ஸ்ரீ  வெங்கடேஸ்வரர் ஸ்தோத்திரம் .MP3

Thursday 18 April 2013

தியானம் செய்ய வழி என்ன ? தென்கச்சி கோ .சுவாமிநாதன்


ஒரு சின்ன ஊர் . அங்கே ஒரு பள்ளிக்கூடம் . அதிகமாக யாரும் அங்கே படிக்க வருவதில்லை .

பெற்றோர்களுக்கும் அக்கறை இல்லை .

எதோ பள்ளிக்கூடம் என ஒன்று இருப்பதால் ,தங்கள் பிள்ளைகளை அங்கே அனுப்பி வைத்தார்கள் அவ்வளவுதான் .

வகுப்புக்கு வந்த ஒரு மாணவன் மிகவும் மந்தமாக உக்கார்ந்திருந்தான் .

ஆசிரியர் அவனை கவனித்தார் .

" என்னப்பா ...   இப்படி உக்கார்ந்திருக்கே ... படிப்பில் கவனமில்லையா ...?

" ஐயா ... என் கவனமெல்லாம் எங்க வீட்டுலேயே இருக்கு !"

"அப்படி என்ன உங்க வீட்டுல இருக்கு ?"

" ஒரு பசுமாடு இருக்கு ! "

என்னப்பா சொல்றே

ஐயா .. நேத்து எங்க அப்பா புதுசா ஒரு பசுமாடு வாங்கிட்டு வந்தார் , அதை எங்க வீட்டு  வாசல்ல கட்டி  போட்டிருக்கார் .

என் நினைவெல்லாம் பசுமாடு மேலேயே இருக்கு

ஆசிரியர் கோபமடைந்தார் , யோசித்தார் ,

தம்பி ! ஒண்ணு செய்

" நான் உனக்கு ஒரு வாரம் லீவு தர்றேன்  .. நீ என்ன பண்ற ... நம்ம ஊர் எல்லையில  ஒரு மலை இருக்கே .. அங்க ஒரு குகை இருக்கு ... அதுல போய்  உக்கார்ந்துக்க ! ஒரு வாரம் பூரா மாட்டை பத்தியே நினை ... பிறகு வா ...!"

" சரி .. சார் ...! என்று சொல்லிவிட்டு அவன் புறப்பட்டான் .

ஆசிரியர் நினைத்து கொண்டார்

" ஆசை தீரும் வரையில் அவன் மாட்டை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பான் . பிறகு கொஞ்ச நேரத்திலேயே மறந்து விடுவான் "

ஒரு வாரம் கழிந்தது .

ஆசிரியர் வகுப்பறையில் நுழைந்தார் .

அந்த மாணவன் வெளியே நின்று கொண்டு இருந்தான் .

அவர் அவனிடம்

" என்னப்பா!  மாட்டை பத்தி யோசித்து முடிச்சிட்டியா ? இப்போ மாட்டை பத்தின நினைவில்லையே ?

அவன் இல்லை என  தலை ஆட்டினான் .

அப்பறம் ஏன் இன்னும் வெளியே நிக்கிறாய் ?

அவன் சொன்னான் " சார் நான் உள்ளே வரலாம்னு தான் நினைக்கிறேன் , ஆனா என் தலைல இருக்கற  கொம்பு உள்ள வர முடியாதபடி மேலே இடிச்சிகிட்டு நிக்குது ".

ஆசிரியர் திகைத்து நின்றார் . மாட்டை பற்றியே சிந்தித்து சிந்தித்து , இவன் தான் அதுவாக மாறிவிட்டதாக உணர்கின்றான் .

ஜென் கதையில தியானம் எப்படி செய்யணும் என்பதற்க்காக  தியானத்தை பற்றி இப்படி ஒரு கதையை சொல்வதுண்டு .

நாம யாரை  பத்தி அடிக்கடி  நினைத்து கொண்டு இருக்கிறோமோ , பேசி கொண்டு இருக்கிறோமோ  அவங்களோட குணாதிசயம் நமக்கு வந்துரும் , நாம அவங்களா மாறுகிறோம் .


விவேகானந்தர் கூட சொல்லுவர்

" நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய் " என்று .
     
                                                        - தென்கச்சி கோ .சுவாமிநாதன்
------------------------------------------------------------------------------------------



( ஸ்ரீ சாயி சத்சரித்ரம் -- அத்தியாயம் 18 -- page no 146 -- திருமதி ராதாபாய் தேச்முக் )

ஸ்ரீ சாயி சத்சரித்ரம்  MP 3   chapter_18.mp3  26.9 MB14:51 நிமிஷத்துல இருந்து 29:20 நிமிஷம் வரைக்கும் )

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinKlD1stAwwNtGfcSl79Aa818WSv5pnWcPI9rdsHAMmRUBEtZYSxyW7PwCE9kes8IZmsDnMSQdIhgcGW5MmOW6ajK9P4D3HQgCAk_k3E1oqH4-itAq3aK7BC-9rxwDk__aCoOmpxwbVdGf/s1600/golden-throne-sai-baba.jpg


ஸ்ரீ சாய் சத்ச்சரித்ரம் - அத்தியாயம் 18 - இல் 

பாபாவே தனக்கு ஏற்பட்ட தியான அனுபவத்தையும் , தான் கற்ற தியான முறையை பற்றியும் கூறுகிறார் , மேலும் எவ்வாறு தியானம் செய்ய வேண்டும் எனவும் இந்த அத்தியாயத்தின் முடிவில் அவரே விளக்குகிறார் .

அந்த முறையில் பாபாவை தியானிப்பவர்கள் விரைவிலே பாபாவை அடைய முடியும். 
 
மனம் பாபாவைப் பற்றியே சிந்திக்கட்டும் 

மனத்தினுடைய தொழில் எதையாவது  சிந்தனை செய்வது, ஆலோசிப்பதுஅதைச் செய்யாமல் மனதால் ஒரு கணமும் சும்மா இருக்க முடியாது . 

புலனின்பங்களை அதற்குக் கொடுத்தால் புலனின்பங்களைப் பற்றியே சிந்திக்கும்;

 பாபாவை அதற்குப் பொருளாகக் கொடுத்தால் மனம் பாபாவைப் பற்றியே சிந்திக்கும். அப்போது பாபா நமக்குள்ளாக தோன்றி விடுவார் .

ஷிர்டி சாயிபாபா கோவில் 

ஷீரடி  சாய் பாபா  சமாதி மந்திர் தரிசனம் ஷீரடியில் இருந்து நேரடி ஒளிபரப்பு 

LIVE TV காலை  4 மணி முதல் இரவு 11.15 வரை நேரடி ஒளிபரப்பு 

https://www.shrisaibabasansthan.org/darshanflash_1.html
Or
http://www.saibabaofindia.com/shirdi_sai_baba_live_online_samadhi_mandir_darshan.htm
( To view the live darshan use "IE" Internet explorer browser or Apple's Safari browser ) 



................ ஓம் சாய் ராம் ..................