Sunday, 29 January 2012

நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி?


மறதிக்கு நல்ல மருந்து மாஸ்ரரின் பிரம்பா? நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி?

ஞாபக சக்தி எனப்படுவது. மனிதன் அனுபவித்த, கற்றறிந்த விஷயங்களை மறுபடியும் நினைவிற்குக் கொண்டு வரும் செயல்பாடாகும். நல்ல நினைவாற்றல் பெற்றுள்ள மனிதன் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்த இயலும்.
பொதுவாக நாம் எல்லோரும் நினைவாற்றல் மனதில்(நெஞ்சில்) பதிந்துள்ளதாக எண்ணுகின்றோம். அதனால்தான் ஏதாவது கூற வரும்போது மனதில் பட்டதைச் சொக்கிறேன் என குறிப்பிடுவதும், மூளை கோளாறு உள்ளவர்களை மனநோயாளி என குறிப்பிடுவதும் வழக்கத்தில் உள்ளன. மனம், மனச்சாட்சி, நெஞ்சு என முன்வைப்பதெல்லாம் மூளையயே குறிக்கின்றன.
உலகிலேயே மிக மிக நுட்பமானதும், அதிசயமானதும் - மனித மூளையின் அமைப்பும் அதன் செயல்பாடும்தான். அதனுள் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லையும் ஒரு மண்துகள் அளவுக்குப் பெரிசு பண்ணினால் ஒரு மண்டை ஓட்டுக்குள் இருப்பது ஒரு லாரியை நிரம்பும்! இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்புச் செல்கள் வேறு. இவற்றுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம்தான் நம் சிந்தனை! மனிதன் உயிர் வாழும்வரை இந்தச் செல்களிடையே மின் துடிப்புகள் திரிகின்றன.
ஞாபக மறதி” எனும் பலவீனம், இல்லாத மனிதன் உலகில் யாரும் இருக்க முடியாது. குழந்தைகள் முதல் தள்ளாடும் முதியோர் வரை) மறதி இல்லாத மனிதர் இல்லை. ஆனால் அது மனிதனுக்கு மனிதன் மறதியின் அளவுகளும், தன்மைகளும், பாதிப்புகளும் மாறுபடும். 

மறதிகள் பலவிதம். சிலர் பழகிய மனிதர்களின் பெயர்கள் அல்லது முகங்கள் அடிக்கடி மறந்து விடுகின்றனர். சிலர் பொருட்களின் பெயர்களை மறந்து விடுகின்றனர். சிலர் தம் உடைமைகளை, பொருட்களை எங்கே வைத்தோம் என்பதை மறந்து விடுகின்றனர். சிலர் செய்ய வேண்டிய முக்கியக் கடமைகளைக் கூட மறந்து விடுகின்றனர். சிலர் படித்த நூல்களை, நூலிலுள்ள முக்கிய கருத்துக்களை மறந்து விடு கின்றனர். சிலர் கடந்த கால விஷயங்களை மறந்து விடுகின்றனர். சிலர் நிகழ்காலத்தில் சிறிது நேரத்திற்கு முன் நடந்தவைகளைக் கூட மறந்து விடுகின்றனர்.


நம்முடைய சிந்தனை, நினைவுகள், நாம் நினைத்துச் செயற்படக் கூடிய அனைத்திற்கும் பெருமூளையே காரணமாக இருந்து செயல்படுகிறது.

மனித மூளையின் செயல்களில் தாக்கங்களை உண்டு பண்ணும் காரணிகளை நாம் இனங்கண்டு கொண்டால் ஞாபக மறதி, சிந்திக்கும் திறன் குன்றிய நிலை, சோம்பேறித்தனம் என்பனவற்றை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவற்றின் முக்கிய காரணிகளாக கருதப்படுபவை தகுந்த போசாக்கின்மை, மூளைநரம்புகளில் ஏற்படும் சிதைவு, உற்சாகமின்மை. உடல் அப்பியாசமின்மை என்பனவாகும். இவற்றிற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றிற்கு ஏற்ற தகுந்த பரிகாரம் செய்வதன் மூலம் ஞாபக சக்தியையும், சிந்திக்கும் திறனையும் வளர்த்துக் கொள்ள முடியும்.

இவற்றுடன் ஆர்வமின்மை, முயற்சியின்மை, தாழ்வு மனப்பான்மை, எதிர்மறை எண்ணம், பயம், அதிர்ச்சி, மனச்சோர்வு, துக்கம், வெறுப்பு போன்ற உணர்ச்சி மற்றும் மனபாதிப்புகள், மன ஒருமையின்மை, கவனக்குறைவு, தப்பிக்கும் மனோபாவம் (Escapist Tendency), கடந்த காலச் சிந்தனைகளில் அல்லது எதிர்காலக் கனவுகளில் மூழ்குதல்.
புகை, மது, போதைப் பழக்கங்கள், உடல்நலக் குறைபாடுகள், உடல்நோய்கள் (குறிப்பாக தொற்றாத வகை நோய்கள் - வலிப்பு, ரத்தசோகை, உயர் (அ) குறை தைராய்டு சுரப்பு, மாதவிடாய் நிற்கும் கால ஹார்மோன் பிரச்சனைகள்) என்பன மனிதனின் சிந்திக்கும் திறனை அதிகம் பாதிக்கின்றன

போசாகின்மையை நிவர்த்தி செய்ய
மாவுச்சத்து வைட்டமின்கள் அமினோ அமிலங்கள் தாது உப்புக்கள் முதலியவையே மூளையை போஷிக்கும் ஊட்டத்தை கொண்டுள்ளவாக ஆய்வுகள் நிர்ணயிக்கின்றன.
மனித மூளையில் 100 பில்லியன் நரம்பணுக்கள் உள்ளன. இவை உணவில் கிடைக்கும் வைட்டமின்களைப் பொறுத்து இரசாயன மாற்றங்கள் ஏற்படுத்தியபடி இருக்கின்றன.

ஒரு நாளைக்குப் பத்து இலட்சம் தடவைகளுக்கு மேல் நமது சிந்தனைகளை வகைப்படுத்தும் வேலையை மூளை செய்து கொண்டிருக்கிறது. தினசரி நம் உணவில் கிடைக்கும் (எரிக்கும்) மொத்தக் கலோரியில் முப்பது சதவிகிதத்தை மூளைதான் பயன்படுத்திக் கொள்கிறது. 

எனவே வயது வித்தியாசம் இன்றி மூளை நன்கு செயல்பட வேண்டும் எனில் மாவுச்சத்துப் பொருட்களில் உள்ள குளுகோஸில் இருந்துதான் தேவையான சக்தி தொடர்ந்து கிடைக்க வேண்டும். இந்தச் சத்துணவில் குறைவு ஏற்படும் போது ஞாபக சக்தியிலும் சிக்கல் வந்துவிடுகிறது.

இது மட்டுமல்ல இரத்த ஓட்டம் தேவையான ஆக்ஸிஜனை மூளைக்கு விநியோகித்து புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதும் முக்கியமானது. தேவையான சத்துணவு கிடைக்காத போதும், மூளைக்கு ஆக்ஸிஜன் கிடைப்பது குறைந்த போதும் ஞாபகசக்தியில் குறைபாடு ஏற்படுகிறது. 

இதைத் தடுக்க சிறந்த உணவு முறையையே மருந்தைப்போல் பயன்படுத்தினால் புத்திக்கூர்மையும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

ஞாபக சக்தி குறைவாக இருப்பவர்கள் பைரிடாக்ஸின் என்ற வைட்டமின் அதிகம் உள்ள பாதாம் பருப்பு சோயா பீன்ஸ், வல்லாரை, நாவற்பழம் முதலியவற்றை நன்கு உணவில் சேர்க்க வேண்டும். இது நம் உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய உப்பு வகைகளை சமன் செய்து உடலை கட்டுப்பாட்டில் வைக்கிறது. இத்துடன் பி12 வைட்டமினை உடல் ஏற்றுக் கொள்ளவும் உதவுகிறது.

தேவையான அளவு ஆழ்ந்து சிந்தித்துச் செயல்பட பாலிக் அமிலம் அதிகம் உள்ள தண்டுக்கீரை கொண்டைக்கடலை முதலியவற்றை சேர்த்துக் கொள்வது அவசியம்.
பால், தயிர் மற்றும் அசைவ உணவு வகைகளால் பி12 கிடைப்பதால் சோம்பேறித்தனம் குறையும். 

அரிசி, கோதுமை, கேழ்வரகு மேற்கண்ட உணவு வகைகளுடன் இரும்புச் சத்து நிறைந்துள்ள பேரிச்சம்பழம் பட்டாணி முதலியவற்றையும் தினமும் உணவில் சேர்த்து வந்தால் நரம்புமண்டலம் அமைதியாகி மூளை சுறுசுறுப்பாக இருக்கும். இது சிந்தித்து செயல்படுவதில் அக்கறை காட்டத் தூண்டிக் கொண்டே இருக்கும். 

இந்த உண்மைகளை போஸ்டனின் டப்டஸ் பல்கலைக் கழகமும் வேல்ஸின் ஸ்வான்ஸீ பல்கலைக்கழகமும் பல ஆண்களையும், பெண்களையும் பரிசோதனை செய்து வெளிப்படுத்தி உள்ளன. எல்லா வயதுக்காரர்களும் கூர்மையாகச் சிந்திக்க அரிசி, பருப்பு மற்றும் பழவகைகளைத் தவிர்த்துவிடாமல் உணவில் சேருங்கள்.

ஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிய உணவுகள்
ஆரஞ்சு, கொய்யா, திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், முலாம்பழம், பேரீச்சம்பழம், காரட், அன்னாசி, காலிபிளவர் முட்டைக்கோஸ், பசலைக்கீரை, கொத்தமல்லி கீரை, முருங்கைக்கீரை, பச்சைப் பட்டாணி, பால், தயிர், ஈரல் போன்ற உணவு வகைகளில் உள்ள பீட்டா கரோட்டின் வைட்டமின் சி இரும்புச்சத்து முதலியன ஞாபக சக்தியை அதிகரிக்க வல்லவை.
சிந்தனையைத் தூண்ட சில வழிமுறைகள்
சாதாரணமாக விஞ்ஞானிகள் புலன் ஞாபக சக்தியை மூன்று பிரிவுகளாக பிரிக்கிறார்கள். 
1. நினைவுகள் ஒரு சில கணங்களுக்கு நிற்கும். 
2. புலன் ஞாபகம் (Sensory Memory). ஏறத்தாள அரை மணித்தியாலம் மட்டுமே நிற்கும் குறுகிய கால ஞாபகம் (Short Term Memory). 
3. நீண்ட காலமாக நிற்கும் நீண்ட கால ஞாபகம் (Long Term Memory) என மூன்றாகப் பிரிக்கிறார்கள். 

உண்மையில் இந்த மூன்று ஞாபகங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. மனித உடலில் சகல புலன்களில் இருந்தும் வருகின்ற நரம்பு கணத்தாக்கங்கள்  மில்லி செக்கனில் நினைவில் நிற்கும். அந்த நினைவில் சிறிது ஊன்றிக் கவனம் செலுத்தும் போது அவை ஏறத்தாள 30 செக்கன் வரை நிலைத்து நிற்கும். இந்த நேரத்திற்குள் மீண்டும் ஒருமுறை அது பற்றி நினைத்தால் அது நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும் ஞாபகத்திற்குள் சென்று பதியும்.        
`மனித மூளைக்கு மிக அபார திறமை இருக்கிறது' என அதனை ஆராய்ந்து அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளார்கள். இவர்கள் மனித மூளையில் இரண்டு "குயிண்டிலியன்" (Quintillion) அளவுக்கு சின்னசின்ன செய்திகளை பாதுகாப்பாக சேமித்து வைக்க முடியும் '' என்று ஆராய்ந்தும் சொல்லியிருக்கிறார்கள்.

அதாவது "ஒன்று" என்ற எண்ணிற்குபிறகு 18 பூஜ்யங்களை சேர்த்தால் எவ்வளவு மதிப்புவருமோ அதுதான் "குயிண்டிலியம்" என்பதன் மதிப்பாகும். அதாவது மனித மூளையின் சக்தி 40 விதமான மொழிகளை நினைவில் கொள்ளுகின்ற அளவுக்கு "அபாரசக்தி" கொண்டது.
 

இப்படி அதிக கொள்ளளவு கொண்ட மனித மூளையில் தேவையான அளவு தகவல்களைத் திரட்டி, சேமித்து பாதுகாப்பாக முறைப்படி வைக்காததுதான் இன்றைய இளையோர், முதியோரது குறைபாடாகும்.
 

ஓரு நூலகத்தில் பலவிதமான புத்தகங்கள் உள்ளன. ஆனால் அந்தப்புத்தகங்கள் ஒழுங்கான முறையில் அடுக்கி வைக்கப்படவில்லை. இதனால் நமக்குத் வேண்டிய புத்தகத்தை உடனே கண்டுபிடிக்க இயலாது. தேவையான புத்தகத்தை எளிதான முறையில்கண்டறிவதற்கு "புத்தகப்பட்டியல் அடங்கிய குறிப்பேடும் (Catalogue) அவசியம் தேவை"
 

இந்த நூலகம் போலவே நமது மூளையும் ஒரு "ஓழுங்கில்லாத நூலகம்" (Dis-Organised) ஆகும். தேவையான புத்தகங்களை எளிதில் கண்டுபிடிக்க உதவும் குறிப்பேடு போல மூளையில் குவிந்து கிடக்கும் தகவல்களையும் எளிதில் கண்டுபிடிக்க உதவும் குறிப்பேடு போல மூளையில் குவிந்து கிடக்கும் தகவல்களையும் எளிதில் நினைவில் கொள்ள நமது மூளைக்கு நன்கு பயிற்சி கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட செய்திகளை, குறிப்பிட்ட நேரத்தில் நினைவில் கொண்டுவரும் "நினைவாற்றல் கலையை"' வளர்த்துக் கொள்ள வேண்டும். 


நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளுவதற்கு பலவழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் "தொடர்பு ஏற்படுத்துதல் முறை" (ASSOCIATION) முறை ஆகும். பொதுவாக நமது மூளையில் சேமித்து வைத்திருக்கின்ற தகவல்களை புதிதான தகவல்களோடு தொடர்புப்படுத்திப் பார்க்கின்ற பொழுதுதான் நாம் கற்றபாடம் நினைவில் நிற்கின்றது. அறிவை பெருக்குவதற்கு "தொடர்புப்படுத்துதல்" மிகவும் உறுதுணையாக அமையும்.
 

சிறுகுழந்தையாக இருக்கின்ற பொழுது சில தகவல்களை நமக்குச் சொல்லியிருப்பார்கள். அவையெல்லாம் நம்மை அறியாமலேயே நம்முடைய மூளையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும். நேரம் வரும்பொழுது அந்த செய்திகள் நம்மை அறியாமையிலேயே ஒன்றுக்கொன்று தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும்.
 

உதாரணமாக பக்கத்து வீட்டில் நெருப்புப் பிடித்து விட்டது என்று வைத்துக்கொள்வோம். அங்கு சென்று அவர்களுக்கு உதவி செய்வதற்கு முன் நெருப்பு பற்றி நாம் அறிந்து வைத்திருந்த விடயங்கள் யாவும் எம்முன் வந்து நிற்கும்
 

எனவேதான் "ஒன்றுக்கொன்று தொடர்பு ஏற்படுத்தி ஒருதகவலைக் கவனமாக நினைவில் கொண்டால் அந்தத்தகவல் மனதில் நிலைத்து நிற்கும்" என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

உதாரணமாக நீங்கள் கீழ்க்கண்ட பத்து வார்த்தைகளை வரிசையாக நினைவில் வைக்க வேண்டும் என முடிவு செய்வதாக வைத்துக்கொள்வோம்.
 

1. மேஜை.
 
2. நண்பர்கள்.
3. வியாபாரம்
4. உரையாடல்
5. பழக்கவழக்கம்
6. விளையாட்டு
7. செய்தி அறிதல்
8. பாசம் கொள்ளுதல்
9. வெற்றி
10. படிப்பு

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளை வரிசையாக நினைத்துக்கொள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையே நீங்கள் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

உதாரணமாக ஒரு புதிய சூழலை மனதில் உருவாக்கிக் கொள்ளலாம். உங்கள் பலசரக்குக் கடை மேஜை அருகே உங்கள் நண்பர்கள் வந்து நின்று நீங்கள் வியாபாரம் செய்வதை கவனிக்கிறார்கள். நீங்கள் வாடிக்கையாளரிடம் உரையாடல் செய்வதைப் பார்க்கிறார்கள். உங்கள் பழக்கவழக்கம் ஒரு விளையாட்டைப் போல இனிமையாக இருக்கும் செய்தி அறிந்ததால் உங்கள் மீது பாசம் கொள்கின்றார்கள். உங்கள் வியாபார வெற்றி , உங்கள் சிறந்த படிப்பினால் தான் உருவானது என எண்ணுகிறார்கள்.
 

இப்படி தொடர்பை ஏற்படுத்திப் பார்த்தால் மேலேகுறிப்பிட்டுள்ள அத்தனை வார்த்தைகளும் வரிசையாக மனதில் தங்கிவிடும்.
 

நினைவாற்றலை வளர்க்க உதவும் இன்னொரு முறை ``காட்சிப் படுத்துதல்'' (Visualisaion) ஆகும். அதாவது மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களால் பெறப்பட்ட தகவல்களை அல்லது செய்திகளை காட்சியாக மனதில் உருவாக்கி நினைவில் நிறுத்திக் கொள்வதை இது குறிக்கும். காதல் நிகழ்வுகள், சண்டையில் பாவித்த சொற்கள், நிகழ்வுகள் இவை போன்றவை காட்சிகளாக பதியப் பெற்றுள்ளமையால் மனதில் இடம்பிடித்து விடுகின்றன. 


ஒரு தகவலை நினைவில் வைத்துக் கொள்வதற்கு  கற்பனையில்(Imagination), ஒரு காட்சியை உருவாக்கிக் கொள்வது அவசியமாகும். படைப்புத்திறன் (Creative power) மூலம் நினைவில் கொள்ளும் இந்த முறையை பல மாணவ மாணவிகள் தங்களின் ` நினைவாற்றலை' வளர்த்துக் கொள்ள பயன்படுத்துகிறார்கள்.
 

No comments:

Post a Comment