SHIRDI LIVE DARSHAN

Wednesday 1 February 2012

பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்


பித்ரு தோஷம் நீக்கும் வல்லங்குளம் மாரியம்மன்



நாகப்பட்டினம் – திருவாரூர் பாதையில் நாகையில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வல்லங்குளம் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் (கீவளூர் கடைத்தெரு பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவு). ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவில் இந்த ஊர் மக்கள் பலரும் கோவிலில் தங்குகின்றனர். மறுநாள் மாரியம்மனை தரிசித்து, வணங்கினால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை!
இங்கே மாரியம்மனை மனதார வேண்டி, உளுந்தாலான பலகாரங்களை அம்மனுக்குப் படைத்து, பக்தர்களுக்கு விநியோகிக்கின்றனர். இதனால் அம்மனின் அருளோடு நம் முன்னோர்களின் ஆசியும் கிடைக்குமாம்.
இதுவரை, திதி – தர்ப்பணம் செய்யாதவர்களும், பிதுர் தோஷத்துக்கு ஆளானவர்களும் இங்கு வந்து, ‘தோசை’ முதலான உளுந்தாலான உணவைப் படைத்து, அம்மனை வழிபட்டு பலனடையலாம் என்கிறார்கள்.
இப்படி, இந்தக் கோவிலின் பரிகார வழிபாடுகள் மட்டுமல்ல… மாரியம்மன் இங்கு குடிகொண்ட கதையும் சுவாரஸ்யமானதுதான்.
திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை பாக்கியம் வாய்க்கவில்லை. இதனால் வருந்திய மகாராஜா யாகங்கள் நிகழ்த்தி வழிபட்டார். இதன் பலனால் அரசி கருவுற்றாள்.
ஆனால் விதி வேறுவிதமாக விளையாடியது. ‘’இந்தக் குழந்தை பிறந்தால், நாட்டுக்கு கேடு விளையும்’’ என்று ஜோதிடர் எச்சரிக்க, கலங்கிப் போன மகாராஜா, செய்வதறியாது குழம்பினார். இறுதியில் நாட்டு மக்களின் நலனே முக்கியம் என்று கருதி மனைவியையும் அவள் கருவில் வளரும் குழந்தையையும் அழிக்கத் திட்டமிட்டார்.
ஒரு நாள் மனைவி அசந்திருந்த வேளையில் அவளை வெட்டுவதற்கு வாளை ஓங்கினார் மகாராஜா. அப்போது, ஆக்ரோஷமாகத் தோன்றினாள் பேச்சாயி அம்மன்.
மகாராஜாவின் கையில் இருந்த வாளைப் பிடுங்கி எறிந்தவள், அவரைத் தன் காலில் போட்டு மிதித்தாள். அரசியைத் தன் மடியில் கிடத்தி அவளுக்குப் பிரசவம் பார்த்துக் குழந்தையையும், தாயையும் காப்பாற்றினாள். தனது தவறை உணர்ந்த மகாராஜா, பேச்சாயி அம்மனிடம் பாவ பரிகாரம் குறித்து வேண்டினார். “கீவளூரில் ஒரு குளம் வெட்டி பாவத்துக்குப் பரிகாரம் தேடிக் கொள்!’’ என்று கட்டளையிட்டாள் அம்மன். அதன்படியே செய்தார் மகாராஜா. அவரால் உருவான குளம் ‘வல்லங்குளம்’ எனப்பட்டது. (திருவண்ணாமலை தல புராணத்தில் வரும் வல்லாள மகாராஜா கதைக்கும் இதற்கும் வேறுபாடு உண்டு என்றும் சொல்கிறார்கள்).
காலம் உருண்டோடியது. ஏறத்தாழ 500-700 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் குளத்திலிருந்து அம்மன் சிலை ஒன்றை மக்கள் கண்டெடுத்தனர். பிறகு அவர்கள் ஒரு கோவில் கட்டி அம்மனை பிரதிஷ்டை செய்தனர். வல்லங்குளத்தில் வெளிப்பட்டவள் ஆதலால் இவளுக்கு ஸ்ரீ வல்லங்குளத்து மாரியம்மன் என்று பெயர்.
பிரதான சாலையின் இடப்புறம் திருக்குளம்; வலப்புறம் திருக்கோவில். இப்போது சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. உள்ளே நுழைந்தால், வலப்பக்கம் ஸ்ரீ பேச்சாயி அம்மன். பின்புறம் ஸ்ரீ சுப்ரமணியர் சந்நதி.
நுழைவாயிலில் இருந்து அம்மனை நோக்கி காவலாளியின் தோற்றத்தில் ஐயனார் காட்சி தருகிறார். உள்ளே கிழக்கு நோக்கி கருணையே வடிவாகக் காட்சி தருகிறாள் வல்லங்குளத்து மாரியம்மன். சுற்றுவட்டார ஊர்களில் எந்த சுபகாரியமாக இருந்தாலும் இந்த மாரியம்மனுக்குத்தான் முதல் தகவல் தெரிவிக்கின்றனர். இந்தப் பகுதியில், வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் கீவளூர் அஞ்சுவட்டத்தம்மன் ஆலய திருவிழாவின் போதும், முதலில் வீதி உலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவது ஸ்ரீ வல்லங்குளத்து மாரியம்மன் தான்!

No comments:

Post a Comment